ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
பழியாவன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தும், தாள் இசைப்பு, காட்டுளேயானும், பழித்தார் - மரம் தம்மின் மூத்த உள, ஆகலான். |
91 |
காட்டினிடத்திலேனும் தம்மினும் மூத்தன உளவா யிருப்பதனால், அங்கும் உடலின்மீது போர்த்தலும், இறுமாந்திருத்தலும், இரு தாளையுஞ்சேர்த்து இணைத்திருத்தலும் பழிக்கு ஏதுவாகும்.
கருத்துரை: காட்டிலும் உடலின்மீது போர்த்தலும், செருக்குற்றிருத்தலும் கூட, அட்டணைக்காலிட்டிருத்தலும் ஆகா.
அந்தணரின் சொல்லைக் கேட்க!
(நேரிசை வெண்பா)
தலைஇய நற் கருமம் செய்யுங்கால், என்றும், புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார்; தொலைவு இல்லா அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க - அவர் வாய்ச்சொல் என்றும் பிழைப்பது இல! |
92 |
அறிவுடையோர் மேலான நற்கருமங்களைச் செய்யுமிடத்து எப்போதும் புலையரிடத்து நாட்கேட்டுச் செய்யார். ஒழுக்கக் கேடில்லாத அந்தணரிடத்து நாட்கேட்டே நற்கருமஞ் செய்க; அவர் வாய்ச்சொல்என்றும் பிழைபடுவதில்லை ஆதலால்.
கருத்துரை: நற்கருமம் செய்பவர் ஒழுக்கங் குன்றாத அந்தணர்வாய் நாட் கேட்டுச் செய்தலே நன்மையானது.
சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மன்றத்து நின்று உஞற்றார்; மாசு திமிர்ந்து இயங்கார்; என்றும் கடுஞ் சொல் உரையார்; இருவராய் நின்றுழியும் செல்லார்; - விடல்! |
93 |
அறிஞர், சான்றோர் அவைக்களத்து யாதோர் அங்க சேட்டையுஞ் செய்யார், மாசுள்ளவற்றைத் திமிர்ந்து கொண்டு நடவார், எக்காலத்தும் கடுஞ்சொற்கள் உரையார், இருவராயிருந்து பேசுமிடத்தும் போகார், ஆதலால் இவற்றை ஒழிக.
கருத்துரை: பெரியோர் அவையில் யாதோர் அங்க சேட்டையுஞ் செய்தலாகாது; நடக்கும்பொழுது அழுக்கைத் தேய்த்து நடக்கலாகாது; கடுஞ்சொற் கூறலாகாது; இருவராகவிருந்து பேசுமிடத்திற்கும் போதலாகாது.
ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
(இன்னிசை வெண்பா)
கை சுட்டிக் கட்டுரையார்; கால்மேல் எழுத்து இடார், மெய் சுட்டி, இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்; கையில் குரவர் கொடுப்ப, இருந்து ஏலார்; - ஐயம் இல் காட்சியவர். |
94 |
ஐயமற்ற அறிவுடையோர் தங்குரவர் முன்கையைச் சுட்டிக்காட்டிப் பேசார், காலின்மேல் எழுதார், கல்வி முதலியவற்றை யுடையாரோடு அவற்றை இல்லாரை மெய்யெனச் சாதித்து ஒப்பிட்டுக் கூறார், குரவர் கொடுப்பதை உட்கார்ந்திருந்து ஏற்கார்.
கருத்துரை: பெரியோர்க்கு முன் கையைச் சுட்டிக்காட்டிப் பேசுதலும், காலால் எழுதுதலும், அறிவொழுக்கங்கள் இல்லாரை அவற்றையுடையார்க்கு ஒப்பாகச் சொல்லிச் சாதித்தலும், பெரியோர் கொடுப்பதை இருந்து வாங்குவதும் தகாத செயல்கள்.
பொன்னைப் போல் காக்கத் தக்கவை
(இன்னிசை வெண்பா)
தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும், பொன்னினைப்போல் போற்றிக் காத்து உய்க்க! உய்க்காக்கால், மன்னிய ஏதம் தரும். |
95 |
தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுகுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும்.
கருத்துரை: தன்னுடம்பு, தன்னுடைய மனைவி, அடைக்கலப் பொருள், தான் சேர்த்துவைத்த பொருள் இவற்றை அருமையாகப் பாதுகாக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, வெண்பா, கருத்துரை, இலக்கியங்கள், கேட்டுச், இல்லாரை, உரையார், ஆச்சாரக், செய்யார், என்றும், கீழ்க்கணக்கு, பதினெண், கோவை, வைத்த, இன்னிசை, பெரியோர், சேட்டையுஞ், இவற்றை, ஐயம், இருந்து, தரும், கொடுப்பதை, பொன்னைப், அங்க, சுட்டிக்காட்டிப், பொருள், பொருளும், குரவர், ஆதலால், உடலின்மீது, போர்த்தலும், சிந்தியல், இன்னிசைச், சங்க, கல்வி, நாள், அந்தணர்வாய், அவையில், திமிர்ந்து, சான்றோர், அறிவுடையோர், செய்க, அவர், யாதோர்