கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி
தோழிக்குக் கூறியது.
மணிநிற நெய்தல் மலர்புரையும் கண்ணாய் அணிநல முண்டிறந்து ...ம்மருளோ விட்ட துணிமுந் நீர்ச் சேர்ப்பற்குத் தூதொடு வந்த பணிமொழிப் புள்ளே பற. |
51 |
நில நிறம்பொருந்திய நெய்தற் பூப்போன்ற என் கண்போன்றவனாய்க்கூடி அழகும் உடல்நலமும் கவர்ந்து பிரிந்து நமக்கு அருள் புரியாது மறந்து விட்ட மனத்துணிவுடைய கடற்கரைத் தலைவனுக்கு (இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த அக்காலத்தில்) தூதாக வந்ததுபோலக் கானலுள் வந்திருந்த தாழ்ந்த குரலுடைய நாரையே இப்போது பறந்து செல்
வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி
தோழிக்குக் கூறியது.
அன்னையும் இல்கடிந்தாள் யாங்குஇனியாம் என்செய்கம் புன்னையங் கானலுள் புக்கருந்தும் - நின்னை நினையான் துறந்த நெடுங்கழிச் சேர்ப்பற்கு உரையேனோ பட்ட பழி. |
52 |
(நாரையே) என் தாயும் மனையினின்று நீக்கத் தக்க சொற்கள் பேசுகின்றாள் இனிமேல் எவ்விடம் சென்று நாம் என்ன செய்வோம் புன்னை மரங்களையுடைய அழகிய கழிக்கரையிற் புகுந்து மீனுண்டு நோக்கியிருந்த உன்னையும் நினையாமல் பிரிந்து சென்ற நீண்ட கழிக்கரையையுடைய நெய்தனிலத் தலைவனுக்கு: யான் அடைந்த பழிச்சொல்லுடன் கூடிய துன்பத்தைக்கூறுவேனோ (கூறாதேயிறந்து படுவேனோ யானறியேன் என்றாள்).
வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி
தோழிக்குக் கூறியது.
அலவன் வழங்கும் அடும்பிமிர் எக்கர் நிலவு நெடுங்கானல் நீடார் துறந்தார் புலவுமீன் குப்பை கவரும் துறைவன் கலவான்கொல் தோழி நமக்கு. |
53 |
நண்டுகள் போக்கும் வரவுமாகப் பயில்கின்ற அடம்பங் கொடிகள் நிறைந்த மணல் மேட்டில் உள்ள நிலாப் போன்ற நீண்ட மணற்பரந்த கானலில் நீண்டகாலத்தங்கியிராது அக்கானலை விடுத்து நீங்கிச்சென்ற பரதவர் எல்லாரும் புலால் நாற்றத்தையுடைய பல மீன் குவியலைக் கவர்ந்து வரும் நெய்த னிலத்தலைவன் (நந்தலைவன்) நம்பால் இனிக் கூடானோ (கூடுவனோ கூறுக என்றாள்.)
வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி
தோழிக்குக் கூறியது.
என்னையர் தந்த இறவுணங்கல் யாம்கடிந்து புன்னையங் கானல் இருந்தேமாப் பொய்த்தெம்மைச் சொன்னலம் கூறி நலனுண்ட சேர்ப்பனை என்னைகொல் யாம்காணு மாறு. |
54 |
(தோழீ) என் தந்தையர், உடன் பிறந்தார் வலைவீசிக் கொணர்ந்து தந்த இறால் மீனைக்கவரவரும். புள்ளினங்களையோட்டி புன்னைமரங்களை யுடைய அழகிய கானலில் நாம் இருந்தோம் ஆக, எமக்குப் பொய்யாக நல்லுரை கூறியின்பம் நுகர்ந்த நெய்தனிலத்தலைவனை (நம் தலைவனை) யாம் காணும் ஆறு என்னைகொல் - நாம் இனிக்காணும் வழியாது (அதனை யாய்ந்து கூறுக என்றாள்).
பாங்கி தலைவன் இயற்பழித்துழித் தலைவி இயற்பட
மொழிந்தது.
கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன் நக்காங்கு அசதி தனியாடித் - தக்க பொருகயல் கண்ணினாய் புல்லான் விடினே இருகையும் நில்லா வளை. |
55 |
கொக்கு என்ற பறவைகள் நிறைந்த வளைந்த கழி நிலங்கள் கூடிய குளிர்ந்த நீர்க்கரையையுடைய தலைவன் என்னை நோக்கிச் சிரித்து விளையாட்டாகப் பேசித் தழுவிப் புணராதிருப்பானாயின் என் இரண்டு கைகளிலும் உள்ள வளையல்கள் ஒன்றும் நில்லாமல் கழன்று விழும் எனக்குத் தகுதியான பிறழுங்கொண்டை மீன் போன்ற கண்களையுடைய பாங்கியே! (என்றாள் தலைவி).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, தலைவி, வழித், நீட்டித்த, தோழிக்குக், என்றாள், பிரிவு, கூறியது, வரைபொருட், இலக்கியங்கள், பதினெண், கைந்நிலை, நாம், கீழ்க்கணக்கு, கூடிய, உள்ள, கானலில், நிறைந்த, கூறுக, தலைவன், நீண்ட, என்னைகொல், தந்த, மீன், தலைவனுக்கு, பிரிந்து, கவர்ந்து, விட்ட, சங்க, நமக்கு, கானலுள், தக்க, புன்னையங், நாரையே, அழகிய