ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

பழைமையோர் கண்ட முறைமை
(இன்னிசை வெண்பா)
உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்; உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார் ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; - என்பதே முந்தையோர் கண்ட முறை. |
11 |
ஒன்றனை யுடுத்தல்லது நீராடார், இரண்டுஉடுத்தன்றி ஒன்றுடுத்து உண்ணார், உடுத்த ஆடையை நீரின்கண்பிழியார், சீர்மை தக்கார் ஓராடையையுடுத்து அவையின்கண்செல்லார் என்று சொல்லப்படுவது பழமையோர் கண்டமுறைமை.
கருத்துரை: நீராடல் உண்ணல் அவை புகல் ஆகிய காலங்களில்உடையுடுத்த வேண்டிய முறையில் உடுத்துக.
செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்; பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு, குறை எனினும், கொள்ளார், இரந்து. |
12 |
தலையின்கண் தேய்த்த எண்ணெயால் யாதோர் உறுப்புந் தீண்டார், பிறர் உடுத்த அழுக்காடையும் தீண்டார், பிறர் தொட்ட செருப்பும், பிறர் இரந்து தமக்குக் காரியமென்று வேண்டிக் கொள்ளினுங் கொள்ளார்
கருத்துரை: தலையிற்றேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புக்களிற் பூசுதல், அடுத்தவராடையைத் தீண்டுதல் முதலியன செய்தலாகாது.
செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும், நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின், நீர் தொடார், நோக்கார், புலை. |
13 |
நீரின்கண் தம் நிழலை விரும்பி நோக்கார். நிலத்தை இருந்து கீறார், இரவின்கண் ஒரு மரத்தின் கண்ணும் சேரார், நோய் கொண்டு இடர்ப்பட்டாராயினும் நீரைத் தொடாதே எண்ணெய் உடம்பின்கண் தேயார், அவ்வெண்ணெயைத் தேய்த்தபின் தம் உடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது புலையைத் தம் கண்ணால் நோக்கார்.
கருத்துரை: தண்ணீரில் நிழல் பார்த்தல், சும்மா தரையைக் கீறுதல் முதலியன ஆகா.
நீராடும் முறை
(இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,- நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்; காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே, ஆய்ந்த அறிவினவர். |
14 |
ஒரு முறைப்பட்டார் நீராடும் போழ்தின் கண் ஒருநாளும் நீந்தார். நீரின்கண் உமியார், நீரைக் குடைந்து திளையார், விளையாடுவதுஞ் செய்யார். எண்ணெய் பெறாது தலை காயந்ததெனினும் தலையொழிய நீராடார் ஆய்ந்த அறிவினார்.
கருத்துரை: குள முதலியவற்றில் நீராடுங்காலத்து நீந்துதல் எச்சிலுமிழ்தல் முதலிய அருவருக்கத்தக்க செயல்களைச் செய்யலாகாது. கழுத்துவரை குளிக்கலாகாது.
உடலைப் போல் போற்றத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு, தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண் ஐம் பூதம் அன்றே கெடும். |
15 |
நிலம் முதலாயின ஐம்பூதங்களையும் பார்ப்பாரையும் பசுக்களையும் திங்களையும் ஞாயிற்றையும் தன் உடம்பு போலக் கருதிப் போற்றா திகழ்வானாயின் தன் உடம்பின்கண் உள்ள ஐந்து பூதத்தையு முடைய தெய்வங்கள் அன்றே கெட்டகன்றுபோம்.
கருத்துரை: பஞ்ச பூதம் முதலியவைகளை இகழ்வானாயின் ஒருவன் உடம்பின்கணுள்ள ஐந்துபூதத்தையுடைய தெய்வங்கள் அன்றே நீங்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, வெண்பா, உடுத்த, நோக்கார், பூதம், பிறர், தீண்டார், இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, எனினும், இன்னிசை, பதினெண், எண்ணெய், ஆச்சாரக், நீராடும், கோவை, நீர், அன்றே, உடுத்து, சேரார், தெய்வங்கள், கீறார், ஆய்ந்த, நீந்தார், உமியார், நிலம், உடம்பின்கண், நீரின்கண், நீரைத், திளையார், கொள்ளார், முறை, நீராடார், நீருள், உண்ணார், கண்ட, ஒன்று, சங்க, இன்னிசைச், இரந்து, முதலியன, எண்ணெயால், உரைத்த, சிந்தியல், நிழல்