ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
நடப்பார்க்கு ஊண், நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண், கிடப்பார்க்கு ஊண், கேளிர்க்கு ஊண், கேடு இன்று உடல் சார்ந்த வானகத்தார்க்கு ஊணே, மறுதலையார்க்கு ஊண், அமைத்தான் - தான் அகத்தே வாழ்வான், தக. |
71 |
வழிபோய் வருந்தினார்க் கூணும், சுமையெடுத்து வருந்தினார்க் கூணும், நோய்கொண்டு கிடப்பார்க்கூணும், கேளாயினார்க் கூணும், இறந்துபோய வானகத்தார்க் கூணு மமைத்தவன்றா னின்பத்தோடு வாழ்வான் றகுதிபட்டு.
கருத்து: வழிநடப்பவர் முதலானவர்களுக்கு உணவு கொடுப்பவன் இம்மையில் நல்வாழ்வு பெறுவான்.
உணராமையால் குற்றம்; ஒத்தான் வினை ஆம்; உணரான் வினைப் பிறப்புச் செய்யும்; உணராத தொண்டு இருந் துன்பம் தொடரும்; பிறப்பினான் மண்டிலமும் ஆகும்; மதி. |
72 |
பேதைமையாற் காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றமுளவாம். கல்வியாற் சீலமுளவாம், அறிவிலாதான் செய்யும் வினைகள் பிறப்பினையாக்கும். பிறப்பினானுணராத தொண்டான் வரும் பெருந்துன்பந் தொடர்ந்து வரும், பின்னையும் பிறப்பாலே பஞ்ச பரிவத்தானமா மென்றவாறு. இதனுட் டுன்பமென்ப தொன்பது. அவ்வொன்பதாவன : உயிரும் உயிரில்லாதனவும், புண்ணியமும் பாவமுமுற்றுஞ் செறிப்புங் கட்டு முதிர்ப்பும் வீடுமென விவை.
கருத்து: அறியாமையாற் குற்றமும், நூலுணர்ச்சியால் நல்வினையும், அஃதின்மையாற் பிறப்பும், அப்பிறப்பால் துன்பமும், அதனான் மேன்மேலும் பிறவிச் சுழற்சியும் விளையுமென்பது. எனவே அறிவு நூல்களைப் பழுதறவோதி அறிவைப் பெருக்கிக் கொள்ளல் வேண்டுமென்பது கருத்து.
மனை வாழ்க்கை, மா தவம், என்று இரண்டும், மாண்ட வினை வாழ்க்கை ஆக விழைப; மனை வாழ்க்கை பற்றுதல்; இன்றி விடுதல், முன் சொல்லும்; மேல் பற்றுதல், பாத்து இல் தவம். |
73 |
மனை வாழ்க்கையு மாதவமென்று சொல்லப்பட்ட விரண்டு மாட்சிமைப்பட்ட நல்வினை வாழ்க்கையாக விரும்புவார்கள். அவற்றில் மனைவாழ்க்கையாவது பொருளின்மேற் பற்றுடையவனா யொழுகுதலாம். இதன்கண் முற்சொல்லிய மாதவமாவது பொருள்கண்மேற் பற்றுதலின்றி நீங்குதல். இனி யோகமாகிய பாத்திறவமாவ துலகி னுச்சிமேற் பற்றுதலாகிய வீட்டைத் தரும்.
கருத்து: பற்றுவைத் தொழுகும் மனைவாழ்க்கையும். பற்றின்றி யொழுகுந் தவ வாழ்க்கையும் அறிஞர்க்கு நல்வாழ்க்கைகளேயாம்.
இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும், நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால் கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு. |
74 |
இடையினழகும், தோளினழகும், பெருமையினழகும், நடையினழகும், நாணுடைமையினான்வரு மழகும், புடையமைந்த கழுத்தினழகும் அழகல்ல, ஒருவர்க் கெண்ணு மெழுத்து மறிதலாகிய வழகே யழகு.
கருத்து: மக்கட்குக் கல்வியழகே உண்மையழகாம். ஓடு எண்; ஈண்டு எடுத்துக்காட்டப்பட்ட வனப்புக்கள் ஆண் பெண் இரு பாலார்க்கும் ஒத்திருத்தல் உணரற்பாலது. ஏகாரம் : தேற்றப்பொருளது.
அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி, மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின் மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே - ஆசாரியனது அமைவு. |
75 |
அறுசமயத்தார் நூலையு மறிந்ததனாலே கூரிய வுணர்வுடையனா யவற்றுட் குற்றமுடைய பொருள்களையு மறுதலைப்பட்ட பொருள்களையு நீக்கி மறித்துப் பிறத்தலில்லாத பெரிய சரிதையை யுடையனா யதன்மாட்டு மறுதலைச்சொல்வராமற் சொல்லுத லாசாரியனுக்கியல்பு.
கருத்து: சமய நூல்கள் பலவு முணர்ந்து, தவறு நீக்கியொழுகும் ஒழுக்கமுடையனாய்த் தனக்கு மாறாவார் கூறும் மறுப்புரைகளை மாற்றி நிறுத்தவல்ல ஆற்றலுடையவனே ஆசிரியனாவானென்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, வனப்பும், கருத்து, இலக்கியங்கள், கூணும், ஏலாதி, வாழ்க்கை, கீழ்க்கணக்கு, பதினெண், தவம், பற்றுதல், பொருள்களையு, நீக்கி, வனப்பு, வினை, நூல்கள், சங்க, வாழ்வான், வருந்தினார்க், செய்யும், வரும்