ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித் தண்ணந் துறைவனோ தன்இலன் ஆயிழாய்! வண்ணகைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப் பண்ணமைத் தேர்மேல் வரும். |
61 |
ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தலைவியே ! கண்களின் தன்மையினைக் கொண்ட நெய்தற் பூக்கள் மணக்கும்படியான வளைந்து செல்லும்படியான கடற் கால்வாய்களையுடைய குளிர்ந்த அழகிய துறை முகத்துக்குரிய தலைமகனோ தனது பழைய போக்கினை மேற்கொண்டிராதவனாய் அழகினையுடைய அவன் கைகளில் நாம் அகப்பட்டுக் கொண்டதனை தனது ஆண்மையின்பாற்பட்ட செய்தி என்று எண்ணிஇறுமாப்புற்று ஒழுங்காக அமைக்கப்பட்ட தேரின்கண்ணே அமர்ந்து (வரைதலை எண்ணாது) வாராநின்றனன். (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)
எறிசுறாக் குப்பை இனங்கலக்கத் தாக்கும் ஏறிதிரைச் சேர்ப்பன் கொடுமை - யறியாகொல் கானகம் நண்ணி அருள்அற் றிடக்கண்டும் கானலுள் வாழும் குருகு. |
62 |
(யாங் களவுப் புணர்ச்சியிற் கண்டு கூடிய) கடற்கரைச் சோலையினிடத்தே தங்கியிருக்கும் நாரைகள் துள்ளி விளையாடும் சுறாமீன் தொகுதியாகிய கூட்டமானது கலந்து சிதறும்படியாக மோதும்படியான வீசுகின்ற அலைகளையுடைய கடற்கரைத் தலைமகனின் (பிரியேன் என்று கூறிப் பிரிந்த) தீமையினை காட்டு வழியிடத்தே பொருள் வேண்டிச் சென்று (என் மேலுள்ள மிகுந்த) அன்பானது இல்லாமல் காலநீட்டித்திட தெரிந்தும் தெரிந்துகொள்ளமாட்டாவோ ? (என்று தலைமகள் தனக்குட்டானே வினவி வருந்தினாள்.)
நுண்ஞான் வலையில் பரதவர் போத்தந்த பன்மீன் உணங்கல் கவரும் துறைவனைக் கண்ணினாற் காண அமையுங்கொல் என்தோழி! வண்ணந்தா என்கம் தொடுத்து. |
63 |
என்னுடைய தோழியாகிய தலைமகளே ! நுட்பமாகிய கயிறுகளாலே பின்னப்பட்ட வலையினாலே நெய்தல் நிலமக்கள் பிடித்துக் கொண்டுவந்த பலவித மீன்களாகிய கருவாட்டினை (புட்கள் சென்று) பற்றிச் செல்லுதற் கிடமாகிய கடற்றுறைமுகத்துக்குரிய தலைமகனை நம் கண்களால் காணும்படியாக நேருமோ ? (அங்ஙனங் காண நேருமாயின் (அவனை விடாது) பின்தொடர்ந்து (களவுப் புணர்ச்சியிற் கைக்கொண்ட) கன்னித் தன்மையாகிய அழகினை கொடுப்பாய் என்று நாம் கேட்போம். (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
சிறுமீன் கவுள்கொண்ட செந்தூவி நாராய் இறுமென் குரலநின் பிள்ளைகட்கே யாகி நெறிநீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற நெறியறிதி மீன்தபு நீ. |
64 |
சிறிய மீன்களே அலகிடையே வைத்துள்ள சிவந்த இறகுகளையுடைய நாரையே ! இறும் - வருந்துதலையுடைய மெல்லிய ஒலியினையுடைய உன்னுடைய குஞ்சுகளையே கருதி மீன்களைக் கொல்கின்ற (களவுக்காலத்திருந்து எம்மைக் கண்டு கொண்டுள்ள) நீ அலைந்து செல்லும் நீரினையுடைய பெரிய கடற்கால்வாய்களையுடைய கடற்கரைத்தலைவன் என்னைவிட்டுப் பிரிந்த முறையினை நன்கு தெரிவாய். (ஆகலின், நீயே எனக்குற்ற சான்றாகுவை, என்று தலைமகள் நாரையினை நோக்கி நலிந்து கூறினாள்.)
தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரைமாந்திப் பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணர்அன்றில்! தண்ணந் துறைவற்(கு) உரையாய் மடமொழி வண்ணம்தா என்று தொடுத்து. |
65 |
தெளிந்த நீரினைக் கொண்ட பெரிய கடற் கால்வாயிடத்திலே விரும்பிய வளவு மீன் முதலிய உணவுகளை உண்டு அருகிலுள்ள பனைமரத்தின்மீதே தங்கும்படியான வளைந்த வாயினையுடைய இணை பிரியாது அன்றிற் பறவையே ! மடமொழி - இளமையான மழலைச்சொற்களையுடைய தலைமகளின் (களவுப் புணர்ச்சியிற் கைக்கொண்ட) கன்னித் தன்மையாகிய அழகினை திருப்பிக் கொடுத்துவிடுவாய் என்று வேண்டிய மொழிகளையடுக்கி குளிர்ந்த அழகிய துறைமுகத்திற்குரிய தலைமகற்கு (சென்று) சொல்வாயாக. (என்று தோழி அன்றிற்பறவையிடம் கூறினாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, கூறினாள், இலக்கியங்கள், களவுப், புணர்ச்சியிற், சென்று, ஐந்தினை, தோழி, எழுபது, கீழ்க்கணக்கு, பதினெண், கைக்கொண்ட, தொடுத்து, தலைமகள், கொண்ட, கன்னித், தன்மையாகிய, மடமொழி, பெரிய, அழகினை, பிரிந்த, கண்டு, நாம், தனது, அழகிய, நெய்தல், சங்க, தண்ணந், கடற், சேர்ப்பன், குளிர்ந்த