திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

4. மருதம்
பழனம் படிந்த படுகோட்(டு) எருமை கழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு) உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன் கிழமை யுடையன்என் தோட்டு. |
31 |
பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய எருமை கழனியின்கட் டொழில் செய்வார்க்கு எறிந்த பறையொலியைக் கேட்டு வெருவி, அறிவழிந்தோடும் ஒலிபுனலையுடைய வூரன் என்றோட் குரிமை யுடையன் என்னும் இத்துணையே யமையும்; அவன் எனக்கு நல்குதல் வேண்டுவதில்லை.
கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து) இணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும் பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன் இணைத்தான் எமக்குமோர் நோய். |
32 |
திரண்ட காலையுடைய மருதுகள் உகுத்த நறுந் தாதுகள் ஒத்த தாளினையுடைய நீலங்களின் இதழ் மேலே சொரியும் பெருந்தாட் கதிரையுடைய செந்நெற் பரந்த வயலூரன் பரத்தையர்க் கின்பத்தை இணைத்தலே யன்றி, எமக்குமோர் பசலை நோயினை யிணைத்தான்.
கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர! உடைய இளநலம் உண்டாய் - கடைய கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி எதிர்நலம் ஏற்றுநின் றாய். |
33 |
கீழாயினார் நட்பே போலக், காஞ்சிமரங்களையுடைய நல்லூரனே! என்றோழியுடைய இளநலமெல்லாம் முன்பு நுகர்ந்தாய்; பின்னை அக் கதிர்முலை யாகத்துக் கண்ணனையார் சேரிக்கட்சென்று மற்றவர் இளமை எதிர் நலத்தை எதிரேற்று நின்றாய்.
செந்நெல் விளைவய லூரன் சிலபகல் தன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண! பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள் வாரிக்குப் புக்குநின் றாய். |
34 |
செந்நெல் விளைகின்ற வயலினையுடைய ஊரன் முன்பு சில நாள் தன்னலத்தை யா னல்லாதார்க் கீயான்; இப்பொழுது பாரித்த அல்குற் பணைத்தோளையுடைய பரத்தையர் சேரியின்கண் மற்றவர் தலைமகற்கே நல்கும் வாரிக்குப் புக்கு நின்று ஆராய்வாயாக: ஆகையால், பாண! இங்குநின்றும் ஏழுவாயாக.
வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும் கூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன் மாணிழை நல்லார் இளநலம் உண்டவர் மேனி ஒழிய விடும். |
35 |
வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை ஏற்றுக் கொண்டூதும் கூனிவண்டு போலுங் குளிர்வயல் நல்லூரன்; ஆகலான், மாட்சிமைப்பட்ட இழையையுடைய நல்லாரின் நலத்தை நுகர்ந்து மற்றவர் உடம்பினை ஒழிய விடும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், மற்றவர், திணைமொழி, கீழ்க்கணக்கு, ஐம்பது, பதினெண், ஊரன், பாரித்த, நலத்தை, செந்நெல், நல்லூரன், விடும், ஒழிய, குளிர்வயல், வாரிக்குப், இளநலம், எருமை, படிந்த, சங்க, சொரியும், எமக்குமோர், றாய், கதிர்முலை, முன்பு