ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

4. பாலை
இடம் - குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி (நீர்வற்றிய இடம்)
ஒழுக்கம் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
உதிரம் துவரிய வேங்கை உகிர்போல் எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்(கு) இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும் துன்பம் கலந்தழியும் நெஞ்சு. |
31 |
"உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் துன்பத்தினால் அழிகின்றது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்.
விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர் அழற்பட்(டு) அசைந்த பிடியை - எழிற்களிறு கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்(டு) உச்சி ஒழுக்கஞ் சுரம். |
32 |
பிடி- பெண் யானை, களிறு-ஆண் யானை.
"அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே! காட்டுத்தீயில் அகப்பட்டு வருந்தும் பெண்யானை மீது அன்புகொண்ட அழகிய ஆண்யானை, மலைச் சுனையில் இருந்த சேற்றோடு கூடிய சிறிதளவினவான நீரைத் தன் துதிக்கையால் முகந்து தன் பெண்யானையினது தலை உச்சியில் பெய்தற்கு இடமான பாலை நில வழியில் நம் தலைவர் செல்லமாட்டார். ஆகலின் அவர் பயணத்தை விலக்க வேண்டாம்" எனத் தலைவனின் பிரிவை அறிந்து ஆற்றாத தலைவியைத் தோழி தேற்றினாள்.
பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் ஆயமும் ஒன்றும் இவைநினையாள் - பால்போலும் ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின் காய்ந்து கதிர்தெறூஉங் காடு. |
33 |
"பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?" என்று நற்றாய், தன் மகளைக் குறித்துத் துன்புற்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர் ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி வேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர் வாள்தடங்கண் மாதரை நீத்து. |
34 |
"தலைவனே! வாள் போன்ற ஒளிமிக்க அகன்ற கண்களையுடைய எம் தலைவியைப் பிரிந்து, வளைகின்ற மூங்கிலாகிய வலிமையான வில்லினால் கொலைத் தொழிலைச் செய்யும் மறவர்கள், வழியில் செல்கின்ற புதியவரிடம் கொள்ளையடித்து, வருந்தும்படியான கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து, வேட்டையாடுவதற்குரிய கொடுமைமிக்க காட்டிற்குச் செல்வீரோ?" என்று தோழி தலைவனை வினவினாள்.
கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த தடிநிணம் மாந்திய பேஎய் - நடுகல் விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர் பொருள்புரிந்தார் போய சுரம். |
35 |
"பொருள்வயின் பிரிந்த எம் தலைவர் சென்ற பாலை நிலத்துவழி, வளைந்த வில்லினையுடைய வேட்டுவர் தம்முடைய கொலைக் கருவிகளால் வீழ்த்திய தசையையும், கொழுப்பையும் தின்ற பேய்கள் போரிலே மடிந்தாரின் பெயர் வரையப்பட்ட நடுகல்லின் நிழலில் உறங்கும் படியான கொடிய காட்டிலே உள்ளது என்று சொல்வர்" என்று தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்து சென்ற பாலை நிலத்தின் கொடிய தன்மையை எடுத்துக் கூறினாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, பாலை, இலக்கியங்கள், ஐம்பது, ஐந்திணை, வழியில், பதினெண், கீழ்க்கணக்கு, தோழி, தலைவர், அழகிய, கொடிய, சென்ற, பிரிந்து, தோழியிடம், இடம், சங்க, எனத், தலைவி, சுரம், கூறினாள், யானை