கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில்
மறுத்தது.
பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப என்னுடையை? அதன்று எனினும் அறிந்தோம்யாம் - செய்தி நெறியின் இனியசொல் நீர்வாய் மழலைச் சிறுவன் எனக்குடைமை யால். |
41 |
எச்சிலொழுகும் வாயுடன் திருந்தாத குதலையாகிய இனிய சொற்களைப்பேசும் எமது புதல்வன் எமக்குத் துணையாக இருப்பதனால் (வேறு வாழ்க்கைத்துணை வேண்டுவதின்று) வாவிகள் சூழ்ந்த நல்ல மருத நிலத்தலைவனது நற்பண்புகளை எமக்குக் கூறுவதற்கு நீ என்ன உரிமை உடையாய் அவன் பிழைசெய்தது பிழையன்று என்றாலும் முறையாக அவன் செய்தி முழுவதும் நாம் அறிந்தனம் (நீ கூறல் வேண்டுவதின்று என்றாள்.)
வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில்
மறுத்தது.
நீத்தம் நீர்ஊரன் நிலைமையும் வண்ணமும் யார்க்கு ரைத்திபாண? அதனால்யாம் என்செய்தும்? கூத்தனாக் கொண்டு குறைநீர் உடையையேல் ஆட்டுவித்து உண்ணினும் உண். |
42 |
பாணனே! பெருக்கமான நீரையுடைய மருத நிலத்தலைவனுடைய நல்லொழுக்கமும் நற்பண்புகளும் நீ யார்க்கு எடுத்துக் கூறுகின்றாய் (அவன் இயல்பு நாங்கள் அறியாதவர்களா? அறிந்தவர்களே புறத்தொழுக்கம் உடையவன் என்பதை நாங்கள் அறிந்ததனால் என்ன செய்வோம். (ஒன்றும் செய்ய வழியறியோம்) நீ உணவு உடை முதலிய குறைபாடுகளை உடையாய் என்றால் எம் தலைவனை ஆடுவோனாக அமைத்துப் பலவிடங்களில் ஆடும்படி செய்து நீ பொருள் வாங்கியுண்டாலும் உண்க. (அது குறித்து நாம் வருந்தோம் என்றாள்.)
வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில்
மறுத்தது.
போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத் தாதவிழ் கோதைத் தகையிலார் தாம்புலப்பர் ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர்மகளிர் பேதமை தம்மேலே கொண்டு. |
43 |
அரும்புகள் மலரும் தாமரைப் பூக்கள் நிறையும் நீர்த்துறையையுடைய மருத நிலத்தலைவனை (எம் காதலனை) மகரந்தம் பரவிய பூமாலை புனைந்த எழில் காட்டும் இயற்கையுடையார் (பரத்தையர்) அயலார் பெற்ற மங்கையருடைய அறியாமையைத் தம்பா லிருப்பதாக ஏற்றிக் கூறி, ஏதின்மை சொல்லி இருப்பர் பகைமை கூறி இருந்து தாம் பிணங்குகின்றனர் (என்று பலர் வாயிலாகக் கேட்கின்றேன் நான் என்றாள்)
வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில்
மறுத்தது.
தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய் வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்து கோல வனமுலையும் புல்லினான் என்றெடுத்துச் சாலவும் தூற்றும் அலர். |
44 |
அகன்ற மெல்லிய மூங்கில் போன்ற தோளுடைய பாங்கியே!, குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய மருத நிலத்தலைவன் (ஆகிய நம் தலைவன்) வண்டுகள் மொய்த்திசை பாடுகின்ற கூந்தலையுடைய பரத்தையின் திறத்தினை ஆராய்ந்து கொண்டு பரத்தையர் சேரியில் இருந்து சந்தனக்கோலமெழுதிய அழகிய கொங்கையுடையாளொருத்தியையும் மணந்தான் என்று அலர் தூற்றும் மிகவும் உயர்த்திப் பழிச்சொற் கூறுகின்றது (பரத்தையர்சேரி) (எவ்வாறு வர வேற்பேன் தலைவரை எனவாயில் மறுத்தாள்).
வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில்
மறுத்தது.
மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம் கார்த்தண் கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப் பாத்தில் பயமொழி பண்பு பலகூறி நீத்தல் அறிந்திலேம் இன்று. |
45 |
பாணனே! நம் தலைவனுக்கு முன்னாளில் இளமைப் பருவமுடையோமாய் நாமிருந்தோம் ஆதலால் வாழ்க்கைத் துணையாயினோம் இஞ்ஞான்று மூப்புப் பருவமடைந்தோம் (ஆதலால் வெறுத்தனன்) நீர்நிறைந்த குளிர்ந்த தழைத்த வயல் சூழ்ந்த மருத நிலத்தலைவன் (எம் தலைவன்) எமக்குப் பிரிவில்லாத பயன்தரத்தக்க சொற்களையும் அவன் நற்பண்புகளையும் எடுத்துக்கூறிக் கூடிக்கலந்து விரைவில் இந்நாளில் எம்மை விட்டுப் பிரிந்துவிடுவான் என்பதை அந்நாள் அறியாமல் இருந்தோம். (அறிந்தாற் கூடிவாழ்வேமா என்று கூறினள்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, வந்த, தலைவி, மறுத்தது, மருத, வாயிலாக, வாயில், இலக்கியங்கள், பாணனுக்குத், அவன், பதினெண், கீழ்க்கணக்கு, கைந்நிலை, என்றாள், கொண்டு, இருந்து, பரத்தையர், சொல்லி, இருப்பர், கூறி, நிலத்தலைவன், தலைவன், ஆதலால், ஏதின்மை, குளிர்ந்த, அலர், தூற்றும், நாம், சூழ்ந்த, வேண்டுவதின்று, செய்தி, சங்க, என்ன, உடையாய், என்பதை, நாங்கள், பாணனே, யார்க்கு, தாமரைப்