கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் கைந்நிலை எனப்பட்டது. இந் நூலைச் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்.
நூல்
1. குறிஞ்சி
வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி
தோழிக்குக் கூறுதல்
நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல் நிகரில் மடமான் எரியும் அமர் சாரல் கானக நாடன் கலந்தான் இவன் என்று மேனி சிதையும் பசந்து. |
1 |
தினைக்கதிரைத் தின்பதற்காகத் தினைத்தாளின் மேல் ஏறுங் கிளிகளை யோட்டுகின்ற தினைப்புனத்தின்கண் ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் விரும்புகின்ற மலைச்சாரலில் காட்டிற்கு உள்ளாகிய நாட்டையுடையவன் என்னைப் புணர்ந்தான் அவ்வாறு புணர்ந்த தலைவன் இஞ்ஞான்று அருகில் இல்லாது பிரிந்தான் என்பதையறிந்து என் உடல் பசலை நிறமாகி எழிலழிந்தது, (என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.)
வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி
தோழிக்குக் கூறுதல்
வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச் சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம் வஞ்ச மலைநாடன் வாரான்கொல் தோழிஎன் நெஞ்சம் நடுங்கி வரும். |
2 |
என்பாங்கியே! நெருப்பால் வெந்து கருகிய காட்டிற்கு மணம் உண்டாகும்படி மலையினின்று வரும் அருவியானது சந்தனக் கட்டைகளை ஏந்திக்கொண்டு வந்து போடுகின்ற வஞ்சகமுள்ள மலைநாட்டுத் தலைவன் இனிவாரானோ, வருவனோ யான் அறியேன் என் நெஞ்சம் நடுங்கிவரும். எனது மனம் அது குறித்து நடுங்கி வருகின்றது, (என்று கூறினள் தலைவி).
வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி
தோழிக்குக் கூறுதல்
பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர் காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும் பாசம்பட் டோடும் படுகல் மலைநாடற்கு ஆசையின் தேம்பும் என் நெஞ்சு. |
3 |
பாசம் படர்ந்த பசுமையான நீர்ச் சுனையின் பக்கத்தில் வழியும் பழமையான நீரில் மிகுந்த சினமுடைய மந்திகள் பழகி அந்நீரில் வருங் கனிகளை யெடுத்துத் தின்று சுவைத்திருக்கும் இயல்புடைய பாசமுண்டாக நீரோடுகின்ற உயர்ந்த கற்களையுடைய மலைநாட்டுத் தலைவன் பொருட்டு, என் நெஞ்சு ஆசையில் தேம்பும் என் நெஞ்சமானது காதலால் வருந்துகின்றது, (என்று தோழியினிடம் கூறினள்).
வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி
தோழிக்குக் கூறுதல்
ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇய தீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன் தான்கலந்து உள்ளாத் தகையானோ நேரிழாய் தேங்கலந்த சொல்லின் தெளித்து. |
4 |
என்தோழீ! உயர்ந்த சிறந்த பலா மரத்திற் பழுத்த இன்பத்தைத் தருகின்ற இனிய கனியை மாமரத்திலிருந்து கருங் குரங்குகள் பாய்ந்து கவரும் மலைநாடன் ஆகிய தலைவன் இனிமை பொருந்திய சொற்களால் சூளுரை கூறித் தெளிவித்து முன் தானே வந்து கூடிப் புணர்ந்து பின்பு அதனை நினையாது மறக்குந் தன்மையுடையவனோ, (கூறுக என்றாள்).
வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி
தோழிக்குக் கூறுதல்
இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும் குரலைப் பிரசை இரும்பிடி பேணி வரூஉம் முரசருவி ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள் நிரையம்எனக் கிடந்த வாறு. |
5 |
கரிய பெண் யானைகளானவை இனிய வண்டுகள் இன்பத்தைக் கொண்டு பாடுகின்ற ஒலியைக் கேட்டு தேன் கூட்டினை விரும்பி வருகின்ற முரசு முழங்குவது போல அருவி யாரவாரஞ் செய்கின்ற மலை நாட்டையுடைய என் தலைவனுக்கு எனது தோளிற் கூடும் இன்பமானது நரகம்போல நினைக்குமாறு இருக்கும் இயல்பு, (என்ன காரணம் என்று கூறினள்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, தலைவி, தோழிக்குக், கூறுதல், நீட்டித்த, வரைவு, கைந்நிலை, ஆற்றாளாய, தலைவன், இலக்கியங்கள், கூறினள், மலைநாடன், பதினெண், கீழ்க்கணக்கு, இனிய, எனது, மலைநாடற்கு, தேம்பும், நெஞ்சு, உயர்ந்த, மலைநாட்டுத், நடுங்கி, காட்டிற்கு, சங்க, அருவி, நெஞ்சம், வரும், ஒழுக்கம், வந்து