திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
3. முல்லை
அஞ்சனக் காயா மலரக் குருகிலை ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத் தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர் வந்தார் திகழ்நின் தோள். |
21 |
அஞ்சனம் போலக் காயாக்கள் மலர, குருகிலைகள் ஒண்டொடியுடைய நல்லார் முறுவல்போல அழகு கொள்ள, குளிர்ந்த கோடல்கள் துடுப்புப்போலப் பூங்குலையை யீனாநிற்ப, நங்காதலர் வந்தார்; நின்னுடைய தோள்கள் விளங்குவனவாக.
மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்(று) என்னாங்கொல் நன்னுதல் மாதராய்! ஈதோ நமர்வருவர் பல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்(து) இன்னிறம் கொண்ட(து)இக் கார். |
22 |
நின்னுடைய மெல்லிய முலைமேலேறிய பசலை நிறம் என்னாங் கொல்லோ? நன்னுதலையுடைய மாதராய்! நமர் ஈதோ வருவர்: பற்போன்றிருந்த நிறத்தையுடைய முல்லைகள் தாம் முகையரும்பப் பருவத்தைச் செய்து கண்டார்க்கினிய நிறத்தைக் கொண்டது இக்கார்.
சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிதோ வெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித் தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து இன்றையில் நாளை மிகும். |
23 |
நம்மைப் பிரிந்து போயினார் வருவர்; செறிதொடீஇ! இக்காலம் கார் காலமாயிருந்தது; வெஞ்சின வேந்தர் முரசுபோ விடித்து முழங்கித் தண்கடல் வெள்ளத்தைப் பருகி மேன்மேற் சிறந்து இன்றையின் நாளை மிகுங்காண்.
செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீர்இதோ வஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால் வெஞ்சினம் பொங்கி இடித்(து)உரறிக் கார்வானம் தண்பெயல் கான்ற புறவு. |
24 |
செஞ்சுணங்கினையுடைய மெல்லிய முலையாய்! நின்னைச் சேர்ந்த பசலை நீங்குவதாக; சூளுறவாகிய சொற்களைச் சொல்லி நம்மை வற்புறுத்தினார் தாம் வருதற்குச் சொல்லிய குறியால். வெஞ்சினத்தாற் பொங்கியது போல இடித்து முழங்கிக் கறுத்த முகில்கள் தண்பெயலைப் புறவின்கண்ணே யுகுத்தனவாதலால், காரிது.
கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்த உருகு மடமான் பிணையோ(டு) உகளும் உருவ முலையாய்! நம் காதலர் இன்னே வருவர் வலிக்கும் போது. |
25 |
கருவியன்ற கரியமழை காற்றோடு கலந்துயர்தலால், முன் வெம்மையால் உருகும் மடமான்கள் தம் பிணையோடு உகளாநின்றன; நிறத்தையுடைய முலையாய்! நங்காதலர் இப்பொழுதே வருவார்; இக்காலம் நம்மைத் தோற்றுவியாநின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, வருவர், இலக்கியங்கள், ஐம்பது, பதினெண், முலையாய், கீழ்க்கணக்கு, திணைமொழி, செறிதொடீஇ, நிறத்தையுடைய, வெஞ்சின, தாம், இக்காலம், சொல்லி, நாளை, தண்கடல், வேந்தர், கார், காதலர், நல்லார், முல்லை, சங்க, வந்தார், நங்காதலர், மெல்லிய, மாதராய், நின்னுடைய, பசலை