ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம் பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும் கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி தோள்நலம் தோற்பித்தல் நீ. |
46 |
"அலைகளால் சேர்க்கப்பட்ட ஒலிக்கும் கடலில் விளைந்த குளிர்ந்த முத்துக்களைப் பேதைப் பருவமுடைய சிறு பெண்கள் தம் விளையாட்டு மனைக்கு விளக்குகளாகக் கொண்டு விளையாடற்கு இடமான கடற்கரைச் சோலையையுடைய அழகிய கடற்கரைத் தலைவனே! நீ என் தோழியான தலைவியின் தோள்களின் நலத்தை திருமண வேட்கையால் மெலிவித்தல் சரியா?" என்று தோழி தலைவனை வினவினாள்.
பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன் உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர் அணங்காகும் ஆற்ற எமக்கு. |
47 |
"பெருங்கடலானது கலங்கும்படி, நுண்ணிய வலையை வீசி, ஒன்றாகத் தமையன்மார்கள் கொண்டு வந்த கொழுத்த மீன்களை, வெயிலில் காயவைத்து வற்றலாக்குங்கால், அவற்றைக் கவர்ந்து செல்லவரும் பறவைகளைக் கவரவிடாமல் பாதுகாக்கும், மின்னும் அணிகளை அணிந்த அப்பெண், மிகுதியும் எம்மை வருத்தும் தெய்வம் போல் ஆவாள்" என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.
எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியா தார். |
48 |
"அலையானது கரைமேல் மோதி உருவாக்கிய மணலின் மீது, அந்த அலையால் கொணரப்பட்ட முத்துக்கள் நின்று நிலையாய் ஒளி வீசும் நீண்ட உப்பங்கழிகளையுடைய தலைவனே! தம்மைச் சேர்ந்தாரின் குறைகளை விலக்க முன்வராதவர் உலகத்தவரால் போற்றப்படுவரா? போற்றப்பட மாட்டார்" எனத் தலைவியின் மண விருப்பத்தை முடிக்கும்படி தோழி தலைவனிடத்தில் குறிப்பாய்க் கூறினாள்.
கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம் தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன் செய்தான் தெளியாக் குறி. |
49 |
"வளைந்த முள்ளையுடைய மடல்களைக் கொண்ட தாழையினது குவிதல் நீங்கி மலர்ந்த ஒளிமிக்க மலரானது நடுவேயுள்ள சோற்றினால் வெண்ணெயினைப் போல் வெளிப்பட்டுப் பக்கங்களில் எல்லாம் தெய்வமணத்தைப் போல் மணம் கமழும் தெளிந்த கடலையுடைய குளிர்ந்த துறையையுடைய தலைவன், நம்மால் அறிந்து கொள்ள முடியாத குறியினைச் செய்து விட்டான்" என்று தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறினாள்.
அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும் புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய் உள்ளுருகு நெஞ்சினேன் ஆய். |
50 |
"ஒளியோடு கூடிய அணிகலன்களை அணிந்த பெண்ணே! அழகிய கடலோடு கூடிய குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் அணிந்திருக்கும் மணியோசை கேட்கின்றது என எண்ணி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஆனால் பழங்களை விரும்பி உண்ண வந்த பறவைகளின் ஒலியைக் கேட்டுத் தலைவனின் தேர் மணியோசை அன்று என்று வருந்தி அவ்வருத்தமுடைய நெஞ்சத்தோடு நான் திரும்பினேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
ஐந்திணை ஐம்பது முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, தோழி, இலக்கியங்கள், ஐம்பது, ஐந்திணை, போல், கூறினாள், குளிர்ந்த, கீழ்க்கணக்கு, பதினெண், மணியோசை, தலைவன், கூடிய, தண்சேர்ப்பன், கமழும், தெய்வம், தலைவியின், கொண்டு, ஓதம், சங்க, அழகிய, தலைவனே, வந்த, வீசி, அணிந்த