ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

5. நெய்தல்
இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து) ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ பூந்தலை அன்றில் புலம்பு. |
41 |
"ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த பூவினைப் போன்ற தலையையுடைய அன்றில் பறவை நேற்று இரவு விடியுமளவும் வருந்தியது என்ன காரணமோ?" என்று தோழி தலைமகளை வினவினாள்.
கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம் ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர் கடந்த வழியைஎம் கண்ணாரக் காண நடந்து சிதையாதி நீ. |
42 |
"வளைந்த கால்களையுடைய நண்டே! ஒரு வேண்டுகோளை நாம் உன்னிடத்தில் கேட்டுக் கொள்கிறோம். குறையாத ஒலியையுடைய கடலைச் சார்ந்த எம் நெய்தல் நிலத் தலைவனது பெரிய தேரானது என்னைப் பிரிந்து சென்ற காலத்து ஊர்ந்து சென்ற தேர்ச் சக்கரங்கள் பதிந்த சுவடுகளை, எம்முடைய கண்கள் நன்றாகப் பார்க்கும்படி அதன் மேல் சென்று நீ அழிக்காமல் இருப்பாயாக" என்று தலைவி கடற்கரையில் கண்ட நண்டிடத்து மிகுந்த துன்பத்துடன் கூறினாள்.
பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை வரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத் தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல் ஆழியால் காணாமோ யாம். |
43 |
"தாழ்ந்து ஆழமாக உள்ள கடலோடு கூடிய குளிர்ந்த துறைமுகத்தையுடைய தலைவனது மாலைகள் அணிந்த மார்பினை நமக்குக் கொடுப்பது உறுதியெனின், பொரிந்த பல்லியின் முட்டையினைப் போன்ற அரும்புகளைத் தோற்றுவித்த புன்னை மரத்தினது பூந்துகள் வரியாகக் கிடக்கும் மேற்பாகத்தினையுடைய உயர்ந்த மணல் மேட்டின் மீது ஏறிச் சென்று அமர்ந்து இருந்து, கூடல் இழைப்பதன் வாயிலாய் நாம் அதனை அறிய மாட்டோமா?" என்று தலைவி தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.
கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம் கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென் வண்டல் சிதைத்ததென் றேன். |
44 |
"இற்செறிந்த காரணத்தால் நின் தலைவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலையைப் பார்த்து, மையுண்ட கண்கள் சிவக்கும்படி கண்ணீர் விட்டு நின்றேன். அப்பொழுது செவிலித்தாய் ஒளிமிக்க என் முகத்தைப் பார்த்து 'உனக்குற்ற துன்பம் யாது?' எனக் கேட்டாள். அதற்கு நான் 'கடலின் அலையானது தரை மீது மோதி என் விளையாட்டுச் சிற்றிலை அழித்து விட்டது' என்று கூறினேன்" என்று தோழி, பகற்குறிக்கண் மறைந்திருக்கும் தலைவன் கேட்கும்படி தலைவியினுடைய இற்செறிப்பைக் குறிப்பாகக் கூறினாள்.
ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன் சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை மாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோ பூந்தண் பொழிலுள் குருகு. |
45 |
"மாந்தளிர் போன்ற மேனியையுடைய மங்கையே! பெரிய உப்பங்கழிகளைக் கொண்ட குளிர்ந்த கடற்கரைத் தலைவன், மிகக் குளிர்ந்த சோலையுள் என்னைக் கலந்து, பின்பு என் வளையல்கள் அணிந்த தோள்களைப் பற்றி என் உள்ள வருத்தத்தைப் போக்குவதாகச் சொன்ன உறுதிமொழிகளைப் பொலிவோடு விளங்கும் குளிர்ந்த அச்சோலையுள் வாழும் பறவைகள் உண்மையாக மறந்துவிடுமோ?" எனத் தலைவி தோழியிடம் சொல்லித் தன் மண வேட்கையைக் குறிப்பாகத் தெரிவித்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, குளிர்ந்த, இலக்கியங்கள், தலைவன், அணிந்த, சென்ற, பிரிந்து, தலைவி, ஐந்திணை, கண்கள், அன்றில், பதினெண், கீழ்க்கணக்கு, ஐம்பது, சென்று, புன்னை, கூறினாள், தண்சேர்ப்பன், பார்த்து, பொழிலுள், மாந்தளிர், உள்ள, மீது, மிகக், சார்ந்த, சேர்ப்பன், கடல், நெய்தல், சங்க, நின், ஒளிமிக்க, தலைவனது, நாம், தோழி, பறவை, பெரிய