இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நானகு பாடல்களில் இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார். மற்ற பாடல்களில் மூன்று மூன்று இன்பங்களை கூறியுள்ளார்.
கடவுள் வாழ்த்து
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகநான் குடையானைச் சென்றமர்ந் தேத்தல் இனிது. |
மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.
நூல்
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. |
1 |
பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.
உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான்இனிது நன்கு. |
2 |
பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே தேரிற்கோள் நட்புத் திசைக்கு. |
3 |
சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே மான முடையார் மதிப்பு. |
4 |
அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ் செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல் எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும் பொல்லாங் குரையாமை நன்கு. |
5 |
கொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, இலக்கியங்கள், கற்றல், மூன்று, நாற்பது, அதுபோல, இனியவை, கீழ்க்கணக்கு, முன்இனிதே, முன், பதினெண், இனிதாகும், மதிப்பு, அரசன், செய்யாமை, முன்இனிது, கொல்லாமை, வாழ்க்கை, மிகஇனிதே, பாடல்களில், கல்வி, சங்க, கூறியுள்ளார், தாங்கினிதே, துறத்தல், கொள்ளுதல், நன்கு