ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன்கண்மை, ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த காலம் அறிதல், கருதுங்கால், - தூதுவர்க்கு ஞாலம் அறிந்த புகழ். |
26 |
மாட்சிமைப் பட்டமைந்தாராய்ந்த மதியுடைமையும், தோற்றப் பொலிவுண்டாதலும், தறுகண்மையும், தன்னா லாளப்பட்டமைந்த கல்வியுடைமையும், சொல் வன்மையும், பொருந்தியமைந்த காலமறிதலுமென விவை யாராயுங்கால் தூதுவர்க் குலகறிந்த புகழாவது.
கருத்து: அறிவு அழகு முதலியன தூதுவர்க்கு இயல்பாவனவாம்.
அஃகு, நீ, செய்யல், எனஅறிந்து, ஆராய்ந்தும், வெஃகல், வெகுடலே, தீக் காட்சி, வெஃகுமான், கள்ளத்த அல்ல கருதின், இவை மூன்றும் உள்ளத்த ஆக உணர்! |
27 |
வெஃகுதலையஃகு வெகுடலை நீக்கு, தீக்காட்சியைக் கருதிச் செய்ய லென்றறிந்தா னொருவன் சொல்லி, நீடுநின் மனத்தின் கருதற்றொழிலாக வேண்டின் நினையாக்கள்ளத்தனவல்ல.
கருத்து: சினத்தல் முதலான செயல்களை ஒருவன் தீயவென்று அறிந்துஞ் செய்வனாயின், அவன் அவற்றை ஒரு செயல் முடிதற் பொருட்டுச் செய்கின்றானாதலால் நன்மையாம்.
மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்! - மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; - பொய்யே, குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும் மறலையின் வாயினவாம், மற்று. |
28 |
மையேர் தடங்கண் மயிலன்ன சாயலாய்! அறிவுடையார்தா மெய்யுரையே யுரைப்பார். பொய்யும், வடுச்சொல்லும், குறளையும், கடுஞ்சொல்லும், பயனில சொல்லுமென்று சொல்லப்பட்ட வைந்து மறலையின் வாயின்கண்ணே பிறக்கும்.
கருத்து: பெரியோர் வாய் நன்மொழிகளும், சிறியோர் வாய்த் தீச்சொற்களும் பிறக்கும்.
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா, கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை; அலை அளவி, மை என நீள் கண்ணாய்! - மறுதலைய இம் மூன்றும் மெய் அளவு ஆக விதி! |
29 |
தங்கட்குச் சொன்ன நிலையளவின்கண்ணே நின்ற நெடியவர்க ளுடன்படாத கொலையும், களவும், காமத்தீ வாழ்க்கையுமென்னு மூன்றும், இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமையும், களவு காணாமையும், காம வாழ்க்கைப்பாடாமையுமென்னு மிம்மூன்று முடம்பின்றொழிலாக அலைத்தலை மேவி மையென நீண்ட கண்ணாய் விதிப்பாயாக.
கருத்து: கொல்லாமை முதலியனவே நிலைபிறழாத சான்றோரொழுக்கங்களாம்.
மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப் பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால், - பூண்ட ஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன், கிரிதன், பௌநற்பவன், பேர். |
30 |
மாட்சிமைப்பட்ட வறிவுடையார், மாட்சிமைப்பட்ட தம் மறிவினாற் புதல்வரைப் பொருந்தியவகை யுரைக்குமிடத்து, தனக்குப் பிறந்தவ னுரதனென்றும், தன்னேவலாலாதல், தானிறந்ததற்பின்பு குருக்களாலாதல் தன் மனையாள் வயிற்றே பிறனொருவற்குப் பிறந்தவனைக் கேத்திரசனென்றும், தீவேட்டு மணம்புரியுமுன் தாய் வீட்டிற் பெற்ற பிள்ளையைக் கானீனனென்றும், மணம் புரிந்தபின் கணவன் வீட்டில் அவனுக்கொளித்துப் பிறனொருவனிடத்துப் பெற்ற பிள்ளையைக் கூடனென்றும், கணவனிறந்த பின்னர் வேறொருவனுக்குத் தான் மனையாளா யவனொடு பெற்ற பிள்ளைப் புநர்ப்பவனென்றும் கூறுப.
கருத்து: மக்கள் ஒளரதன் முதலாகப் பலவகைப்படுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், சொல், ஏலாதி, பதினெண், பெற்ற, மூன்றும், கீழ்க்கணக்கு, களவு, கண்ணாய், மாட்சிமைப்பட்ட, நின்ற, பிள்ளையைக், பிறக்கும், அமைந்த, தூதுவர்க்கு, சங்க, சாயலாய், மறலையின், பூண்டு