ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

உண்ணும்கலம்
(இன்னிசை வெண்பா)
முதியவரைப் பக்கத்து வையார்; விதி முறையால் உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து, அன்பின் திரியாமை, ஆசாரம் நீங்காமை, பண்பினால் நீக்கல், கலம்! |
26 |
தம்மின் மூத்தார் உண்ணும்பொழுது, அம்மூத்தாரைத் தம் பக்கத்து வைத்து உண்ணார், முறைமையான் உண்ணுங்கலங்கள் எல்லாவற்றுள்ளும் சிறிய கலங்களைக் கடைப்பிடித்துத் தனக்குக் கைக்கொண்டு காதல் பிறழாத வகையும், ஒழுக்கத்தின் நீங்காத வகையும் உண்டு, வரைவோடு கூட உண்டமைந்தால் உள்ள கலங்களை முறைப்படி நீக்குக.
கருத்துரை: தம்மின் முதியாரைத் தம் பக்கம் வைத்துண்ணாமலும் உண்கலங்களிற் சிறியவற்றைப்பற்றி அன்பும்ஒழுக்கமுங் குன்றாமலும் உண்டு பின் உண்கலங்களை நீக்குக.
உண்டபின் செய்ய வேண்டியவை
(பஃறொடை வெண்பா)
இழியாமை நன்கு உமிழ்ந்து, எச்சில் அற வாய் அடியோடு நன்கு துடைத்து, வடிவு உடைத்தா முக் கால் குடித்துத் துடைத்து, முகத்து உறுப்பு ஒத்த வகையால் விரல் உறுத்தி, வாய்பூசல் - மிக்கவர் கண்ட நெறி. |
27 |
வாயில் புக்க நீர் உட்புகாமை மிகவும் உமிழ்ந்து, எச்சில் அறும்படி வாயையும் அடியையும் மிகத் துடைத்து, அழகுடைத்தாக முக்காற் குடித்துத் துடைத்து, முகத்தின்கண் உள்ள உறுப்புக்களை அவற்றுக்குப் பொருந்தும் வகையால் விரல்களை உறுத்தி, அப்பெற்றியானே பூசும் பூச்சு நெறிமிக்கவர் கண்ட நெறி.
கருத்துரை: உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து, எச்சிலறச் சுத்தி செய்து முக்கால் குடிக்க.
நீர் குடிக்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால், கொள்ளார், கொடாஅர், குரவர்க்கு; இரு கை சொறியார், உடம்பு மடுத்து. |
28 |
இரு கையால் முகந்தும் ஏற்றும் தண்ணீர் குடியார், குரவர் கொடுப்பனவற்றை ஒரு கையால் வாங்கிக் கொள்ளார்; அவருக்குத் தாம் ஒரு கையால் கொடார், உடம்பினை மடுத்து இரு கையால் சொறியார்.
கருத்துரை: தண்ணீரை இரு கையாலுங் குடிக்கலாகாது. பெரியோரிடம் ஒன்றைப் பெறும்பொழுதும் ஒன்றைக் கொடுக்கும்பொழுதும் இரு கையாலேயே வாங்கல் கொடுக்கல் செய்யவேண்டும். உடம்பை இரு கைகளாலும் சொறியலாகாது.
மாலையில் செய்யக் கூடியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அந்திப் பொழுது, கிடவார், நடவாரே; உண்ணார், வெகுளார், விளக்கு இகழார்; முன் அந்தி அல்கு உண்டு அடங்கல் வழி. |
29 |
மாலைப்பொழுதின்கண் கிடத்தலும், வழி நடத்தலும் செய்யார்; ஒருவரைச் சீறுவதுஞ் செய்யார்; அந்திப் பொழுது விளக்கு இகழாது ஏற்றுவர்; மாலைப்பொழுதின்கண் உண்ணாது அல்கலின்கண் உண்டு, புறம்போகாது ஓரிடத்தின் கண்ணே அடங்குதல் நெறி.
கருத்துரை: மாலைப்பொழுதில் படுத்தல் வழிநடத்தல் செய்யாதும், உண்ணாமலும் எவரையும் சீறாதும், விளக்ககேற்றி இரவானது முண்டு அடங்கியிருத்தல் முறை.
உறங்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது, வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள் உடல் கொடுத்து, சேர்தல் வழி. |
30 |
கிடக்கும்பொழுது தெய்வத்தைக் கைகூப்பித் தொழுது வடதிசையின்கண்ணும் கோணத்திசையின்கண்ணும் தலைவையாது, மேற்போர்ப்ப தொன்றினை உடம்பின் கண் கொடுத்துக் கிடத்தல் நெறி.
கருத்துரை: படுக்கும்பொழுது கடவுளைத் தொழுது, வடக்கும் கோணத்திசையும் தலைவையாது,போர்த்துப்படுத்தல் முறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, கையால், கருத்துரை, வெண்பா, உண்டு, முறை, நெறி, துடைத்து, இலக்கியங்கள், கோவை, ஆச்சாரக், நன்கு, சிந்தியல், கீழ்க்கணக்கு, இன்னிசைச், தொழுது, பதினெண், கொள்ளார், தண்ணீர், மடுத்து, மாலைப்பொழுதின்கண், செய்யார், தலைவையாது, விளக்கு, பொழுது, நீர், அந்திப், சொறியார், உறுத்தி, வகையும், உள்ள, உண்ணார், தம்மின், வையார், சிறிய, நீக்குக, சங்க, வகையால், பக்கத்து, குடித்துத், எச்சில், உண்டபின், உமிழ்ந்து, கண்ட