ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
ஒல்லுவ, நல்ல உருவ, மேற் கண்ணினாய்! வல்லுவ நாடி, வகையினால், சொல்லின், கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்; அடையாத் தவத்தினால் வீடு. |
76 |
தம்மோ டொத்தவாய்த் திருத்தக்கவேல் போன்ற கண்ணையுடையாய்! வல்ல நூல்களை யாராய்ந்து திறம்படச் சொல்லுவேனாயிற் கொடையாற் போகமும் தவத்தினாற் றுறக்கமும், வேறுபடா தறிவோடு கூடிய மிக்க தவத்தினால் வீடும் பெறும்.
கருத்து: ஈகையால் இம்மை யின்பமும், தவத்தால் விண்ணுலக நுகர்ச்சியும், மெய்யுணர்வால் வீடுபேறு முண்டாமென்பது.
நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான், பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின் எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ், வல்லை வீடு ஆகும்; வகு! |
77 |
தேவர் கதி, நரகர் கதி, விலங்கு கதி, மக்கள் கதி யென்று நான்கு கதியினுமுள்ள துன்பமே, யத்துன்பந்தீர்த்தல் வேண்டுவான் பகுதிப்பட்ட கதிகளின் கூறுபிறழாம லாராய்ந்து நூல்வழியா னெல்லை காண்கின்ற முனிவரது தவத்தை முயல்வனாயின் மூன்றாம் பிறப்பின்கணாத லேழாம் பிறப்பின்கணாதல் விரைந்து வீடாகுமென்று வகுத்துச்சொல்லுக.
கருத்து: பிறவித் துன்பத்தை ஒழித்தற்கு விரும்புகின்றவன் மெய்யுணர்ந்து தவம் புரிதல் வேண்டும்.
தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி, வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார், கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; - வைத்து வழங்கி வாழ்வார். |
78 |
தாயை யிழந்த குழவியும், தலைவனையிழந்த பெண்டாட்டியும், வாயில்லாத மூங்கைகளும், வாணிகம் போய்ப் பொருளிழந்தாரும் ‘உண்ணுதற் காதாரமாய பொருளை யிழந்தாரும்' கண்ணில்லாதாரு மென்னு மிவர்கட்குப் பொருள் கொடுத்தார் மேலைக்கு வைத்து வழங்கி வாழ்வார்.
கருத்து: தாயில்லாத பிள்ளை முதலானவர்க்கு வேண்டுவன கொடுத்துதவல் வேண்டும்.
சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே, நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக் காட்ட, நட்டார்க்கு இயையின், தமக்கு இயைந்த கூறு, உடம்பு அட்டார்வாய்ப் பட்டது பண்பு. |
79 |
சாக்காடுங் கேடும் பகையும் துன்பமுமின்பமுஞ் சொல்லப்படுகின்ற நாட்டறை போக்குமென்று சொல்லப்பட்ட விவை நட்டோர்க்கு வருமாயின் மற்றொன்று நாவாடாது தமக்கியைந்த கூறுவுடம்பட்டார் கண்ணேயுள்ள குணம்.
கருத்து: பிறர்க்கு வருஞ் சாக்காடு முதலியவற்றைத் தமக்கு வந்தாற்போற் காணுமியல்பே, நல்லியல்பெனப்படுமென்க.
புலையாளர், புண்பட்டார், கண் கெட்டார், போக்கு இல் நிலையாளர், நீர்மை இழந்தார், தலையாளர்க்கு ஊண் கொடுத்து, ஊற்றாய் உதவினார் - மன்னராய்க் - காண் கொடுத்து வாழ்வார், கலந்து. |
80 |
தாழ்வை யுடையவர்களுக்கும், உடலிற் புண்பட்டவர்களுக்கும், நாடு சுற்றி வருவதில் நிலைகொண்டிருப்பவர்களுக்கும், மேன்மைத்தன்மை யிழந்தவர்களுக்கும், ஆதரவாய் உணவைக் கொடுத்துதவி செய்தவர்கள்; அரசர்களாய் அடுத்து ஏற்போர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து நண்பர் முதலியவருடன் கூடி இன்புற்று வாழ்வார்.
கருத்து: புலையாளர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தவர்கள், மறுமையில் மன்னராய் வாழ்வார்.
சிறப்புப் பாயிரம்
இல்லற நூல்; ஏற்ற துறவற நூல், ஏயுங்கால், சொல் அற நூல்; சோர்வு இன்றித் தொக்கு உரைத்து, நல்ல அணி மேதை ஆய், நல்ல வீட்டு நெறியும் கணிமேதை செய்தான், கலந்து. |
சிறந்த அழகாகிய அறிவை யுடையாளே! கணிமேதை என்னும் புலவர் இல்லற நூலும் ஞானமடைதற்குரிய துறவற நூலும் ஆகிய கடவுளாற் சொல்லப்பட்ட அறநூல்களின் பொருள்களையும் தளர்ச்சியின்றித் தொகுத்துக் கூறி ஏற்றவிடத்தில் வீடடைதற்குரிய ஞான வழியையும் உடன் கூட்டி அந்நூலை யியற்றி யருளினார்.
கருத்து: கணிமேதை. ‘ஏலாதி' யென்னும் உயர்ந்த அறநூலை இயற்றினான்.
ஏலாதி முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, வாழ்வார், இலக்கியங்கள், கொடுத்து, ஏலாதி, நூல், நல்ல, பதினெண், கீழ்க்கணக்கு, இழந்த, இழந்தார், கணிமேதை, தமக்கு, சாக்காடு, சொல்லப்பட்ட, இல்லற, நூலும், துறவற, செய்தவர்கள், கலந்து, புலையாளர், வாணிகம், வீடு, துன்பம், தவத்தினால், தவத்தால், சங்க, வேண்டுவான், தவம், வைத்து, பொருள், பிள்ளை, வேண்டும், வழங்கி