கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில்
மறுத்தது.
கயநீர்ப் பாய்ந்தோடும் காஞ்சிநல் ஊரன் நயமே பலசொல்லி நாணினன் போன்றான் பயமில் யாழ்ப்பாண பழுதாய கூறாது எழுநீபோ நீடாது மற்று. |
46 |
ஒருபயனும் இல்லாத யாழைக் கையில் தாங்கிய பாணனே! பொய்கை நீர்பரந்து விரைந்து ஓடுகின்ற காஞ்சி மரங்கள் நிறைந்த நல்ல மருதநிலத் தலைவன் (எம் தலைவன்) அந்நாளில் இனிமையான பல சொற்களைக் கூறி என்னை மணந்து இந்நாளில் எம்மனைக்கு வருவதற்கு நாணியவன் போல மறைந்திருக்கின்றான் வீணான சொற்களை எம்பாற் கூறாமல் நீ நீடித்திராது எழுந்து விரைவிற் போவாய் (என்றாள்).
வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில்
மறுத்தது.
அரக்காம்பல் தாமரை அம்செங் கழுநீர் ஒருக்கார்ந்த வல்லி ஒலித்தாரக் குத்துஞ் செருக்கார் வளவயல்ஊரன் பொய்ப் பாண இருக்கஎம் இல்லுள் வாரல். |
47 |
செங்குமுதமும் செந்தாமரை வெண்டாமரையும் அழகிய செங்கழுநீரும் ஒன்றாக நிறைந்த அல்லியும் (ஆகிய இவைகளெல்லாம்) ஒலித்து ஆர குத்தும் - தழைத்து நெருங்கி ஒன்றோடொன்று குத்திக்கொள்ளும் இயல்புடைய களிப்புத்தரும் வளம் நிறைந்த வயல் சூழ்ந்த மருத நிலத்தலைவனுடைய பொய்யுரை கூறும் பாணனே! நின் தலைவன் பரத்தையர் சேரியின் கண்ணே தங்குக எம்மனைக்கு வாரற்க (என்றாள்).
வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில்
மறுத்தது.
கொக்கார் வளவயல்ஊரன் குளிர் சாந்தம் மிக்க வனமுலை புல்லான் பொலிவுடைத்தா தக்கயாழ்ப் பாணதளர் முலையாய் மூத்தமைந்தார் உத்தரம் வேண்டா வரல். |
48 |
தலைவனுக்குத் தகுதியான யாழைக் கையிற்பற்றிய பாணனே! கொக்கு என்ற பறவைகள் மீன் பிடித்துத் தின்பது கருதி வந்து நிறைந்திருக்கும் வளம் பொருந்திய வயல் சூழ்ந்த ஊரன் (எம் தலைவன்) குளிர்ந்த சந்தனக்குழம்பு பூசிய எழில் மிகுந்த பரத்தையர் கொங்கைகளை தன்னுடல் விளக்கமுறும்படி தழுவாமல் சரிந்த கொங்கையாகி மூப்புப் பொருந்திய மகளிர் ஆகிய எச்சில் வேண்டா. இங்கு வாரற்க (என்றாள்).
5.பாலை
வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி
தோழிக்குக் கூறியது.
நாவாய் வழங்கு நனிதிரைத் தண்கடலுள் ஓவா கலந்தார்க்கு ஒல்லென் இறாக்குப்பைப் பாவாரம் சேர்ப்பதற்கு உரையாய் பரியாது நோயான் நுணுகிய வாறு. |
49 |
மரக்கலம் செல்லும் செறிந்த திரைகளையுடைய குளிர்ந்த கடலினுள் நீங்காமல் சேர்ந்து ஒல்லென ஒலித்துத்திரியும் இறவு மீன்களின் குவியல் பரவிய கடற்கரையையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு காமநோயால் பொறுக்கலாற்றாது நான் உடல் மெலிந்த வாற்றினை (தோழி நீ) கூறுவாய் (என்றாள்).
வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி
தோழிக்குக் கூறியது.
நெடுங்கடல் சேர்ப்ப நின்னோடு உரையேன் ஒடுங்கு மடற்பெண்ணை அன்றிற்கும் சொல்லேன் கடுஞ்சூளில் தான்கண்டு கானலுள் மேயும் தடந்தாள் மடநாராய் கேள். |
50 |
நீண்ட கடற்கரையாம் ஆடவனே. நின்னோடு உரையேன் - உன்னோடு நான் ஒன்றுங்கூறேன். ஒடுங்கிய மடல் பொருந்திய பனையில் வாழும் அன்றிற்பறவைகட்கும் உரையேன். எம் தலைவன் கடுமையான சூளுரைக்கும்போது நோக்கிக் கானலுள் மேய்ந்திருந்த பெரிய கால்களையும் இளமைப் பருவத்தையுமுடைய நாரையே நான் உன்னிடமே கூறுகின்றேன் நீயே கேட்பாய். (என்று தலைவி புலம்பினாள்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, தலைவி, தலைவன், இலக்கியங்கள், என்றாள், கைந்நிலை, பொருந்திய, பாணனே, நிறைந்த, உரையேன், நான், மறுத்தது, கீழ்க்கணக்கு, பதினெண், வந்த, வாயிலாக, வாயில், பாணனுக்குத், பிரிவு, வரைபொருட், குளிர்ந்த, நீட்டித்த, நின்னோடு, கானலுள், கூறியது, தோழிக்குக், வழித், வளவயல்ஊரன், எம்மனைக்கு, யாழைக், ஊரன், சங்க, ஆகிய, வளம், வாரற்க, பரத்தையர், சூழ்ந்த, வயல், வேண்டா