திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
யானை உழலும் மணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம் |ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல் காணினும் காய்வர் எமர். |
6 |
யானைகள் உழன்று திரியும் அழகுமிக்க நீள்வரைக் கானகத்து வாழும் வாழ்க்கையினையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; எனலின்கண் நீரே வருதல் என்ன பயனுளது? ஐய! நும்மைக் காணினும் நீர் வந்தீரென்று கேட்பினும் நும்மை வெகுள்வர் எமர்.
யாழும் குழலும் முழவும் இயைந்தன வீழும் அருவி விறன்மலை நன்னாட! மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின் ஊரறி கெளவை தரும். |
7 |
யாழுங் குழலு முழவுந் தம்முள் பொருந்தியொலித்தாற்போல வீழாநின்ற அருவியையுடைய மிக்க மலைநாடனே! மதர்ப்பிணையுடைய மான் போன்ற நோக்கினையுடையாளும் ஆற்றமாட்டாள்; நீர் இரவின்கண் வருதிராயின், ஊரும் பிறரும் அறியும் அலரைத்தரும்.
வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின் வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம் சோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம் போந்த(து)இல் ஐய! களிறு. |
8 |
வேங்கை மலர்தலான் வெறிகமழா நின்ற தண்சிலம்பின் கண்ணே வளைந்த மூங்கில் போன்ற மெல்லிய தோளையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; குருதி பாய்ந்தொழிக, இவ்விடத்தின்கண் போந்ததில்லை, ஐயனே! களிறு.
பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க மணிமலை நாடன் வருவான்கொல் தோழ! கணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும் அணிநிற மாலைப் பொழுது. |
9 |
நோயான் வந்த நிறத்தீர்ந்து, பெரும் பணைத்தோள் பெருப்ப அழகிய மலைநாடன் வருவான் கொல்லோ? தோழி! கணியைப்போல நாட்சொல்லும் நிறை வேங்கை மலர்ந்து வண்டுகள் ஒலியாநின்ற நீலமணி போன்ற நிறத்தினையுடைய மாலைப்பொழுதின்கண.
பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன் எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன் புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னை செலவுங் கடிந்தாள் புனத்து. |
10 |
பலாப்பழத்தினைப் பெற்ற பசுங்கண்ணினையுடைய குரங்கினுட் கடுவன், “ஏடி!” என்று தனக்கிணையாகிய மந்தியை யழைக்கும் பெற்றிய கற்கள் சூழ்ந்த வெற்பன் நம்மை யூடுங்கொல்லோ? தோழி! நங்காதலரோடு புணர்ந்த புணர்ச்சியையறிந்து புனத்துச் செல்லும் செலவினையுந் தவிர்த்தாள் அன்னையாதலால்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, குறவர், மகளிரேம், வேங்கை, இலக்கியங்கள், திணைமொழி, தோழி, ஐம்பது, பதினெண், கீழ்க்கணக்கு, களிறு, குருதி, கடுவன், வெற்பன், தண்சிலம்பின், காணினும், சங்க, நீள்வரைக், எமர், யாங்கள், நீர்