ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
யாவரும் கூறிய நெறி
(சவலை வெண்பா)
'அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன், நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத் தேவரைப் போலத் தொழுது எழுக!' என்பதே- யாவரும் கண்ட நெறி. |
16 |
அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவாவார். இவர்களைத் தேவரைப்போலத் தொழுதெழுக என்று சொல்லப்படுவது எல்லா நல்லாரும் உரைத்துச் சொல்லிய நெறி.
கருத்துரை: அரசன் முதலிய ஐங்குரவரையும் தேவரைப் போலத் தொழுது எழுக.
நல்லறிவாளர் செயல்
(இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார்; விரதம் குறையுடையார் தீர மறவார்; நிறையுவா மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்' என்பதே- நல் அறிவாளர் துணிவு. |
17 |
முன்பு கூறப்பட்ட குரவர்கள் சொல்லிய சொல்லைக் கடந்து ஒன்றினையுஞ் செய்யார், முடியாது கிடந்த குறை விரதமுடையார் மிகவதனை மறந்தொழுகார், மதி நிறைந்த உவாவின் கண் தம் பல் துடைப்பதும் செய்யார், அவ்வுவாவின் கண் மரங்களையுங் குறையார் என்று சொல்லப்படுவது நல்லறிவாளர் தொழில்.
கருத்துரை: குரவர் சொற்கடந்து செய்தல், நிறையுவாவில் பல் துடைத்தல், மரங்குறைத்தல் முதலியவற்றைச் செய்யார் நல்லறிவாளர்.
உணவு உண்ணும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து, உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார் உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக் கொண்டார் அரக்கர், குறித்து. |
18 |
குளித்துக் கால்கழுவி வாய்பூசி உண்ணுமிடம் மண்டலஞ் செய்து உண்டார் உண்டாராவர். இப்படிச் செய்யாமல் உண்டவர்கள் உண்டாரைப்போல வாய்பூசிப் போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொண்டார்.
கருத்துரை: உண்கலத்தினின்றும் உணவை யெடுத்துண்ணு முன் நீராடல் கால் கழுவல் முதலியன செய்துண்பதே, உண்பதாம்.
கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும் ஈரம் புலராமை எறற்க!' என்பதே- பேர் அறிவாளர் துணிவு. |
19 |
கால் கழுவி நீர் உலர்வதற்கு முன்னே உண்ணத் தொடங்குக, பாயலின் கண் கால் கழுவிய ஈரம் புலர்ந்தாலன்றி ஏறாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு.
கருத்துரை: கால் கழுவின ஈரங் காய்வதன் முன் உணவு கொள்க, கால் கழுவின ஈரங் காய்ந்தபின்னே பள்ளி ஏறுக.
உண்ணும் விதம்
(இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து, தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும் பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு, உண்க, உகாஅமை நன்கு! |
20 |
உண்ணும்போது நோக்கப்படும் திசை கீழ்த்திசையாகக் கண் பொருந்தி, தூங்காது புடைபெயராது நன்றாக இருந்து, எவ்விடத்தும் பிறிதொன்றினையும் நினையாது, நோக்காது, சொல்லாது, உண்கின்ற உணவினைத் தொழுது சிந்தாமல் உண்க.
கருத்துரை: உணவுட்கொள்வோன் கிழக்கு நோக்கி ஆடாமல் அசையாமல் உணவிலே கருத்துடையனா யுண்க. கிழக்கு மங்கலத் திசையாதலின் கிழக்கு நோக்கி எனப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, கால், வெண்பா, கருத்துரை, தொழுது, இலக்கியங்கள், செய்யார், நல்லறிவாளர், பதினெண், என்பதே, சொல்லப்படுவது, துணிவு, இன்னிசை, கோவை, நெறி, ஆச்சாரக், கீழ்க்கணக்கு, குரவர், கிழக்கு, ஈரம், அரக்கர், முன், கழுவிய, நீர், ஈரங், உண்க, நோக்கி, நன்கு, திசை, கொண்டார், கழுவின, குறையார், போலத், எழுக, தேவரைப், அரசன், சங்க, யாவரும், சொல்லிய, அறிவாளர், வாய்பூசி, உண்டார், கால்கழுவி, உண்ணும், உணவு, எடுத்துக்