ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

3. மருதம்
இடம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி நுண்துளைத் துன்னூ விற்பாரின் - ஒன்றானும் வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத் தேற எமக்குரைப்பாய் நீ. |
21 |
"பாணனே! அகன்ற மருத நிலத்து ஊர்த் தலைவன் சொல்லி விடுத்த மொழிகளைத் தெளிவாக எமக்கு எடுத்துரைப்பாய். பொருளைக் கொள்முதல் செய்தவிடத்துச் சொன்ன விலையை வேறுபடுத்தி மிகுத்துக் கொல்லர் தெருவின்கண் நுண்மையான துளையையுடைய ஊசியினை விற்கின்ற வணிகரை விட ஒருவகையிலும் நீ வேறுபடவில்லை" எனத் தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.
போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத் தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான் அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள் என்செய்ய வந்தாய் நெறிஅதுகாண் எங்கையர் இற்கு. |
22 |
"மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் நீர் வளம் மிக்க நன்செய் நிலங்களையுடைய மருத நிலத்து ஊர்த் தலைவனுக்குத் தூதனாய்த் திரியும் பாணனே! நீ அறிவு கெட்டுப்போய் எங்களுடைய மனைக்கு என்ன நன்மை செய்ய வந்தாய்? எம் தலைவனால் விரும்பப்பட்ட எம் தங்கையரான மங்கையரின் (பரத்தையர்) மனைக்குச் செல்லும் வழி அதோ இருக்கிறது. அதைக்கண்டு அங்குச் செல்வாயாக" என்று தலைவி பாணனது அறியாமையை எடுத்துக்காட்டி வாயில் மறுத்தாள். (வண்டுகள் போல் தலைவன் பலரிடம் செல்கிறான் என்று அர்த்தம்.)
யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல் பாண! பரிந்துரைக்க வேண்டுமோ - மாண அறிவ(து) அறியும் அறிவினார் கேண்மை நெறியே உரையாதோ மற்று. |
23 |
"பாணனே! புதிய வருவாயையுடைய அகன்ற மருத நிலத்தூர்த் தலைவன் எம்மிடம் மிகுதியான அன்பு கொண்டவனாக இருப்பதை, அவனுக்காக எங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ? அறிய வேண்டியதை அறிந்த அறிவுடையோர் கைக்கொள்ளும் நட்பானதை அவரது போக்கே உரைக்காதோ?" என்று கூறித் தலைவி பாணனுக்கு வாயில் மறுத்தாள்.
கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளை நீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு - மேல்எலாம் சார்தற்குச் சந்தனச்சாந்(து) ஆயினேம் இப்பருவம் காரத்தின் வெய்யஎம் தோள். |
24 |
"பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.
அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன் விழைதரு மார்பம் உறுநோய் - விழையின் குழலும் குடுமிஎன் பாலகன் கூறும் மழலைவாய் கட்டுரை யால். |
25 |
"நெருப்பினைப் போல் மலர்கின்ற செந்தாமரை மலர்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மருத நிலத் தலைவனது காண்பவரால் விரும்பப்படும் மார்பானது, மென்மைத் தன்மையால் சுழன்று விழும்படியான சிகையினையுடைய என் மகன் கூறும் மழலைச் சிறு சொற்களைக் கேட்க விரும்பி என் தலைவன் என்னைக் கூடினால் துன்பத்தை அடையும்" என்று வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, வாயில், மருத, பாணனே, தலைவி, இலக்கியங்கள், தலைவன், பதினெண், மறுத்துக், கூறினாள், ஐந்திணை, ஐம்பது, கீழ்க்கணக்கு, போல், மறுத்தாள், வேண்டுமோ, கூறும், நிலத்தூர்த், வண்டுகள், வந்தாய், நிலத்து, பாணற்கு, சங்க, அகன்ற, ஊர்த்