ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
அவா அறுக்கல் உற்றான் தளரான்; அவ் ஐந்தின் அவா அறுப்பின், ஆற்ற அமையும்; அவா அறான் - ஆகும் அவனாயின், ஐங் களிற்றின் ஆட்டுண்டு, போகும், புழையுள் புலந்து. |
11 |
மனத்தின்க ணவாவினை யறுப்பான் றொடங்கியவன் றனன்வா வின்றியே நிற்கும். பொறி புலனாகிய நிலங்களாலே மெய்ப்பொருள் மேம்படலென ஐவகைப்பட்ட பொருட்கட் செல்லு மவாவினை மிகவு மறுப்பவ னெல்லாக்குணங்களாலு மிக வமைவுடையனாமன்றி யவாவறா தொழியுமாயி னைம்பொறியென்னுங் களிற்றா லலைப்புண்டு நரகவாயிலுட்டுன்பமுற்றுச் செல்லும்.
கருத்து: அவா வறுத்தலாவது, ஐம்பொறி யடக்கமாகும்.
கொலைக் களம், வார் குத்து, சூது ஆடும் எல்லை, அலைக் களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம், முச் சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும், - இன்னவை நச்சாமை, நோக்காமை, நன்று. |
12 |
பொருது கொல்லுங் கொலைக்களமும் வார்குத்துமிடமும், சூதாடுமிடமும், தண்ட முதலாயினவற்றாலலைக்குஞ் சிறைக்களமும், போர் யானைகளைக் கொலை கற்பிப்பானுக்கு நிலையிடங்களும், யானை, தேர், குதிரையான மூன்று திறமுஞ் சாரிகையாக வோடு மோரிடத்துஞ் செல்லுதற் குடன் படாமையும் அவை சென்று நோக்காமையும் நல்வினையாம்.
கருத்து: கொலைக்களம் முதலியவற்றை நச்சாமையும் நோக்காமையும் நன்று.
விளையாமை, உண்ணாமை, ஆடாமை, ஆற்ற உளையாமை, உட்குடைத்தா வேறல், களையாமை, - நூல் பட்டு ஆர் பூங்கோதாய்! - நோக்கின், இவை ஆறும் பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு. |
13 |
உழவாற் பயிர் விளைக்காமையும், ஐம்பொறிகள் களிப்புற உண்ணாமையும், நீடாடாமையும், பிறர் சொன்ன கடுஞ் சொற்களுக்கு மிக உளையாமையும், உட்குடைய வருத்தங்களை வேறலும், மேற்கொண்ட சீலங்களை யரிதென்றுகளையாமையுமாகிய இவ்வாறும் துறவின்பாற்பட்டார் கொண்டொழுகு மொழுக்கங்கள், நூற்பட்டார் பூங்கோதாய்!
கருத்து: விளையாமை முதலியன துறவற வழிப்பட்டாரொழுகும் பண்புகளாம்.
பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயன செய்யான், சிறியார் இனம் சேரான், வையான், - கயல் இயல் உண் கண்ணாய்! - கருதுங்கால், என்றும் அயல, அயலவர் நூல். |
14 |
பொய்யுரையாது புலாலையுங் கள்ளையுமுண்டல் களைந்து தீவினைகளைச் செய்யாது சிறியாரினத்தைச் சேராது பிறர்க்கின்னாதன ஒருவன் சொல்லானாயினென்று மாராயுங்கா லவற்குப் பிறராய்ந்த நூலினறிவால் பயனில்லை கயலுண் கண்ணாய்!
கருத்து: பொய்யாமை முதலிய இயல்புகளை யுடையவன் அறிவு நூல்கள் ஆராய்ந்தவனை ஒப்பான்.
கண் போல்வார்க் காயாமை; கற்றார், இனம் சேர்தல்; பண் போல் கிளவியார்ப் பற்றாமை; பண் போலும் சொல்லார்க்கு அரு மறை சோராமை; சிறிது எனினும் இல்லார்க்கு இடர் தீர்த்தல், - நன்று. |
15 |
ஒருவன் றனக்குக் கண்போலு நட்டாரைக் காயாமையும், கற்றாரினஞ் சேர்தலும், அரிவையரை மிக அன்பு செய்யாமையும், அவர்க்கு மறை யுரையாமையும் வறியார்க்குச் சிறிதிடராயினும் தீர்த்தலுமாகிய வாறும் நல்ல குணம்,
கருத்து: கண்போல்வார்க் காயாமை முதலியன நல்லவாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், நன்று, கீழ்க்கணக்கு, பதினெண், ஏலாதி, பூங்கோதாய், முதலியன, கண்ணாய், காயாமை, ஒருவன், நூல், இனம், யானை, நூல்கள், சங்க, ஆற்ற, களம், நோக்காமையும், போர், விளையாமை