சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.
கடவுள் வாழ்த்து
முழுது உணர்ந்து, மூன்று ஒழித்து, மூவாதான் பாதம், பழுது இன்றி, ஆற்றப் பணிந்து, முழுது ஏத்தி, மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா, வெண்பா உரைப்பன், சில. |
காமாதி மூன்றையு மொழித்து முற்றுமுணர்ந்து, முப்பில்லாதான் பாத மனக்குற்ற நீக்கி மிகவும் வணங்கிப் பல குணங்களைப் புகழ்ந்து மண்பரந்த வுலகில் மக்கட் கெல்லாம் உறுதியாகிய பொருள்மேற் றொடுத்து வெண்பாவாகிய சில செய்யுட்களை யுரைப்பேன்.
கருத்துரை: நிலைபெற்ற கடவுளின் அடிகளை வணங்கிப் போற்றி இந்நிலவுலகினர்க்கு நன்மை யுண்டாகுமாறு இந்நூலை யான் கூறுவேன்.
நூல்
பொருள் உடையான் கண்ணதே, போகம்; அறனும், அருள் உடையான் கண்ணதே ஆகும்; அருள் உடையான் செய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும் உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. |
1 |
பொருளுடையான் கண்ணதே யாகும் இன்பம்; அறவினையும் உயிர்கள்மேல் அருளுடையான் மாட்டேயாகும்; அவ்வருளுடையான் பழியைச் செய்யான், பாவத்தை யடையான், பிறர் செவியின்கட் செலுத்திப் பிறரைப் பழிபடக் கூறும் புறமொழிகளையும் நடத்தான்.
கருத்துரை: பொருளுள்ளவனுக்கு இன்பம் பெருகும்; அருளுள்ளவனுக்கு அறம் விளையும்; அருளுள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலைஞ் செய்யான்.
கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து; நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும் ஆகவே செய்யின், அமிர்து. |
2 |
கற்புடைய பெண் தனது கொழுநற்கு அமிர்தோ டொக்கும், கற்றுவைத்துப் பொறிகளைந்தையும் அடக்கினான் உலகத்தார்க்கு அமிர்தோ டொக்கும், நற்செயல்களையுடைய நாடுகள் அந்நாடாளும் அரசரக்கு அமிர்தோ டொக்கும், அந்நாட்டிற்கு மழைபோல நன்மையைச் செய்யும் மேகத்தைச் சேர்ந்த கொடி வேந்தனமிர்தோ டொக்கும், அவன் சேவகனும் அவ்வரசற்கு நன்மையாகவே செய்யின் அமிர்தோ டொக்கும்.
கருத்துரை: கற்புடைப் பெண், கற்றடங்கினான், நாடு வேந்து, சேவகன் இவர்கள் முறையே கணவன் முதலியவர்களுக்கு அமிர்தம் போல் நின்று உதவுவார்கள்.
கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும் இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான் ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும், நல்லார்கள் கேட்பின் நகை. |
3 |
கல்லாதா னொருவன் தான் ஆராய்ந்து காணும் நுண்மைப்பொருளும், காதிரண்டும் இல்லாதாள் அழகுடையேன் என்றெடுத்த முகத்தினளா யொழுகலும், பொருளில்லாதவன் இல்லாதார்க் கீய்த்தளியா னென்றாலும், ஒருவன் தான் தனக்கியன்ற பொருளன்றி யியலாத பொருளை ஈயாதா னென்றலும் அறிவுடைய நல்லோர் கேட்பின் நகையாம்.
கருத்துரை: கல்லாதான் நுட்பம் முதலானவை அறிஞர்க்கு நகைப்பினையே விளைவிக்கும்.
