ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு

ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.
கடவுள் வாழ்த்து
அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப் பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் - மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு இறை புரிந்து வாழ்தல் இயல்பு. |
மந்திரி முதலிய இருபத்து நால்வரும் குற்றமற்றபுகழமைந்த தனது சிவந்த பாதங்களாலிட்ட பணியைச்செய்யாநிற்க, ஒழுக்கத்தின் பயனைப் பெறுகின்றபிரமச்சாரி முதலிய நால்வர் விரும்பிய பொருளைக்கொடுத்துக் கற்றுணர்ந்தடைந்த நான்மறையொழுக்கத்தை விரும்பி நடந்து ஒருவன்வாழ்வானானால், பூமியினின்று நீங்கித் தேவர்க்குஅரசனாகிய இந்திரனால் விரும்பப்பட்டு வாழ்தல்உண்மையாம்.
நூல்
சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம் நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும் அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின் வழிவந்தார்கண்ணே வனப்பு. |
1 |
நிறைந்த பூவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரந்த புகழ், செல்வம், மேன்மையாகக் கொள்ளுஞ் சொல், வீரத்தில் அசையாது நின்ற நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறியிலொழுகுவோரது இலக்கணம்,
கருத்து: புகழ் முதலிய ஆறும் நற்குடியிற் பிறந்து நான்மறையொழுக்கம் உடையாரிடத்திலேயே அழகு பெறும்.
கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான், மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!- விண்ணவர்க்கும் மேலாய்விடும். |
2 |
தேன் பொழியும் பூவை யணிந்த கூந்தலையுடையாய்! பிறர் புரியுங் கொலைத்தொழிலை விரும்பாதவனும், கொல்லாதவனும், தசையை அறிவு மயங்கித் தின்னாதவனும், மிகுந்த வருத்துந் தொழிலைச் செய்யாதவனும், பொய்யொழுக்கமில்லாதவனும், யாது காரணம் பற்றியும் தன்னிலைமையினின்று விலகாதவனும், பூவுலகத்தாரது வணக்கத்துக் குரியனாவதுடன் வானுலகத்தார் வணக்கத்துக்கும் உரியவனாவது திண்ணம்.
கருத்து: கொலை விரும்பாமை முதலிய ஆறு நல்லியல்புகளையுமுடையவன் மக்கட்குந் தேவர்க்குந் தலைவனாவான்.
தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல், அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன் துன்பம் துடைத்தல் அரிது. |
3 |
யாவர்க்குந் தவஞ் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது பெரியோர்க்குக் குற்றத்துக்குள்ளாதல் அரிது; நன்னெறியி லொழுகுதல் எளிது. கெடுதலில்லாத இன்பநெறி தடுமாறிச் சென்றால்பிறப்பிற் பொருந்துதல் எளிது. அவ்வாறு பிறந்ததின்கணுண்டாகுந் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல் அரிது.
கருத்து: மக்கட்குத் தவம் எளிது, ஈகை அரிது; தக்கார்க்குத் தீமை அரிது, நன்மை எளிது; திருவருள் நெறி தவறின் பிறவி எளிது; ஆனால் அதன் நீக்கம் அரிது.
இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை, படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல், கண்டவர் காமுறும் சொல், - காணின், கலவியின்கண் விண்டவர் நூல் வேண்டாவிடும். |
4 |
பிறர்க்கு நேரிட்ட துன்பந் துடைத்தலும், பிறரை இகழாமையும், கீழ்மக்களோடு பழகாமையும், யாவர்க்கும் பசித்துன்பம் போக்குதலும், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதலும், தன்னை யெதிர்ப்பட்டவர் விரும்பும் இன்சொல்லும் ஒருவன் தானே கண்டுகொண்டானெனில் கற்றறிந்தோராற் சொல்லப்பட்ட நூல்களைப் பார்த்து அறிய வேண்டிய பொருள் ஒன்றுமில்லாதவன் ஆவன்.
கருத்து: இடர் தீர்த்தல் முதலிய ஒழுக்கங்களையுடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான்.
தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்; எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்; - சாலும், பிற நூலின் சார்பு. |
5 |
தனக்கென்றும் தன்னைச் சார்ந்தவனுக்கென்றும் பொய்யுரையாதவனாய், உண்மையையே யுரைப்பவனாய், யாதொரு பொருளையும் எனக்குரியதென அன்பு வையாதவனாய், முல்லை நிலத்திலுள்ள கொன்றை மலரை ஒக்கும் அணிகளையணியும் மாதர் சொல்லைப் பேணாதவனாய், செல்வச் செருக்கில்லாதவனாய் ஒருவன் வாழ்வானாயின், அவனிடத்து அறநூல்களிற் கூறப்பட்ட மேன்மையான பொருள்களெல்லாம் வந்து நிரம்பும்.
கருத்து: பொய்யாமை முதலியன உடையானுக்கு நூல்களால் உணர்தற்குரிய ஏனைய நல்லியல்புகளுந் தாமே வந்து நிரம்பும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, அரிது, எளிது, பங்கு, முதலிய, ஏலாதி, கருத்து, தீர்த்தல், இலக்கியங்கள், நிலை, சொல், புகழ், நால்வர், வந்து, கீழ்க்கணக்கு, பதினெண், கல்வி, கொலை, தவம், யாது, இடர், நிரம்பும், கொன்றை, ஒருவன், அவம், என்றும், பெறும், புரிந்து, நூலின், ஏலம், சங்க, நூல், செல்வம், ஆறும், கோதாய், பூங், நின்ற, கூந்தலையுடையாய்