ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை, இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே - என்றும் ஒழுக்கம் பிழையாதவர். |
21 |
விருந்தினரும் மிக மூத்தோரும் பசுக்களும் சிறைகளும் பிள்ளைகளும் என்று சொல்லப்பட்ட இவர்கட்கு உணவு கொடுத்தல்லது உண்ணார் என்றும் ஒழுக்கம் பிழையாதார்.
கருத்துரை: விருந்தினர் முதலியவர்கட்கு உணவு கொடாமல் தாம் முன்னர் உண்ணலாகாது.
பிற திசையும் நல்ல
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல; முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார், முகட்டு வழி கட்டில் பாடு. |
22 |
முன் சொன்ன கீழைத்திசையும், அக்கீழைத்திசைக்கு இடையூறு உளதாயின் பின்னை நோக்கி யுண்டற்கு மற்றைத்திசைகளும் நல்லவாம். உச்சிப்பொழு துண்டலை ஆமெனப் புகழ்ந்தார்கள். முகட்டினேர் கட்டிலிட்டுக் கிடக்கலாகாதென்று பழித்தார்கள் நல்லோர்.
கருத்துரை: கிழக்கு நோக்கி யிருந்துண்ண இயலாதாயின் வேறுதிசை நோக்கியிருந்து முண்ணலாம். வாயிற்படிக்கு நேர் கட்டிலிட்டுப் படுக்கலாகாது.
உண்ணக் கூடாத முறைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்; சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்; இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று! |
23 |
கிடந்துண்ணல் ஆகாது, நின்றுண்ணல் ஆகாது, வெள்ளிடையின் கண்ணிருந்து உண்ணல் ஆகாது, விரும்பி மிகவும் உண்ணல் ஆகாது, நெறியைக் கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு தின்னலும் ஆகாது.
கருத்துரை: படுத்தோ நின்றோ வெளியிடையிலிருந்தோ உண்ணலாகாது, கட்டின்மேலிருந்துந் தின்னலாகாது.
பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன் துவ்வார்; முன் எழார்; மிக்கு உறார்; ஊணின்கண் என் பெறினும் ஆற்ற வலம் இரார்; - தம்மின் பெரியார் தம்பால் இருந்தக்கால். |
24 |
தம்மிற் பெரியார் தம் பந்தியிலிருந்து, உண்ணுமிடத்து அப்பெரியார் உண்பதற்கு முன்னே தாம் உண்ணார், முந்துற எழுந்திரார், அவர்களை நெருங்கியிரார், உண்ணுமிடத்து மிக எல்லாச் செல்லமும் பெறுவதா யிருப்பினும் வலமிருந்து உண்ணற்க.
கருத்துரை: பெரியோர்களுட னிருந்துண்ணுங் காலத்து அவர்கட்கு முன் உண்ணலும் எழுதலும் முதலியன ஆகா. மிக்குறார் என்பது ‘மீக்கூறார் எனச் சொற்சிதைவாக்கி அதிகம் பேசார்' என்பதுமாம்.
கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப, மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக, துய்க்க, முறை வகையால், ஊண். |
25 |
கைக்குங் கறியெல்லாம் முடிவின்கண்ணாகவும், தித்திக்குங் கறியெல்லாம் முதலாகவும், ஒழிந்த சுவைகளுள்ள கறிகளெல்லாம் இடையாகவும் உண்க; புகழும் வகையான்.
கருத்துரை: உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும், கசப்பான கறிகளை இறுதியிலும் ஒழிந்த சுவைக்கறிகளை இடையிலும் உண்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, உண்ணார், வெண்பா, கருத்துரை, சிந்தியல், இன்னிசைச், ஆகாது, இலக்கியங்கள், முன், ஒழிந்த, கோவை, பதினெண், கீழ்க்கணக்கு, ஒழுக்கம், ஆச்சாரக், முறை, உண்ணும், உண்ணல், கறியெல்லாம், உண்க, கறிகளை, நின்று, வகையால், உண்ணுமிடத்து, பெரியார், உண்ணலாகாது, என்றும், விருந்தினர், பிழையாதவர், சங்க, உணவு, தாம், முகட்டு, நல்ல, திசையும், நோக்கி