கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
பிடவங் குருந்தொடு பிண்டி மலர மடவமயில் கூவ மந்திமா கூரத் தடமலர்க் கோதையாய் தங்கார் வருவர் இடபமெனக் கொண்டு தாம். |
36 |
வளைந்த மலராற்றொடுக்கப்பட்ட மாலை புனைந்தோய்! பிடவஞ் செடியும் குருந்த மரமும், அசோக மரமும் பூத்து நிற்க இளமையான மயில்கள் ஆடிக் கூவிமகிழ மந்திகளும், விலங்கினங்களும் குளிரால் நடுங்க, இத்தகையகார் காலத்தில் நம்காதலர் தம்மை ஒரு காளை என்று மனத்தின் மதித்துக் கொண்டு (மகிழ்ச்சியுடன்) வருவார் இனி யொருகணமேனும் ஆங்குத் தங்கியிரார். (என்று தோழி கூறினள்.)
4. மருதம்
பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது.
கழனி உழவர் கலிஅஞ்சி ஓடித் தழென மதஎருமை தண்கயம் பாயும் பழன வயலூரன் பாணஎம் முன்னர்ப் பொழெனப் பொய்கூறா தொழி. |
37 |
வயலின் கண் உழுகின்ற உழவர்கள் ஆரவாரத்தைக் கேட்டுப் பயந்து விரைந்து சென்று செருக்ககுடைய எருமை தழென ஒலியெழும் படி குளிர்ந்த தடாகத்தில் வீழும் இயல்புடைய மருத நிலங்களையும் வயல்களையும் உடைய தலைவன் விடுத்த பாணனே! எங்கள் முன்னிலையில் நீ பொழென்ற ஒலியுடன் பொய்ம்மொழி கூறா திருப்பாய் (உண்மையே கூறு என்றாள்)
பரத்தையர் சேரியில் பயின்று வந்த தலைவனைப்
பிரிந்து தலைவி கூறியது.
கயலினம் பாயும் கழனி நல்லூர நயமிலேன் எம்மனை இன்றொடு வாரல் துயிலின் இளமுலையார் தோள்நயந்து வாழ்கின் குயி...... .............. ........... கொண்டு. |
38 |
கெண்டை மீனினங்கள் துள்ளிக்குதிக்கும் வயல்களை யுடைய நல்ல மருத நிலத்தலைவனே! ஆடல் பாடல் அழகு முதலிய நலங்கள் இல்லோம் நாம் எமது மனைக்கு இந்நாள் நின்று வாரற்க, இளமையான கொங்கையுடையார் தோளிலணையும் இன்பத்தை நுகர்ந்து துயின்று வாழ்வாய் (என்று புலந்து கூறினள் தலைவி)
தலைவன் மகற்கொண்டு வரும் சிறப்பினைத் தோழி
கண்டு மகிழ்ந்து கூறியது.
முட்ட முதுநீர் அடைகரை மேய்ந்தெழுந்து தொட்ட வரிவரால் பாயும் புனல்ஊரன் கட்டலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டுஎம்மில் சுட்டி அலைய வரும். |
39 |
பதித்தனபோன்ற வரிகளையுடைய வரால் மீன்கள் பழமையான நீர் மோதுகின்ற கரைகள் முழுவதும் திரிந்து இரைகளையுண்டுபின் எழுந்து நீர்க்குட்பாய்கின்ற நீர்வளம் பொருந்திய மருத நிலத்தலைவன் தொடுத்த மலர் மாலையை யணிந்த புதல்வனை ஏந்திக்கொண்டு அவன் நெற்றிச்சுட்டி யசையும்படி எம்மனைக்கு இப்போதுதான் வருகிறான் (இது மிகவும் வியப்பான செயல் எனத் தோழி தலைமகள் கேட்பக் கூறினள்)
வாயிலாக வந்த பாணனுக்குத் தோழி தலைவியின்
பண்பு கூறி வாயில் மறுத்தது.
தாரா இரியும் தகைவயல் ஊரனை வாரான் எனினும் வரும்என்று - சேரி புலப்படும் சொல்லும் இப்பூங்கொடி அன்னார் கலப்படும் கூடுங்கொல் மற்று. |
40 |
தாரா என்ற பறவைகள் பறந்து செல்லும் அழகுபொருந்திய வயல் சூழ்ந்த மருதநிலத் தலைவனைக் குறித்து சேரியிலுள்ள பரத்தையர் வாயினின்று வாராமல் இருப்பினும் வருகின்றான் என்று வெளிப்படுகின்ற சொல்லும் இப்பூங் கொடியைப் போன்ற எம் தலைவியின் கூட்டத்தைக் குலைக்கும் அவள் தலைவனுடன் கூடுவாளோ? எவ்வாறு கூடுவாள். (இனி எம் தலைவி புலவி நீங்கிக் கூடாள் எனத்தோழி மறுத்தாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, தோழி, இலக்கியங்கள், தலைவி, கூறியது, கூறினள், தலைவன், பாயும், கொண்டு, கீழ்க்கணக்கு, கைந்நிலை, பதினெண், மருத, பரத்தையர், தலைவியின், சொல்லும், தாரா, வரும், வந்த, பாணனை, வருவார், சங்க, மரமும், இளமையான, கழனி, வாயிலாக, தழென