ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

பொரிபுற ஓமைப் புகர்படு நீழல் வரிநுகல் யானை பிடியோ(டு) உறங்கும் எரிமயங்கு கானம் செலவுரைப்ப நில்லா அரிமயங்கு உண்கண்ணுள் நீர். |
31 |
(எம்பெருமானே !) பொரிந்த மேற் பாகத்தைக் கொண்ட மாமரத்தினது அழகு பொருந்திய நிழலினிடத்தே நீளமான நெற்றியினையுடைய களிறானது பெண்யானையுடனே தூங்குதற்கு இடமாயதும் காட்டுத் தீயானது கலந்து காண்பதற்கு இடமாயதுமாகிய காட்டினிடத்தே (நீர் பொருள்வயிற் பிரிந்து) செல்லுதலை (தலைமகண்மாட்டு யான்) சொல்லுதலான் கரிய ரேகைகள் கலக்கப்பெற்று மைதீட்டப்பெற்ற (தலைமகளின்) கண்களில் கண்ணீரானது தங்காது வடியா நிற்கும். (என்று தலைமகனிடத்தில் தோழி கூறினாள்.)
எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத்தொடை அம்ஆ(று) அலைக்கும் சுரநிறைத்(து) அம்மா பெருந்தரு தாளாண்மைக்(கு) ஏற்க அரும்பொருள் ஆகும்அவர் காதல் அவா. |
32 |
பெருமையினையும் தகுதியினையுமுடைய ஊக்கத்தினுக்கு பொருத்தமாக அருமையான பொருளாக (விருப்பமிகுதியால்) மாறிடுந் தலைவரின் மிக்க விருப்பமானது பெயர்கள் முதலிய குறிக்கப்பெற்ற நடு கற்கள் வரிசையாக நடுவதற்கு காரணமாகிய சிறப்பாக அம்பு தொடுக்குந்தொடையாலே பழைமையாகிய தம் பகைவர்களை (மறவர்கள்) வருத்தற்கு இடமாகிய பாலை நிலவழியிலே ஒழுங்காகச் செல்லுதலையுடையது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
வில்லுழுது உண்பார் கடுகி அதரலைக்கும் கல்சூழ் பதுக்கையார் அத்தத்தில் பாரார்கொல் மெல்லியல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்(கு)இவர்ந்து நில்லாத வுள்ளத் தவர். |
33 |
மெல்லிய தன்மையாகிய இரக்கமாகிய பண்பு இல்லாமல் பொருள் தேடுதற்கண் விருப்புற்று நம்மிடத்திலே நிலை பெறாத நெஞ்சினைக்கொண்ட தலைவர் வில்லினாலே முயன்று போர் புரிந்து (அதனால் வரும் பொருளைக் கொண்டு) உண்டு பிழைக்கும் மறவர்கள் விரைந்து வழிச் செல்வாரை வருத்திக் கொள்ளையடிக்கும் படியான கற்கள் சூழ்ந்துள்ள சிறு தூறுகள் நிறைந்த பாலை நிலவழியின் கொடுமையினை நினைத்துப் பார்க்க மாட்டாரா? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)
நீரல் அருஞ்சுரைத்(து) ஆமான் இனம்வழங்கும் ஆரிடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய்! நாணினை நீக்கி உயிரோ(டு) உடன்சென்று காணப் புணர்ப்பதுகொல் நெஞ்சு. |
34 |
ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தோழியே ! என் மனமானது வெட்கத்தினை துறந்து (சாதலில்லா) உயிரினோடு கூடிப்போய் தலைவரினைப் பார்க்க. புணர்ப்பது - விரும்புவதாயுளது உண்ணுதற்கும் நீர் கிடைக்காத அரிய பாலை நிலத்தின்கண்ணே காட்டுப் பசுக்களின் கூட்டமானது (நீரின்றித் தியங்கித்) திரியும் அரிய இடத்தையுடைய வழியின்கண்ணே கடந்து செல்வாரோ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)
பீரிவர் கூரை மறுமனைச் சேர்ந்(து) அல்கிக் கூருகிர் எண்கின் இருங்கினை கண்படுக்கும் நீரில் அருஞ்சுரம் உன்னி அறியார்கொல் ஈரமில் நெஞ்சில் அவர். |
35 |
நம்மீது இரக்கமென்பதைக் கொள்ளாத மனத்தைக் கொண்டவராகிய நந்தலைவர் பீர்க்கங் கொடிகள் மேலேறிப் படர்ந்துள்ள மேற்பாகத்தினுடைய பாழ் வீடுகளில் கூர்மையான நகங்களையுடைய கரடியினது பெரிய கூட்டம் கூடி ஒருங்கி உறங்கும்படியான வறண்ட அரிய பாலை நிலத்தின் கொடுமையினை நினைத்துப் பார்த்து (தன் செலவு வேண்டா வொன்றென) தெரியமாட்டாரா ? (என்று தலைமகள் தோழியிடம் வினவினாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், பாலை, ஐந்தினை, தலைமகள், நீர், கீழ்க்கணக்கு, அரிய, எழுபது, பதினெண், பார்க்க, தோழியை, நினைத்துப், வினவினள், கற்கள், சங்க, தோழி, கூறினாள், மறவர்கள், கொடுமையினை