ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார்.
நூல்
பாயிரம்
பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேரா தவர். |
மெய்யம்மையான இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், மக்கட் பண்புகளை, ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, உயர்ந்தோராகிய உலகமக்கள், நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, நன்குணரும்படியாக, அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்த்து, செய்யுள் வடிவமாக இயற்றிய, முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், விருப்பத்துடன், படித்து அறியாத மக்கள், செவ்வையான தமிழ் மொழியின் பெரும் பயனை, அடையப்பெறாதவர்களாவார்கள்.
1. முல்லை
இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்
ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய் இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ மயங்கி வலனேருங் கார். |
1 |
"(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள்.
அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி ! கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும் பீர்நீர்மை கொண்டன தோள். |
2 |
"மென்மையான சொற்களைப் பேசும் தோழியே! அழகிய மயில்கள் கூவியழைக்கும்படி இடித்து முழங்கிப் பெரிய மலைகளில் படிந்து மழைபெய்யும் போல் காணப்பட்ட கார்மேகத்தை நான் காணும்போது ஆற்றாமை மிகுந்து என் தோள்கள் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பெற்று விளங்கின" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று நமர்சென்ற நாட்டுள்இக் கார். |
3 |
"தலைவியே! மின்னலும், இடியும், இடியின் முழக்கமும் இவைபோன்ற இன்ன பிறவுமாகிய பிரிந்தாரைக் கொல்லும் படைக்கலங்கள் மிகுதியாகப் பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டதோ? முல்லைப் பூவினை வென்ற பற்களை உடைய பெண்ணே! நம்முடைய தலைவன் சென்ற நாட்டில் இக்கார்காலம் இல்லையோ?" என்று குறிப்பாகக் கேட்கிறாள்.
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம் வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக் கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார். |
4 |
"ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்" என்று கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி தேற்றினாள்.
கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக் கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடி வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும் துளிகலந்து வீழ்தருங் கண். |
5 |
என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பது, ஐந்திணை, இலக்கியங்கள், முல்லை, மாறன், கார், போன்று, தலைவியே, கீழ்க்கணக்கு, பதினெண், அழகிய, தோழி, தோழியே, பெரிய, கூறினாள், மிகுந்து, மேகக், கூடி, முரசின், காதலர், இல்லையோ, இன்றே, போல், தமிழ், நின்ற, நெய்தல், பாலை, மருதம், பொறையன், மயங்கி, குறிஞ்சி, கூடிய, அழித்த, சங்க, ஆதலின்