ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

பெய்வளைக் கையாய்! பெருநகை ஆகின்ற செய்வய லூரன் வதுவை விழ(வு)இயம்பக் கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன் எய்தி இடருற்ற வாறு. |
26 |
"வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.
தணவயல் ஊரன் புலக்கும் தகையமோ நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல் வெண்மரல் போல நிறந்திரிந்து வேறாய வண்ணம் உடையேம்மற்(று) யாம். |
27 |
"நுண்மையான ஆற்றின் நொய் மணல் போலக் கருமையாயிருந்த எம்முடைய ஐவகைப்பட்ட கூந்தலானது வெண்மையான மரலைப் போல நிறம் மாறுபடலால் மாறுபட்ட தன்மையைப் பெற்றிருக்கிறோம். எனவே குளிர்ந்த நன்செய் நிலங்கள் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனோடு கூடும் தகுதியினைப் பெற்றுள்ளோமா?" என்று வாயில் வேண்டி வந்தார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.
ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு வல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் - நில்லென்னா(து) ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும் நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு. |
28 |
"ஒல் என்று ஓசையிடும் அருவியினை உடைய ஊரில் என் வலிமையான நெஞ்சினையும் வாள் போன்ற கண்ணையுமுடைய தோழியே! முன்பு என் மகன் தெருவிலே தேர் மீது ஏறிச்சென்ற தன் தந்தையான தலைவனைக் கண்டு, விரும்பிப் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த நிலையைப் பார்த்தும், தலைவன் பாகனைத் 'தேரோட்டுபவனே சிறிது நில்' என்று சொல்லாமல், என் மகனைச் சிறிதும் பாராமல் தேரினைச் செலுத்தச் செய்து, பரத்தையர் இல்லத்துக்குப் போனான். அதனால் என் மனமானது என் தலைவனிடம் இரக்கம் காட்டாததாயிற்று" என்று தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்துக் கூறினாள்.
ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம் புல்லேன்யான் என்பேன் புனையிழையாய்! - புல்லேன் எனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன் தனக்(கு)ஏவல் செய்தொழுகு வேன். |
29 |
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.
குளிரும் பருவத்தே யாயினும் தென்றல் வளியெறியின் மெய்யிற்(கு) இனிதாம் - ஒளியிழாய் ! ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி கூடல் இனிதாம் எனக்கு. |
30 |
"ஒளி வீசும் அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! குளிர்காற்று வீசும் மாரிக் காலமானாலும் தென்றல் காற்று வீசினால் நமது உடம்பிற்கு இன்பம் உண்டாகும். அதுபோல என் தலைவனைக் காணாதபொழுது அவன் செய்த தவற்றினை நினைத்து ஊடியிருப்பேனாயினும் அவனைக் கண்டபோது அவன் தவறுகள் எல்லாம் எனக்குப் புலப்படா. ஆதலின் அவனுடைய மணமிகுந்த மேனியைக் கூடுதலானது எனக்கு இன்பமாயுள்ளது" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, தலைமகள், தோழியே, ஊரன், கூறினாள், இலக்கியங்கள், வாயில், ஐந்திணை, பதினெண், ஐம்பது, அவனைக், எனக்கு, கீழ்க்கணக்கு, மருத, தலைவன், சூழ்ந்த, பரத்தையர், அணிந்துள்ள, அணிகலன்களை, அவன், தோழியிடம், தலைவனைக், வீசும், தென்றல், இனிதாம், மறுத்துக், தோழிக்கு, மீது, நன்செய், நிலத்தூர்த், சங்க, ஒலிபுனல், ஒல்லென், கண்டு