ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள் ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள் தேன்கலந்து வந்த அருவி முடைந்தாடத் தாம்சிவப் புற்றன கண். |
6 |
(ப-ரை.) வெகுள வேண்டா அன்னாய்! குற்றமிலள் இவள் ; மிக்க சிவந்தநீர் தாழ்ந்தோடுங் கான்யாற்றுள் தேனோடுங் கலந்து வந்த அருவிநீரைக் குடைந்தாடுதலான் இவள் கண்கள்தாஞ் சிவப்புற்றன : ஆதலான்.
வெறிகமழ் தண்சுனைத் தண்ணீர் துளும்பக் கறிவளர் தேமா நறுங்கணி வீழும் வெறிகமழ் தண்சோலை நாட! ஒன்(று) உண்டோ அறிவின்கண் நின்ற மடம். |
7 |
(ப-ரை.) விரை கமழாநின்ற குளிர்ந்த சுனையின்கண் தெளிந்த நீர் துளும்ப மிளகு படர்ந்து வளராநின்ற இனியமாவினது நறுவிய கனிவீழும் வெறிகமழ் தண்சோலை நாடனே ! நின் அறிவின்கண் நின்றதொரு பேதமையுண்டோ?
கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள் வாழை முதுகாய் கடுவன் புதைத்தயரும் தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழி நேர்வனை நெஞ்(சு) ஊன்று கோல். |
8 |
(ப-ரை.) பன்றிகள் கொம்பினால் உழுத சுட்டுக்கரிந்த புனக்கொல்லையுள் வாழையின் முதிர்ந்தகாயைக் குரங்கினுட் கடுவன்கள் அப்புழுதியிற் புதைத்தயருந் தாழ்ந்த அருவிகளையுடைய நாடன் என்றொழியாகிய நேர்வளைக்கு அக்காலத்து நெஞ்சூன்று கோலாகத் தெள்ளிய வஞ்சினங் கூறினான்.
பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக் கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும் சுரும்(பு)இமிர் சோலை மலைநாடன் கேண்மை பொருந்தினார்க்கு |ஏமாப்(பு) உடைத்து. |
9 |
(ப-ரை.) பெருங்கையையுடைய இருங்களிறு ஐவன நெல்லைத் தின்று, கருங்காலையுடைய மராம்பொழிலிற் பச்சிலைநிழலிற் றுயிலும் வண்டுகள் ஒலிக்கும் சோலைமலை நாடன் கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப்புடைத்து.
குறையொன்(று) உடையேன்மன் தோழி நிறையில்லா மன்னுயிர்க்(கு) ஏமம் செயல்வேண்டும் இன்னே அராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில் இராவாரல் என்ப(து) உரை. |
10 |
(ப-ரை.) நின்னான் ஒரு காரியமுடையேன், தோழி ! நிலையில்லாத என் மன்னுயிர்க்கு அரணஞ் செய்யவேண்டும் ; இப்பொழுதே பாம்புகளான் வழங்கப்படுகின்ற நீண்ட சோலையையுடைய நாடனை நம்மனையின்கண் இரா வரவேண்டா என்பதனைச் சொல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், ஐந்தினை, நாடன், வெறிகமழ், எழுபது, பதினெண், கீழ்க்கணக்கு, கேண்மை, இருங்களிறு, தோழி, நாடனை, பொருந்தினார்க்கு, அறிவின்கண், வந்த, கான்யாற்றுள், இவள், தண்சோலை, சங்க, உழுத