ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி செல்சார் வுடையார்க் கினியவாய் - நல்லாய்மற்(று) யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை ஈரும் இருள்மாலை வந்து. |
6 |
மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.
தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை ஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் - சீர்சால் சிறுகுழல ஓசை செறிதொடி! வேல்கொண்(டு) எறிவது போலும் எனக்கு. |
7 |
கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது.
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி பொருந்தினர் மேனிபோல் பொற்பத் - திருந்திழாய வானம் பொழியவும் வாரார்கொல் இன்னா கானம் கடந்துசென் றார். |
8 |
வள்ளி - கொடி, பொற்ப - பொலிய, கானம் - காடு.
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.
வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு) உருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேல் பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு) ஈன்றன வம்ப மறையுறக் கேட்டு. |
9 |
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! ஆராய்ந்து பார்ப்பின் காலமல்லாத காலத்தில் புதிதாகத் தோன்றிய மேகங்கள் கூடி முழங்கக் கேட்ட முல்லைக் கொடிகள் அரும்புகளைத் தோற்றுவித்தன என்பது தெரியவரும். ஆகவே நம் தலைவர் கார்ப்பருவம் வரும்போது தவறாது வந்து சேர்வர். ஆதலின் கண்களில் நீர் பெருகத் துன்புற்று அழிய வேண்டா" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள்.
நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக தேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் - தான்நவின்ற கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி நிற்பாள் நிலையுணர்கம் யாம். |
10 |
"கலை நூல்களை நன்றாகக் கற்றறிந்த தேர்ப்பாகனே! வண்டுகள் இசைபாடும் காட்டின் அழகினைப் பார்த்து, தான் நாள்தோறும் போற்றி வந்த கற்பு நெறியினைக் காப்பாற்றி, கன்னத்தின் மீது இடக்கையினை ஊன்றி, வழிமேல் விழி வைத்துக் காத்து நிற்பவளாகிய என் தலைவியின் நிலையை நாம் சென்று காண்போம். அதற்குத் தகுதியாக நமது தேர் விரைவாகச் செல்லட்டும்" என்று தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், முல்லை, ஐந்திணை, கீழ்க்கணக்கு, ஐம்பது, பதினெண், வடிவம், தலைவியே, போலப், காதலியரின், வேண்டா, தேர், அணிந்துள்ள, தோழி, கொடிகள், வள்ளி, எனக்கு, வந்து, சங்க, வந்த, துன்பத்தைத், அழகிய, கானம், மேனிபோல், அணிகலன்களை