ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு

துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல், இறந்தார்க்கு இனிய இசைத்தல், இறந்தார், மறுதலை, சுற்றம், மதித்து ஓம்புவானேல், இறுதல் இல் வாழ்வே இனிது. |
16 |
மனைத் துறந்த வருந்தவரைச் சேர்ந்து, துறவார்க் கீதலைச்செய்து கல்வியில் மிக்கார்க் கினியவற்றை மருவிச் செய்து, தான் குடிப்பிறந்த வருந்தவரைச் சேர்ந்து, குடியு ளிறந்தாரையும், தனக்கின்னாதாரையு மதித்தவர்க்கு வேண்டுவன செய்வானாயி னிறுதலில் வாழ்வே துறவறத்தினுமினிது.
கருத்து: துறவற வொழுக்கத்தை இல்வாழ்க்கையினின்றே செய்யின், அவ்வில்வாழ்க்கை புறத்துறவினுஞ் சிறந்தது.
குடி ஓம்பல், வன்கண்மை, நூல் வன்மை, கூடம், மடி ஓம்பும், ஆற்றல் உடைமை, முடி ஓம்பி, நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் தேற்றானேல், தேறும் அமைச்சு. |
17 |
குடிகளைப் பாதுகாத்தலும், வன்கண்மையுடையவனாதலும், பல நூலுங் கற்ற வன்மையும், வஞ்சனையுடையனாதலும், சோம்பு தன்மாட்டு வாராமையும், பாதுகாக்கு மாற்றலுடைமையு மென்கின்ற வைந்து முடையனாய் முடியுடையரசனாலோம்பி விரும்பப்படு நாற்றமுஞ் சுவையுங் கேள்வியும் விரும்பி நல்லாரினத்தைச் சேர்தல் செய்யானாயி னவன் அரசர்க்கமைச்சனாகத் தேறப்படுவான்.
கருத்து: குடியோம்பல் முதலியன அமைச்சர்க்குரிய இயல்புகளாகும்.
போகம், பொருள் கேடு, மான் வேட்டம், பொல்லாக் கள், சோகம் படும் சூதே, சொல்வன்மை, சோகக் கடுங் கதத்துத் தண்டம், அடங்காமை, காப்பின், அடும் கதம் இல், ஏனை அரசு. |
18 |
மகளிரோடு நுகரும் போகமும், தான் தேடிய பொருளைப் பாதுகாவா தழித்துக் கொடுத்தலும், மான் வேட்டையாடுதலும், பொல்லாக் கள்ளினை நுகர்தலும், துன்பம் விளையப்படும் சூதாடுதலும், வன்சொற்சொல்லுதலும், துன்பத்தைச் செய்யும் மிக்க கோபத்தாற் பிறந்த தண்டஞ் செய்தலுமென்கிற இவ்வேழு முறா வின்ப வரசன் பகையரசரடுங் கோபமுளவாகான்.
கருத்து: போகம் முதலியவற்றிற் கருத்தீடுபடாத அரசனுக்குப் பகை யரசர்கள் ஏற்படார்.
கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் பொருள்மேல் செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும் மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை, - இறையில் பெரியாற்கு இவை. |
19 |
தானொன்றனைக் கொல்லான், பிறர் கொன்ற கொலையினை விரும்பான், பொய் சொல்லான், பிறர் மனையாண்மேற் செல்லான், கீழ்மக்களினஞ் சேர்தலை மாட்டான், பிறர் மறை கூறுமிடத்தின் செவி கொள்ளானாய், பிறரைத் தீச்சொற் சொல்லுமிடத்து மூங்கைபோலொழுகு முதன்மையிற் பெரியார்க் கிவ்வேழ் திறமுமாம்.
கருத்து: கொல்லாமை முதலியன பெருந்தன்மையுடையான்பாற் காணப்படும்.
மின் நேர் இடையார் சொல் தேறான், விழைவு ஓரான், கொன்னே வெகுளான், கொலை புரியான், - பொன்னே! - உறுப்பு அறுத்தன்ன கொடை உவப்பான், தன்னின் வெறுப்பு அறுத்தான், - விண்ணகத்தும் இல். |
20 |
பொன்னேயனையாய்! மின்போலு நேரிடையார் சொல்லைத் தேறாது, காமநுகர்ச்சியை நினையாது, பயனின்றியே மிக வெகுளாது, ஓருயிரைக் கொலைமேவாது, தன்னுறுப்பறுத்துக் கொடுப்பது போலுங் கொடையுவந்து, தன் மனத்திலுள்ள செருக்கையுறுமறுத்தான் விண்ணகத்து மிலன்.
கருத்து: மகளிரின் மழலையை நம்பாமை முதலியன உடையவன் தேவரினுஞ் சிறந்தா னென்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், பிறர், முதலியன, பதினெண், கீழ்க்கணக்கு, ஏலாதி, பொல்லாக், கொல்லான், கொலை, செல்லான், மான், புரியான், செவி, இனம், வாழ்வே, சங்க, வருந்தவரைச், சேர்ந்து, சேர்தல், தான், போகம்