ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.
நூல்
ஆசார வித்து
(பஃறொடை வெண்பா)
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. |
1 |
தனக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக வறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம்.
கருத்துரை: நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம்.
ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)
பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு, நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை, இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும் ஒழுக்கம் பிழையாதவர். |
2 |
நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார்.
கருத்துரை: ஒழுக்கந் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர்.
தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும் முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால், எப் பாலும் ஆகா கெடும். |
3 |
குரவர்க்குத் தக்கணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவஞ்செய்தலும், கல்வியும் என்ற இந்நான்கினையும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு பாதுகாத்துச் செய்துவருக. மாறுபடுமாயின் எவ்வுலகத்தின்கண்ணும் தனக்குப் பயனாகாவாய் இந்நான்கும் கெடும்.
கருத்துரை: தக்கணை முதலியவைகளைக் காலதாமதமின்றி ஒருமனதோடு செய்து முடிக்கவேண்டும்.
முந்தையோர் கண்ட நெறி
(இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும் நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின் தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே - முந்தையோர் கண்ட முறை. |
4 |
வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை.
கருத்துரை: மறுநாட் செய்யப்புகுங் காரியத்தை வைகறையிலெழுந்து சிந்தித்துப் பின் பெற்றோரை வணங்கி அச்செயலைத் தொடங்குக.
எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள். |
5 |
பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலையோடே கூட இவையிற்றை எச்சிலையுடையராய் யாவரும் தீண்டார் என்று சொல்லுவர்; எல்லோரும் யாப்புற எச்சிலோடு தீண்டப்படாத பொருளும் இவை.
கருத்துரை: பசு முதலிய ஐந்து பொருள்களை எவரும் எச்சிலுடன் தீண்டலாகாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, வெண்பா, கருத்துரை, கல்வி, இலக்கியங்கள், ஆச்சாரக், கோவை, பதினெண், ஒழுக்கம், கீழ்க்கணக்கு, கெடும், முந்தையோர், தக்கணை, சிந்தியல், இன்னிசைச், தக்கிணை, கண்ட, பொருளும், தீண்டார், பார்ப்பார், தேவர், யாவரும், எச்சிலுடன், தொடங்குக, செய்யும், என்றும், சிந்தித்து, தான், முதலிய, வித்து, அறிதல், பொறையுடைமை, ஆசார, பொருள், சங்க, கோவை, என்றோ, உயிர்க்கும், எட்டும், காரணம், இன்னிசை, பிறப்பு, சொல்லப்பட்ட, கல்வியும், சொல்லிய, தனக்குப், செல்வம்