திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டு பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார்.
நூல்
1. குறிஞ்சி
புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப் புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும் வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா யானை யுடைய கரம். |
1 |
புகழ்மிகுந்த சந்தனங்களை வெட்டிப் புல்லும்படி எரியூட்டியமையானே புகையினைக் கொடுக்கப் பெற்ற அண்டர் துகள் பொழிகின்ற வானளவு முயர்ந்த வெற்பனே! இரவின்கண் வரல்வேண்டா, நீ வருகின்ற வழி யானை வருகின்ற சுரங்களாதலான்.
கணமுகை கையெனக் காந்தள் கவின மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும் விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ புனமும் அடங்கின காப்பு. |
2 |
திரட்சியையுடைய மொட்டுக்களைக் கையென்று கருதும்படி காந்தள் அழகுபெற அரும்ப, அதன் மணத்தையுடைய முகைகளென்று கருதி மந்திகள் கொண்டாடுகின்ற மிகுதியையுடைய மலை நாடனே! நீ இங்கு வருதலரிதாங்கொல்லோ; புனங்களும் தினையரியப்பட்டுக் காவலொழிந்தன.
ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப் பாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா ஈங்கு நெகிழ்ந்த வளை. |
3 |
மலையினது பக்கமலைமேற் காந்தள் புதிதாக அழகுபெறுதலால், அவற்றின் முகைகளைப் பாம்பென்று கருதிச் சென்று உருமு இடித்தலான், அவற்றைப் பிறர் கண்டிரங்குகின்ற பூங்குன்ற நாடன் புணர்ந்த அந்நாள் போலாவாய், இக்காலத்து நெகிழ்ந்து கழன்ற வெள் வளைகள்.
ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக் கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும் வானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி மேனி பசப்புக் கெட. |
4 |
ஏனலிடத்திட்ட குளிர்ந்த மணிகளைக் கொண்டு இரவின்கட் குறவர்மக்கள் தங்குளிர் நீங்கக் காயும் வானின் கண்ணே யுயர்ந்த வெற்பன் ஈங்கு வருவான் கொல்லோ? என்னுடைய தோழி மேனியிற் பசப்புக்கெட..
விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார் வரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர் வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர் கல்லிடை வாழ்நர் எமர். |
5 |
விரை கமழாநின்ற சாரலின்கண் விளைபுனங் காப்பர்கள், இம்மலையின்கண் வரவேண்டா ஐயனே! கடுங்சொல்லினர், வில்லினர், வேலர், விரைந்து செல்லுமம்பினர் மலையின்கண் வாழ்வாராகிய வெமர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், ஐம்பது, காந்தள், கீழ்க்கணக்கு, திணைமொழி, பதினெண், நாடன், பூங்குன்ற, வில்லினர், வேலர், கொல்லோ, வெற்பன், ஈங்கு, வரல்வேண்டா, குறிஞ்சி, சங்க, பெற்ற, வானுயர், யானை, வருகின்ற