ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப் பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும் வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய் தொடியோடி வீழத் துறந்து. |
36 |
"தோழியே! என் கைவளையல்கள் கழன்று விழும்படி என் காதலர் என்னை விட்டு நீங்கி, விரைந்து ஓடும் கானல் நீரைத் தண்ணீராக்கும் என்று எண்ணி, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் ஒன்று சேர்ந்து போய்க் கால்கள் ஓய்ந்து விழும்படியான வெடிப்புகள் நிறைந்த கொடிய காட்டு வழியில் செல்வாரோ?" என்று தோழியிடம் தலைவி தலைவன் பிரிவு குறித்துக் கூறினாள்.
தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால் வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல் வல்லவோ மாதர் நடை. |
37 |
"தோழியர்கள் நாற்புறமும் சூழும்படி முற்றத்தில் என் மகள் விளையாடும் பொழுதிலும் விழுந்து விடுபவளைப் போன்று தளர்கின்ற அவளுடைய மென்மையான கால்கள், கற்கள் நிரம்பிய வழியான அருஞ்சுரத்தில் தன் தலைவன் பின்னால் ஓய்ந்து போகாமல் செல்லுதலில் வல்லனவோ?" என்று உடன்போக்குச் சென்ற தன் மகள் குறித்து நற்றாய் வருந்திக் கூறினாள்.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி. |
38 |
கலைமான் - ஆண்மான், பிணை - பெண்.
"நம் காதலர் தமது மனத்தினால் விரும்பிச் சென்ற வழியானது, ஆண்மான் அங்குள்ள சுனையிலுள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு இது இருவரும் பருகப் போதாது என எண்ணி, தன்னுடைய பெண்மான் மட்டும் குடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி, பொய்யாகக் குடிப்பது போல உறிஞ்சும் என்று பாலை நிலவழி பற்றிச் சொல்லுவர்" என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள்.
மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோடப் புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்து விம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ நம்மில் பிரிந்த இடத்து. |
39 |
"நல்ல மனமே! நம்மை விட்டுப் பிரிகின்ற சிறிய அளவு காலத்திலும், பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பம் மிகுந்து, ஏங்கி, நெடுமூச்செறிகின்ற தலைவி, சிறந்த பொருளைத் தேடுதலுக்காக நாம் அவள் அறியா வண்ணம் சென்றால் பொறுப்பாளோ? பொறாது உயிர் நீப்பாள். இதனை நீ அறியவில்லை. ஆதலால் நீ பெரிதும் அறிவற்றவன்" என்று தலைவன் பொருள் இன்றியமையாதது என்று சொன்ன நெஞ்சிற்கு எடுத்துக் கூறித் தன் செலவைத் தவிர்த்தான்.
இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம் குன்றதர் அத்தம் இறந்து தமியமாய் என்கொலே சேக்கும் இடம். |
40 |
"நல்ல மனமே இன்றைய இரவில் குளிர்ந்த மலர்ப் படுக்கையில் எம் தலைவியின் தோள்கள் பேரின்பத்திற்குத் துணையாகுமாறு நன்றாகத் தங்கியுள்ளாய்; நாளை நாம் சிறு குன்றுகளுக்கு இடையே செல்லும் வழியாகிய அருநெறி வழியே துணையின்றிப் போகும்போது அப்பாலை நிலத்தில் தங்குமிடம் யாதோ?" என்று பொருள் இன்றியமையாதது என்று கூறிய நெஞ்சிற்கு இவ்வாறு கூறித் தன் செலவினைத் தவிர்த்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், ஐந்திணை, காதலர், ஐம்பது, தலைவன், பதினெண், கீழ்க்கணக்கு, மனமே, நாம், அளவு, நல்ல, நெஞ்சிற்கு, தவிர்த்தான், கூறித், சிறிய, இன்றியமையாதது, பொருள், கூறினாள், எண்ணி, ஓடும், சங்க, கால்கள், ஓய்ந்து, சென்ற, மகள், தலைவி, ஆண்மான்