ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு
காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன் கார்கொடி முல்லை எயிறீனக் - காரோ(டு) உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின் மடம்பட்டு வாழ்கிற்பார் இல். |
21 |
(ப-ரை.) எம்மழகு சுருங்க எம்மை நீங்கினாரும் வருவதற்கு முன்னே கருங்கொடியையுடையமுல்லைகள் நல்லார் எயிறு போல அரும்பக் காரோடு உடனே யுளதாய் வந்து எம்மை நலிகின்ற மாலைக்கு எம்மைப்போல வலியிழந்து மெலிவாற்றி யிருந்து உயிர்வாழ்வார் இல்லை.
கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக் கன்றமர் ஆயம் புகுதா - இன்று வழங்கிய வந்தன்று மாலையாம் காண முழங்கிவில் கோலிற்று வான். |
22 |
(ப-ரை.) கொன்றை யென்னாநின்ற குழலூதிக் கோவலர் பின்னே நிரைத்து நிற்க, கன்றை விரும்பிய நிரையாயங்கள் ஊர்தோறும் புக, இவ்விடத்தின்கண் வழங்கவேண்டி வந்தது மாலை ; யாம் இறந்துபடாதிருந்து காணும்படி முழங்கி வில்லைக் கோலிற்று மழை.
தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்ப ஆர்கலி வானம் பெயல்தொடங்கிக் - கார்கொள இன்(று)ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர் ஒன்றாலும் நில்லா வளை. |
23 |
(ப-ரை.) ஒசையையுடைய முகில்கள் பெயலைத் தொடங்கிக் கார்ப்பருவத்தைக் கொள்ள, நம் காதலர் தேரை போன்ற தழங்கு குரலையுடைய குதிரைத் தார்மணிகள் வாயதிர்ப்ப, இன்று நாம் ஆற்றியுளமாம் வகை வாராது விடுவார்கொல்லோ ? தோழி ! நம் வளை யாதும் நிற்கின்றது இல்லையால்.
கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை முல்லை தளவொடு போதவிழ - எல்லி அலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண் முலைவற்று விட்டன்று நீர். |
24 |
(ப-ரை.) கல்லெழுந்து கிடந்த கானத்தின்கண் அழகு பெற்றுப் புதல்கண்மிசை முல்லைகளும் செம்முல்லைகளும் பூக்கண்மலர, இரவின்கண் முகிலும் அலைவற்று விட்டன நீரினை ; மையுண் கண்களும் முலைகண்மிசை வடித்தன நீரினை.
25, 26 - இரண்டு பாடல்கள் மறைந்தவை |
இருபத்தைந்தாவது, இருபத்தாறாவது செய்யுள் பழம் பிரதிகளில் காணப்பெறாவாய் மறைந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், ஐந்தினை, கீழ்க்கணக்கு, எழுபது, பதினெண், காதலர், வாயதிர்ப்ப, நீரினை, கோலிற்று, விட்டன்று, எம்மை, சங்க, முல்லை, குழலூதிக், கோவலர், இன்று