ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

2. குறிஞ்சி
இடம் - மலையும் மலை சார்ந்த இடமும்
ஒழுக்கம் - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள் நன்மலை நாடன் நலம்புனைய -மென்முலையாய் போயின சின்னாள் புனத்து மறையினால் ஏயினார் இன்றி இனிது. |
11 |
"மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! நல்ல மலை வளமிக்க நாட்டுத்தலைவன் தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள் நிறைந்துள்ள அழகுடைய சோலையின்கண் நின்னோடு கலந்தபின் எவருடைய குறுக்கீடும் இல்லாமல் இன்பமாய்ச் சில நாட்கள் கழிந்தன. இனி என்ன ஆகுமோ, அறியேன்" என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.
மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல் காவல் இயற்கை ஒழிந்தேம்எம் - தூஅருவி பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும் பாக்கம் இதுஎம் இடம். |
12 |
"பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்" என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள்.
கானக நாடன் கலவான்என் தோளென்று மானமர் கண்ணாய்! மயங்கல்நீ - நானம் கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப் புலம்பும் அகன்றுநில் லா. |
13 |
"மான் போன்று மருளும் கண்களையுடைய தோழியே! காடுகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவன், இற்செறிப்பில் இருக்கும் என் தோள்களில் தழுவான் என்று நினைத்து நீ வருந்த வேண்டா! நம் தலைவனது நாட்டைச் சேர்ந்த நன்மலையிலிருந்து வீழ்கின்ற அருவியில் நாம் நீராடினால் தலைவனைச் சேராமையால் உண்டாகும் துன்பங்கள் எல்லாம் நில்லாது நீங்கும்" என்று இற்செறிப்புற்ற தலைவி தோழியிடம் கூறினாள்.
புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல் தினைகாத் திரும்தேம்யாம் ஆக - வினைவாய்த்து மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் தாம்வினவ லுற்றதொன் றுண்டு. |
14 |
"தொடுக்கப்பட்ட மலர்களுடன் கூடிய தழைகளால் அணியப்பட்ட அல்குலினையுடைய திருமகளைப் போன்ற எம் தலைவியே! இம்மலையின் பக்கத்தில் உள்ள நம் தினைப் புனத்தை நாம் காத்திருந்தோம். அப்பொழுது வேட்டையாடுவதை மேற்கொண்டு, தாம் தப்ப விட்ட விலங்கு ஒன்றைத் தேடி வருவதைப் போன்று வந்தவர் நம்மிடம் வினவத் தொடங்கியது, விலங்கன்று வேறு ஒன்று உண்டு" என்று தலைவியின் கருத்தை அறிவதற்காகத் தோழி இவ்வாறு கூறினாள்.
வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) - ஆங்(கு) எனைத்தும் பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச் சேந்தனவாம் சேயரிக்கண் தாம். |
15 |
"நாங்கள் மலையிடத்துள்ள வேங்கை மரத்தில் மலர்ந்துள்ள நறுமணமிக்க மலர்களைக் கொய்தலால் மாந்தளிர் போன்ற எம் உடல் வியர்த்தது. அதனால் அம்மலையிடத்தேயுள்ள எல்லா அருவிகளிலும் புகுந்து நீராடினோம். ஆகவே மென்மையான சொற்களையுடைய தலைவிக்குச் செவ்வரி படர்ந்த கண்கள் சிவப்பாயின" என்று தோழி செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று சிறைப்புறத்திலுள்ள தலைவன் கேட்பக் கூறுகின்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, வேங்கை, இலக்கியங்கள், தோழி, ஐந்திணை, கீழ்க்கணக்கு, போன்று, ஐம்பது, கூறினாள், பதினெண், நாம், சங்க, தலைவன், வந்தவர், மாந்தளிர், தாம், தலைவியின், நாங்கள், தலைவியே, மென்மையான, இடம், காவல், மலைநாட்டுத், நாடன்