ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

அடும்பிவர் எக்கர் அலவன் வழங்கும் கொடுங்கழிச் சேர்ப்பன் அருளான் எனத்தெளிந்து கள்ள மனத்தான் அயல்நெறிச் செல்லுங்கொல் நல்வளை சோர நடந்து. |
66 |
அடப்பங்கொடிகள் மேலேறிப் படரும்படியான மணன் மேடுகளில் நண்டுகள் நடமாடும்படியான வளைந்து செல்லும் உப்பங் கழிகள் (சூழ்ந்த கடற்கரைத் தலைவன் (வரைவு நீடுதலின்) அன்புள்ளவனாகான் என்று அறிதலால் நல்ல வளையல்களையணிந்த நந்தலைமகள் துன்புறும்படியாக வஞ்சகனாகி மற்றொரு குலமகளையடையும் வழியிலே ஒழுகி தலைமகன் செல்வானோ ? (ஒருகாலுஞ் செல்லான்
கண்டதிரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப் பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன் நின்ற உணர்விலா தேன். |
67 |
கண்களிலுள்ள விழிகளைப்போல் திரட்சியுற்றிருக்கும்படியான முத்துக்களை கொடுக்கும்படியான பெரிய கடலினிடத்தே பொருள்களை ஏற்றுமதி செய்யும்படியான மரக்கலங்கள் வந்து போகும்படியான துறைமுகத் தலைவனை தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலையினிடத்தே (இன்று அரிதாகக்) காணப்பெற்றேன் (இவனைக் காணுதல் முன்பு இன்பந்தருமென உணர்ந்து) நிலைபெற்றிருந்த உணர்ச்சியானது (இப்பொழுது) இல்லாத யான் (புணர்ச்சி துன்பம் தரும்) என்று தெரியலானேன். (என்று தலைமகள் கூறினாள்.)
இவர்திரை நீக்கியிட்(டு) எக்கர் மணன்மேல் கவர்கால் அலவன் தனபெடை யோடு நிகரில் இருங்கழிச் சேர்ப்ப! என்தோழி படர்பசலை ஆயின்று தோள். |
68 |
கரைமேலேறி வருகின்ற அலைகளினாலே கடலினின்றுங் கொண்டுவந்து போடப்பட்ட மேடாகிய மணலிடத்தே இருபிரிவாக அமைந்துள்ள கால்களையுடைய ஆண் நண்டானது தன்னுடைய பெட்டை நண்டுகளுடனே ஓடிவிளையாடும்படியான ஒப்பற்ற பெரிய கடற்கால்வாய்களையுடைய கடற்கரைத் தலைவனே ! என் தோழி தோள் - என் தோழியாகிய தலைமகளின் தோள் (நின் பிரிவாலே) படரப்பெற்ற பசலைபூக்கப்பெற்று வருந்தாநின்றது. (நீ வந்து அப்பசலை நோயை நீக்குவாயாக
69, 70 இரண்டு பாடல்களும் மறைந்தன. |
அறுபத்தொன்பதாவது, எழுபதாவது செய்யுள் பழைய ஏட்டுப் பிரதிகளின் சிதைவாற் காணப் பெறவில்லை.
ஐந்திணை எழுபது முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், எழுபது, ஐந்தினை, தோள், கீழ்க்கணக்கு, பதினெண், பெரிய, வந்து, கடற்கரைத், எக்கர், சங்க, அலவன், வழங்கும், சூழ்ந்த