திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

முருகியல் கானல் அகன்கரை யாங்கண் குருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்ப மருவி வரலுற வேண்டும்என் தோழி உருவழி உன்நோய் கெட. |
46 |
நறுவிரை யுளதாகிய கானலையுடைய அகன்ற கரையின்கட் குருகினம் ஆராநின்ற கொடுங்கழிச் சேர்ப்பனே! பயின்று வருதலைச் செய்யவேண்டும்; என்றோழி மாமை நிறம் அழியாநின்ற உள்ளத்தின்கண் நோயொழிய.
அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான மணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத் துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி! தணியும்எள் மென்தோள் வளை. |
47 |
அணிந்த பூக்களையுடைய கழிக்கானலின்கண் கண்ட அற்றைநாட் போலான்; மணியெழின் மேனியின்கண் மிக்க பசப்பேறும் வகை துணிகடற் சேர்ப்பன் எம்மை மிகவே துறந்தான் கொல்லோ! என் மென்தோள் வளைகள் நீங்கா நின்றன
கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப் பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப வறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க நிறங்கூரும் மாலை வரும். |
48 |
ஒலிக்கு மணியையுடைய நெடுந்தேர் கண்டார் கண்ணினொளியை யறுப்ப, உயர்ந்த மணன்மேல் அலவன் பரப்ப, வெம்மை மிக்க கடிய வெயில் கடிதாக நீங்க, செக்கர் நிறமாக நிறமிக்க மாலைப்பொழுதின்கண் நங் காதலன் வரும்.
மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும் கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்தும்என் நெஞ்சு. |
49 |
மயிலோ? மடவாளோ? மாநீர்த் திரையின்கண் பயின் றுறைவதோர் தெய்வங் கொல்லோ? கேளீரே! குயில்கள் கூவாநின்ற கன்னியிளஞாழற் பூம்பொழிலின்கண் அவரை நோக்கிய என் கண்ணினு மிக வருந்தாநின்ற தென் னெஞ்சு.
பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப் புகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும் முன்றில் தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி திகழும் திருஅமர் மார்பு. |
50 |
பவளத்தினையும் முத்தினையும் பளிங்கினையும் கலந்து, பிறர் புகழக் கொண்டுவந்து, மனைசூழ்ந்த படப்பையையணைந்த முற்றத்தின்கண் வந்து வழங்குகின்ற திரையையுடைய சேர்ப்பன் விரைந்து வருவான் கொல்லோ? தோழி! முன்பு போலப் பொலிவழிந்திரா நின்ற அழகமைந்த மார்பும் பொலிவுடைத்தாய் இருந்ததாதலான், எம்பெருமான் விரைந்து வருமென்று முற்கொண்டு நமக்கு அறிவிக்கின்றது போலும்.
திணை மொழி ஐம்பது முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, சேர்ப்பன், இலக்கியங்கள், தோழி, ஐம்பது, திணைமொழி, கீழ்க்கணக்கு, பதினெண், கொல்லோ, வரும், மாநீர்த், புகழக், விரைந்து, நீங்க, நோக்கிய, மென்தோள், சங்க, கொடுங்கழிச், மிக்க, அலவன், பரப்ப