ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம் ஆர்ப்போ(டு) இனவண்(டு) இமிர்ந்தாட - நீர்த்தின்றி ஒன்றா(து) அலைக்கும் சிறுமாலை மாறுழந்து நின்றாக நின்றது நீர். |
27 |
மழையினை உடைய வாகைமரங்கள் பூத்து மணக்கவும் முல்லை நிலங்களின் எல்லாப் பாகங்களிலும் வண்டுக் கூட்டங்கள் ஆரவாரிப்புடனே ஒலித்துக் கொண்டு திரியவும் பெருந்தன்மை முதலிய நற்குணங்களில்லாமல் பகைத்து என்னை வருத்தும் சிறு பொழுதாகிய மாலைக்காலம் (எனக்கு) மாறாக முயன்று நிற்க (அதனாலே) கண்ணீரானது கண்களில் நிலையாகத் தங்கலாயிற்று. (என் செய்வேன் ! என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)
குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்! பின்னொடு நின்று பெயரும் படுமழைகொல என்னொடு பட்ட வகை. |
28 |
ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தோழியே ! ஆயன் - இடையன் மிகச் சிறந்த பெரிய பூமாலையினை அணிந்து வண்டினங்கள் (சூழ்ந்து) ஆரவாரிக்க (ஆனிரையோடு மனைக்கண்ணே) சேருகின்ற வேளையாகிய மாலைக்காலத்திலே என் பால் தோன்றிய (வருத்தமிக்க) இப்போக்கானது அவ்வாயன் பின்னாக (தோன்றி) நிலைபெற்று ஊர்ந்து வரும்படியான பெய்யும் மழையினாலே தோன்றியதோ? (என்று தலைமகள் தோழியினிடம் வினவினள்.)
3. பாலை
பொறிகிளர் சேவல் வரிமரல் குத்த நெறிதூர் அருஞ்சுரம்நரம் உன்னி - அறிவிட்(டு) அலர்மொழி சென்ற கொடியக நாட்ட வலனுயர்ந்து தோன்றும் மலை. |
29 |
தலைச் சூட்டான் விளங்காநின்ற காட்டுக் கோழியானது வரிகளையுடைய மருள் செடியினை கொத்துதலினாலே வழியானது தூர்ந்து போகும்படியான அரிய பாலைநில வழியின் கொடுமையினை நாம் உன்னி - நாம் நினைத்து வருந்துதலால் (ஏதிலார் நம்களவினை) அறிந்து கூறும்படியான பழிச்சொற்கள் மலையினிடத்தே நாட்டப் பெற்ற அக்கொடிச்சீலையினைப் போன்று பரவி வலமாகச் சுழன்று எழுந்து தோன்றாநிற்கும். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)
ஒல்லோம்என்(று) ஏங்கி உயங்கி இருப்பாளோ கல்லிவர் அத்தம் அரிபெய் சிலம்(பு)ஒலிப்பக் கொல்களி(று) அன்னான்பின் செல்லுங்கொல் என்பேதை மெல்விரல் சேப்ப நடந்து. |
30 |
என்மகள் கொல்கின்ற ஆண்யானையை யொத்தவனாகிய தலைமகனின் பின்னாக சிறுகற்கள் பெய்யப் பெற்றுள்ள காற்சிலம்புகள் ஓசையிடவும் மெல்லிய கால்விரல்கள் சிவக்கும்படியாகவும் கற்கள் மேலெழுந்து நிற்கும்படியான பாலை நிலவழியே நடத்தலைச் செய்து செல்வாளோ ? (அன்றி (இப்பாலை நிலவழியே) செல்லுதல் நம்மால் முடியாத காரியமென்று நினைத்து வருந்தி வாடி துன்புற்றுத் தங்குவளோ ? (யாதோ அறியேன் என்று நற்றாய் தனக்குட்டானே கூறிவருந்தினள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், எழுபது, ஐந்தினை, கீழ்க்கணக்கு, பதினெண், தலைமகள், உன்னி, நாம், பாலை, நிலவழியே, நினைத்து, தோழியிடங், சங்க, கூறினாள், ஆயன், பின்னாக