ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டு மடிசெவி வேழம் இரீஇ - அடியோசை அஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள் துஞ்சா சுடர்த்தொடி கண். |
16 |
"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.
மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட ! எஞ்சாது நீவருதி யென்றெண்ணி - அஞ்சித் திருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர் உருஒடுங்கும் உள்ளுருகி நின்று. |
17 |
"மேகங்கள் படர்ந்து செல்லுகின்ற பூஞ்சோலைகளையுடைய வளம்மிக்க மலைகளையுடைய நல்நாட்டுத் தலைவனே! இலக்குமியும் தோற்கும்படியான நல் அழகினையுடைய தேன்பொருந்திய மலர் மாலையை அணிந்த தலைவியானவள், இரவின் கண் தவறாமல் இவ்வழியின்கண் வருகின்றாய் என்று எண்ணி உனக்கு என்ன தீங்கு நேருமோ என அஞ்சி மனத்துன்பம் மிக்கு தன் அழகிய மேனி வாட்டம் அடைய மெலிந்து நிற்கின்றாள்" என்று தோழி தலைவனுக்குக் கூறினாள். எனவே விரைவில் மணம் செய்ய வேண்டும் என்று தூண்டுகிறாள்.
எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல் மறந்தும் கிளியனமும் வாரா - கறங்கருவி மாமலை நாட! மடமொழி தன்கேண்மை நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு. |
18 |
"ஒலிக்கின்ற அருவிகளையுடைய பெரிய மலை நாட்டுத்தலைவனே! எம்மவர்களாகிய குறவர்கள் மரஞ்செடி கொடிகளை வெட்டி ஒழுங்குபடுத்திப் பயிரிட்ட குளிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்துக்கு இனி நாங்களும் கிளிக்கூட்டங்களும் மறந்தும் வரமாட்டோம். ஆதலின் அறியாமை பொருந்திய சொற்களைப் பேசும் தலைவியின் நட்பை மனதில் வைத்து மறவாதிருப்பாயாக" என்று செவிலித்தாயுடன் தலைவி வீட்டுக்குச் செல்லும் போது தோழி மறைந்திருக்கும் தலைவனிடம் இனி தாங்கள் வீட்டிலே இருக்க நேரிடுவதைக் கூறி, விரைவில் மணந்து கொள்ளும்படி குறிப்பாக எடுத்துக் காட்டினாள்.
நெடுமலை நன்னாட! நீள்வேல் துணையாக கடுவிசை வாலருவி நீந்தி - நடுஇருள் இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள் என்னாவாள் என்னும்என் நெஞ்சு. |
19 |
"நீண்டு உயர்ந்த மலைகளையுடைய நல் நாட்டுத் தலைவனே! நீண்ட வேலினையே துணையாகக் கொண்டு, விரைவாக ஓடும் வெண்மை நிறமுடைய அருவிகளைக் கடந்து, நள்ளிரவில் இடையூறுகள் பொருந்திய வழியில் வருவதை நினைத்தால், குளிர்ந்த பூமாலை அணிந்த நின் தலைவி என்ன நிலையை அடைவாளோ என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது" என்று வழியினது நிலையைக் கூறி அவ்வழியில் இரவில் வாராதிருக்குமாறு தோழி தலைவனை வேண்டினாள்.
வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்ட(து) அறியான்மற்(று) அன்னோ! அணங்(கு) அணங்கிற்(று) என்று மறிஈர்த்(து) உதிரம்தூய் வேலன் தரீஇ வெறியோ(டு) அலம்வரும் யாய். |
20 |
"தோழி, நம் அன்னையான செவிலித்தாய் மணங்கமழ்கின்ற மலைநாட்டுத் தலைவன் என்மேனியின் இயல்பான தன்மையைக் களவுப்புணர்ச்சியின் மூலம் கவர்ந்து கொண்டான் என்பதனை அறியாதவளாய், 'ஐயோ! தெய்வம் என்னை வருத்திற்று' என்று நினைத்து, வேலைக் கையில் ஏந்தி அருள் கொண்டு ஆடும் வேலனை வரவழைத்து, முருகனுக்குப் பூசையிடுதலாகிய வெறியாடுதலில் ஈடுபட்டு வருந்திக் கொண்டிருக்கிறாள்" என்று தலைவி தோழியிடம் கூறி அறத்தொடு நின்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, தோழி, இலக்கியங்கள், அணிந்த, ஐந்திணை, தலைவி, விரைவில், அஞ்சி, கீழ்க்கணக்கு, கொண்டு, கூறி, ஐம்பது, பதினெண், மறந்தும், என்ன, பொருந்திய, தலைவனே, குளிர்ந்த, மணம், வழியில், சங்க, வேண்டும், தலைவியின், நன்னாட, கூறினாள், மலைகளையுடைய