ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே, பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை, வேய் அன்ன தோளாய்! - இவை உடையான் பல் உயிர்க்கும் தாய் அன்னன் என்னத் தகும். |
6 |
மூங்கிலையொத்த தோளையுடையவளே! புலன்வழி போகாது தன் மனதை நிறுத்தலுடைமையும், நற்குணமுடையனாதலும் ஈதலும் பொறுமையோடிருத்தலும், பொய்கூற விடாது தன்னை யடக்குதலும், ஊன் தின்னவிடாது தன்னையடக்குதலும் ஆகிய இவ்வாறும் பொருந்திய ஒருவன், பல உயிர்கட்கும் தாயினது அன்புபோலும் அன்பினையுடையவன் என்று யாவருஞ் சொல்லத்தகுந்தவன் ஆவன்.
கருத்து: நிறையுடைமை முதலியன உடையவன் பல்லுயிர்கட்கும் நன்மை செய்பவ னாவான்.
இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும் வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல், - முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும் விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து. |
7 |
மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது அடியையொத்து விளங்கும் கூரிய பல்லையுமுடையாய்! தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன்சொற் கூறலும், கலந்துறவாடலும், இருக்கையுதவலும், அறுசுவை யுண்டியளித்தலும் செய்து, கடுஞ்சொலொழித்து மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பானாயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.
கருத்து: விருந்தினனுக்கு இன்சொல் முதலிய வழங்கு வானுக்கு மறுமையில் இன்பமுண்டாம்.
உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்ந்து, மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல், - மற்று அவனை யாக்குமவர் யாக்கும், அணைந்து. |
8 |
ஒன்றினைப் பிறர் கொல்ல உடன்படாது, தானுங் கொல்லாது, பிணியால் வருந்தினார் நோயைத் தீர்த்து பேதைமையின்கட் படாதே, மாட்சிமைப்பட்டார் நூல்களின் மாட்சிமைப்பட்ட குணங்க டனக்குப் பெருகும்படி யாராயுமாயின், தானாராய்ந்தவற்றின்கணுள்புக் கொழுகுவனாயின், அவனை யணைந்தார்க்கு நெறியெல்லாங் கூடியாக்கும்.
கருத்து: நல்லாரோடு இணங்குவார்க்கும் அந் நல்லன உண்டாகும்.
கற்றாரைக் கற்றது உணரார் என மதியார், உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு உண்டி, உறையுள், உடுக்கை, இவை ஈந்தார் - பண்டிதராய் வாழ்வார், பயின்று. |
9 |
கற்றாரைக் கற்றிலரென்று மனதிற் கொள்ளாதே, உற்றாரையு முற்றாரென்று கொள்ளாதே, பொருளற்றார்க்குணவும், மருந்தும், உறையிடமும், உடுக்கையும் பயின்று கொடுத்தா ரறிவுடையாரென்று பிறரான் மதிக்கப்படுவர்.
கருத்து: பிறரெவரையும் தாழ்வென்று கருதாமல் அற்றார்க்கு வேண்டுவன உதவுவார், அறிவுடையராய்க் கருதப்படுவார்.
செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல் அமைச்சர், தொழிலும், அறியலம் - ஒன்று ஆற்ற எனைத்தும் அறியாமையான். |
10 |
கருத்து: நல்லோரும் வீழ்கின்றார், தீயோரும் வீழ்கின்றாரானமையின், இவற்றின் ஏது ஏதோ அறிகின்றிலமென்பது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, உடைமை, இலக்கியங்கள், செல்வமும், கேடும், ஏலாதி, அவனை, கீழ்க்கணக்கு, பதினெண், வெங், குடிகள், அவன், குடிகளது, கீழ்க், கோலான், நோக்கி, இடம், சங்க, கற்றாரைக், கொள்ளாதே, பயின்று, இன்சொல்