உடம்பு ஒழிய வேண்டின், உயர் தவம்; மற்று ஈண்டு இடம் பொழிய வேண்டுமேல், ஈகை; மடம் பொழிய வேண்டின், அறிமடம்; வேண்டேல், பிறர் மனை; ஈண்டின், இயையும் திரு. |
4 |
பிறப்பான் வரும் உடம்பை நீக்க வேண்டினானாயின் உயர்தவத்தை செய்க, இவ்வுலகத்தினிடமெல்லாந் தன்புகழால் நிறைய வேண்டினானாயின் ஈகையைச் செய்க, மெல்லிய வீரம் தனக்கு நிறைய வேண்டினானாயின் அறிவின்கண் அடங்கி யொழுக, பிறர் மனையாளை விரும்பா தொழிக, சிறிதாயினும் வருவாய் நாடோறும் ஈண்டிற் செல்வம் ஒருவற்கே கூடும்.
கருத்துரை: பிறவி யொழியத் தவமும், புகழ் நிறைய ஈகையும், உள்ளம் தூய்மையாய் நிரம்ப அறிந்தும் அறியாமையும், பிறர்மனை நயவாமையும், வருவாய் நாடோறும் சிறிதாகச் சேர உண்டாகும் செல்வமும் ஒருவற்கு வேண்டற்பாலனவாம். ‘ஈதலிசைபட வாழ்தலதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு‘ என்ற மையால் ஈகை ஆற்று எனப்பட்டது. மடம் என்பது மென்மை. ஈண்டு மென்மையின் பயனாகிய இணக்கத்தை யுணர்த்துகின்றது. தான் கூறுவது அறியமாட்டாதாரிடத்து, அவரறியாமையைக் கூறின் அவரோடிணங்குவதற்குத் தடையுண்டாமாதலின், “மடம் பொழிய வேண்டி னறிமடம்,“ என்றார். அறிமடமாவது - தான் கூறுவது அறியும் அறிவில்லார் மாட்டு அவரறிய மாட்டாமையைத் தானறிந்தும் அறியாதான் போன்றிருத்தல். அவர் அறியாமையை அவருக்குத் தெரிவிப்பின் பயனில்லை என்றவாறாயிற்று. பாவங்களிற் கொடியது பிறர்மனை விரும்பல் ஆதலின், பிறர்மனை வேண்டேல் என்றார். வள்ளுவரும், “பகைபாவ மச்சம் பழியென நான்கும், இகவாவா மில்லிறப்பான் கண்,“ என்றனர் - ஆற்று என்பது தீபகமாக மூன்றிடங்களிலும் கூட்டப்பட்டது. மனை - மனையாள்; இடவாகு பெயர்.
படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின் இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக் கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு வாடாத வன்கண் வனப்பு. |
5 |
படைக்கு வனப்பாவது யானை, பெண்ணிடைக்கு வனப்பாவது நுண்மை, ஒழுக்கத்துக்கு வனப்பாவது ஒருவற்காகப் பாங்குரையாமை, செங்கோலுக்கு வனப்பாவது ஒருவர்க்குப் பாங்குரையாமை, சேவகரக்கு வனப்பாவது கெடாத வன்கண்மை.
கருத்துரை: சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், ஒழுக்கத்துக்கு அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, சிறுபஞ்சமூலம், வனப்பாவது, அமிர்து, வேர், டொக்கும், தான், அமிர்தோ, வனப்பு, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, செய்யான், பிறர், பிறர்மனை, பொழிய, பெண், கண்ணதே, என்பது, நிறைய, உடையான், பதினெண், வேண்டினானாயின், செய்க, ஈண்டு, மடம், வேண்டேல், ஆற்று, யானை, நுண்மை, ஒழுக்கத்துக்கு, பாங்குரையாமை, என்றார், கூறுவது, வருவாய், நாடோறும், வேண்டின், தனக்கு, சேவகனும், பொருள், அருள், ஆகும், இன்பம், வணங்கிப், முழுது, சங்க, நலம், பெயர், கற்புடைய, நற்பு, கல்லாதான், காணும், இல்லாதாள், செய்யின், வேந்து, உடைய, நாடு, கொடி, கேட்பின்