கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு
வரைபொருள் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.
நுரைதரும் ஓதம் கடந்துஎமர் தந்த கருங்கரை வன்மீன் கவரும்புள் ஓப்பின் புகரில்லேம் யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன் நுகர்வனன் உண்டான் நலம். |
56 |
தோழீ! நுரையோடு வரும் கடல் அலைகளைக் கடந்து சென்று நம்மவர் பெரிய கரைக்குக் கொண்டுவந்து தந்த வலியமீன் உணங்கலைக் கவரும் பறவை யினங்களையோட்டுஞ் செயலில் ஒரு குற்றமும் இல்லாதவர்களாய் நாம் ஆங்கிருந்த போது பொலிவாகிய கழிக்கரையுடைய நெய்தனிலத் தலைவன் (நம் தலைவன்) வந்து நம் இன்பத்தை நுகர்ந்து அடைந்தான்
தோழி இரவுக் குறியிடம் தலைவிக்கு
உணர்த்தியது.
கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடல் பெண்ணைத் தடவுக் கிளைபயிரும் தண்கடல் சேர்ப்பன் நிலவுக் கொடுங்கழி நீந்திடும் முன்றில் புலவுத் திரைபொருத போழ்து. |
57 |
குளிர்ந்த கடற்கரையுடைய தலைவன் (நம் தலைவன்) மணல்களையும் வளைந்த கழிக்கரையும் கடந்து நம் முற்றத்தில் புலானாற்றத்தையுடைய நீரில் அலையடிக்கும்படி குறிகாட்டிய போழ்தில் வெட்டப்படு மடல்களையுடைய பனை மரத்தில் வளைந்த வாயையுடைய சேவலும் பேடுமாகப் புணர்ந்திருக்கும் அன்றிற் பறவைகள் பெருகிய தம் பேடு குஞ்சுகள் ஆகிய சுற்றத்தை யழைக்கும் (அது கண்டு நாம் இரவுக் குறிவயிற் செல்லவேண்டும் என்றாள் தோழி.)
தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி
வருந்துதல்.
சுறாஎறி குப்பை சுழலும் கழியுள் இறாஎறி ஓதம் அலற இரைக்கும் உறாஅநீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின் பொறாஅஎன் முன்கை வளை. |
58 |
தோழி! மகர மீனால் மோதி யடிக்கப்பட்ட மீன்குவியல் சுழல்கின்ற கழிநிலத்தில் இறவு மீன்களை வீசியெறியும் அலையானது அலறி யொலிக்கின்ற என்னுடன் வந்து கூடாத நீர்மையையுடைய தலைவனை (நம் தலைவனை) தனியே அவன் பிரிவை நினைத்திருந்தால் என் முன்கை வளை பொறாஅ எனது முன்னங்கை வளையல்களைப் பொறுக்காமல் கீழே வீழ்விக்கின்றன. (நான் என் செய்வேன் என்றாள்.)
இரவு குறிக்கண் சிறைப்புறத்தானாக நிற்கத் தோழி தலைவிக்குக் கூறுவாளாகப் படைத்து
மொழிந்தது.
தாழை குருகுஈனும் தண்ணந் துறைவனை மாழை மானோக்கின் மடமொழி - நூழை நுழையும் மடமகன் யார்கொல் என்றுஅன்னை புழையும் அடைத்தாள் கதவு. |
59 |
மாவடுகையும் மான் பார்வையையும் போன்ற விழிகளையுடைய மடமை மொழியுடையாய் தாழைமரம் கொக்குப்போல வெள்ளியமலர் பூக்கும் குளிர்ந்த அழகிய நீர்த்துறையையுடைய நம் தலைவனை இன்னான் என அறியாது நம் தாயானவள் புறக்கடை வாயில் வழிவந்து நாளும் மனைப்புகுந்து செல்லும் அறிவிலி யாரோ யான் அறியேன் என்று கூறி கதவிலுள்ள சிறிய துளையையும் அடைத்துப் பூட்டிவிட்டாள் அல்லவா? (இனி நாம் என் செய்வது என்று தோழி கூறினள்).
வினை முடித்து மீண்ட தலைமகன் வரவு கண்ட தோழி
தலைவிக்குக் கூறியது.
பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி தென்னவன் கொற்கைக் குருகுஇரிய - மன்னரை ஓடுபுறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோ கூடல் அணைய வரவு. |
60 |
மலர்மலர்ந்த கொடிபோன்ற தலைவியே! பகை மன்னர் அஞ்சியோடுமாறு வென்று புறங்கண்ட ஒளி பொருந்திய பூமாலை புனைந்தவன் தேரானது பாண்டிய மன்னன் கொற்கைத் துறைமேயும் குருகினங்களெல்லாம் இரிந்தோடும்படி, மதுரையை நெருங்க வந்தது தேர் இதோ காண் பொன் போன்ற அழகிய பசலை நோயும் இனி நீங்கிவிடும். (வருந்தாதே என்றாள்).
கைந்நிலை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, தோழி, கைந்நிலை, இலக்கியங்கள், தலைவன், கீழ்க்கணக்கு, என்றாள், தலைவனை, நாம், பதினெண், தலைவி, முன்கை, கூறி, தலைவிக்குக், அழகிய, கண்ட, வரவு, கூறியது, வளைந்த, ஓதம், தந்த, கடந்து, வந்து, சங்க, குளிர்ந்த, இரவுக், சேர்ப்பன்