கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
நாற்பது செய்யுட்களை உடைமையாலும், கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும் இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது.இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
நூல்
தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல், திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ, 'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம் கரு இருந்து ஆலிக்கும் போழ்து? |
1 |
கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க, வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ? என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த, நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!- 'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து. |
2 |
வளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி,
தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது
வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள, உரும் இடி வானம் இழிய, எழுமே- நெருநல், ஒருத்தி திறத்து. |
3 |
வரி நிறத்தினை உடைய பாதிரிப் பூக்கள் வாட, இள மணலையுடைய குளிர்ந்த காட்டில், ஆலங்கட்டிகள் புரள, வானம் இடி இடித்து, நேற்று முதல், ஒருத்தி தனித்திருப்பதால், அவளை வருத்துவதற்காக மழை பெய்தது.
தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தது
ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள, காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன; பாடு வண்டு ஊதும் பருவம், - பணைத் தோளி!- வாடும் பசலை மருந்து. |
4 |
கூத்தாடும் மகளிர் போல மயில்கள் அழகுபெற, கொன்றைகள் அழகு பெற பூத்தன. பாடுகின்ற வண்டுகளும் அப்பூக்களின் மீது நிற்கும். மூங்கில் போன்ற தோளை உடையவளே! இப்பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும்.
இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்- பகழிபோல் உண் கண்ணாய்! - பொய் அன்மை; ஈண்டைப் பவழம் சிதறியவை போலக் கோபம் தவழும் தகைய புறவு. |
5 |
அம்பு போலும் மையுண்ட கண்களையுடையாய்! பவழம் சிந்தியவைபோலக் காடுகள் இந்திர கோபங்கள் பரக்குந் தன்மை உடையவையாயின. ஆதலால் பிறர் கூறும் பழிக்கு அஞ்சிப் பொருள் தேடச் சென்ற தலைவர், மீண்டும் வருதல் பொய்யல்ல; மெய்யாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, கார், தோழி, நாற்பது, வானம், இலக்கியங்கள், பருவம், தலைவர், பதினெண், கீழ்க்கணக்கு, ஒருத்தி, புரள, தூது, வருதல், பவழம், பூத்தன, பெயல், சங்க, வற்புறுத்தது, மார்பில், தலைவியிடம், கூறினாள்