கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.
மரையா உகளும் மரம்பயில் சோலை உரைசால் மடமந்தி ஓடி உகளும் புரைதீர் மலைநாடன் பூண்ஏந்து அகலம் உரையா வழங்குமென் நெஞ்சு. |
6 |
காட்டுப் பசுக்கள் தாவித் திரிகின்ற மரங்கள் வளர்ந்திருக்கும் சோலையில் உயர்த்துச் சொல்லப் படுதலமைந்த இளமையான குரங்குகள் விரைந்து தாவித் திரிகின்ற குற்றம் நீங்கிய மலை நாடனாகிய தலைவனது ஆர முதலிய அணிகலம் தாங்கிய மார்பானது, என் நெஞ்சு உரையா வழங்கும். என் மனத்தைத் தேய்த்து அதனுள் நடக்கின்றது, (என் செய்வேன் தோழி என்றாள்).
தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.
கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை எல்உறு போழ்தின் இனிய பழங்கவுள்கொண்டு ஒல்என ஓடு மலைநாடன் தன்கேண்மை சொல்லச் சொரியும் வளை. |
7 |
ஆண்குரங்குகள் பல கற்களையுடைய மலையில் ஏறி சூரியன் பொருந்திய பகற்காலத்தில் அங்குள்ள, வாழை மரத்திற் கனிந்த பழத்தைப் பறித்து உரித்துக் கன்னத்தில் ஒதுக்கிக் கொண்டு விரைவாக ஓடுகின்ற வளம் பொருந்திய மலைநாடனாகிய நம் தலைவனது நட்பின் இயல்பினைப் பற்றி கூறத் தொடங்கினால் அப்போதே என் கைவளையல்கள் கழன்று விழும், (என்று கூறினள்).
தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.
கருங்கை கதவேழம் கார்ப்பாம்புக் குப்பங் கி...க்...கொண்...கரும் பெருங்கல் மலைநாடன் பேணி வரினே சுருங்கும் இவள்உற்ற நோய். |
8 |
வலிய கைகளையுடைய சினம் பொருந்திய யானைகள் கரிய மலைப் பாம்புகளின் பக்கத்தில் பெரியகைகளால் தேனீக்களை யோட்டித் தேன் கூட்டினை யெடுத்து அதன் கண்ணுள்ள இனிய தேனையுண்ணும் பெரிய கற்களையுடைய மலை நாடனாகிய தலைவன் இவளை விரும்பி நாடோறும் வந்தால் இவள் கொண்ட காமநோயானது தணியும், (என்று தோழி செவிலியிடம் கூறினள்).
வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி
தோழிக்குக் கூறுதல்
காந்தள ரும்புகை என்று கதவேழம் ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனனோக்கிப் பாய்ந்தெழுந்து ஓடும் பயமலை நன்னாடன் காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு. |
9 |
சினம் பொருந்திய யானையானது செங்காந்தள் மலரைக் கொடிய தீ யென்று கருதி உயர்ந்த தன் கொம்புகளினிடையே துதிக்கை உயர்த்தி நீட்டிக்கொண்டு தன் இனமாகிய யானைக் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து ஓடுகின்ற அச்சத்தைத்தரும் மலைகளை யுடைய நல்ல நாடனாகிய நந்தலைவன் நம்மிடத்தில் வந்து கூடிக்கலந்து செல்லும் இன்பத்தை வெறுத்தானோ? வெறுத்திலனோ? யானறியேன். (என்று தலைவி தோழியிடங் கூறினள்.)
தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
பொன்இணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன் மின்னின் அனையவேல் ஏந்தி இரவினுள் இன்னே வரும்கண்டாய் தோழி இடையாமத்து என்னை இமைபொரு மாறு. |
10 |
என்னுயிர்ப் பாங்கியே! பொன் போன்ற மலர்கள் பொருந்திய வேங்கை மரங்களையுடைய புனம் சூழ்ந்திருக்கும் மலைநாட்டை யுடையவனாகிய தலைவன் மின்னலைப்போல ஒளிவீசும் வேற்படையைக் கையில் ஏந்தி இரவின் நடுச்சாமத்தில் இப்போதே வருவான், இமை பொரும் ஆறு என்னை - என் கண்ணிமை யொன்றோடொன்று பொருந்தியான் உறங்குமாறு எங்ஙனம் (அவன் வருவதை நினைந்து கவலையுறுகின்றேன் என்றாள்)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, தோழி, தலைவி, பொருந்திய, மலைநாடன், இலக்கியங்கள், கூறினள், நிற்றல், நாடனாகிய, கைந்நிலை, அறத்தோடு, செவிலிக்குத், கீழ்க்கணக்கு, பதினெண், வேறுபாடு, வினவிய, கண்டு, ஓடுகின்ற, கதவேழம், சினம், தோழிக்குக், ஏந்தி, கூறுதல், என்னை, தலைவன், தாவித், நெஞ்சு, உரையா, உகளும், சங்க, திரிகின்ற, விரைந்து, இனிய, என்றாள், தலைவனது, கற்களையுடைய