ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
(இன்னிசை வெண்பா)
நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல், தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம் அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம் எப் பெற்றியானும் படும். |
96 |
ஆக்கமுள்ள எறும்பும், தூக்கணம் பறவையும், காக்கையும் என்று சொல்லப்பட்ட இவைகளின் செய்கை போல நல்லனவாகிய தங் கருமத்தைச் சோராமற் கொண்டு, கிடையாத காலத்திற்கு உதவக்கிடைத்த காலத்தில் உணவிற்குரியவற்றைச் சேர்த்தலும், குளிர் காற்று முதலியவற்றால் இடையூறுஉறாதவகையாக இல்லம் இயற்றிக்கொள்ளுதலும், சுற்றத்தாரை விளித்துண்கையுமாகிய இக் கருமங்களைச் செய்பவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எத்தன்மையானுஞ் சிறப்புறும்.
கருத்துரை: எறும்பு, தூக்கணங் குருவி, காக்கை இவற்றின் செய்கையைக் கடைப்பிடித்தவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எவ்விதத்திலும் சிறக்கும்.
சான்றோர் முன் சொல்லும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி, பெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்- கண்ணுளே நோக்கி உரை! |
97 |
அறிஞர், பெரியார் முன் யாதேனும் ஒன்று உரைக்கவேண்டின், வணங்கி நின்றேனும் வாய்புதைத்து நின்றேனும் உரைப்பரேயன்றி, வேறு வகையின் உரையார்; ஆதலால் நீ அவர்முன் குற்றம் யாதும் உளவாகாமல் ஆராய்ந்து உரைப்பாயாக.
கருத்துரை: பெரியோரிடத்தி லொன்றைப் பேசும்பொழுது வணங்கி நின்றாவது வாய் பொத்தி நின்றாவது சொல்வதன்றி வேறுவிதமாகச் சொல்லலாகாது, அவர்முன் குற்றம் யாதும் உண்டாகாமல் ஆராய்ந்து கொள்க. ‘வழியவர்' என்றும் பாடம். உரை என்பதற்கு நீ தோன்றா எழுவாய்.
புகக் கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
சூதர் கழகம், அரவர் அறாக் களம், பேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல், ஏதம் பலவும் தரும். |
98 |
சூதாடுமிடத்தும், பாம்புகள் நீங்காதுறையும் இடத்தும், அறியாமையை யுடையரல்லார் புகார்; புகுவராயின் பல துன்பங்களும் உளவாம்.
கருத்துரை: சூதாடுமிடத்திலும் பாம்புகள் மிகுந்த இடத்திலும் அறிவுடையோர் செல்லார்.
அறிவினர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும், - நடுக்கு அற்ற காட்சியார் - நோக்கார், எடுத்து இசையார், இல்லம் புகாஅர்; விடல்! |
99 |
சோர்வற்ற அறிவை யுடையவர் ஆரவாரஞ் செய்யுமிடத்தும் மடைப்பள்ளியிலும் பெண்டிர்கள் உறையிடத்தும் நோக்கார், எடுத்துரையார், இல்லத்துட்புகார் : ஆதலால் நீ விடுக.
கருத்துரை: ஆரவாரஞ் செய்யுமிடத்தைப் பார்த்தலும், மடைப்பள்ளியில் எடுத்துரைத்தலும், பெண்டிர்கள் உறைகின்ற இடத்துப் புகுதலும் ஆகா.
ஒழுக்கத்தினின்று விலகியவர்
(பஃறொடை வெண்பா)
அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான், இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான், அரசர் தொழில் தலைவைத்தான், மணாளன், என்று ஒன்பதின்மர் கண்டீர் - உரைக்குங்கால் மெய்யான் ஆசாரம் வீடு பெற்றார். |
100 |
அறியாத தேசத்தான், வறியோன் மூத்தோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன், அரசர் தொழிலில் : தலைவைத்தவன், மணமகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மையா யுரைக்குமிடத்து ஆசாரமிலிகளாவர்.
கருத்துரை: அறியாத தேசத்தான் முதலிய ஒன்பதின்மருக்கும் ஆசாரக் கட்டுப்பாடில்லை.
சிறப்புப் பாயிரம்
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி, ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம் யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை ஆசாரக்கோவை எனத் தொகுத்தான் - தீராத் திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப் பெருவாயின் முள்ளி என்பான். |
ஆச்சாரக் கோவை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, வெண்பா, கருத்துரை, கோவை, ஆச்சாரக், இலக்கியங்கள், இன்னிசைச், யாதும், அறியாத, பெண்டிர்கள், ஆசாரம், சிந்தியல், கீழ்க்கணக்கு, பதினெண், எறும்பு, புகாஅர், நின்றாவது, ஆராய்ந்து, குற்றம், பாம்புகள், தேசத்தான், ஆரவாரஞ், நோக்கார், அவர்முன், அரசர், ஆதலால், முன், கருமம், ஒழுக்கம், இல்வாழ்க்கையின், காக்கை, வாய், நின்றேனும், வணங்கி, உரையார், சங்க, இல்லம்