ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

இடையில் செல்லாமை முதலியன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இரு தேவர், பார்ப்பார், இடை போகார்; தும்மினும், மிக்கார் வழுத்தின், தொழுது எழுக! ஒப்பார்க்கு உடன் செல்க, உள்ளம் உவந்து! |
31 |
இருதேவர் நடுவும் பார்ப்பார் பலர் நடுவும் ஊடறுத்துப்போகார்; தும்மினபொழுது மிக்கார் வழுத்தினால் தொழுதெழுக; தம்மோடொப்பார்க்கு வழிபோம் பொழுது உடனே நேர் செல்க, தம்முள்ளம் உவந்து.
கருத்துரை: இரண்டு தெய்வங்களுக்கும் பார்ப்பாருக்கும் இடையில் செல்லக்கூடாது. தும்மினபொழுது பெரியோர் வாழ்த்தினால் அவரைத் தொழுக. ஒத்த நண்பன் எதிர் வருவானானால் உடன் செல்க.
மலம், சிறுநீர் கழிக்கக் கூடாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)
புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம், தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும் சோரார்-உணர்வு உடையார். |
32 |
புல்லின் கண்ணும், விளைநிலத்தின்கண்ணும் ஆப்பியின்கண்ணும், சுடலையின்கண்ணும், வழியின்கண்ணும், தீர்த்தத்தின்கண்ணும். தேவர் கோட்டத்தின்கண்ணும். நிழலின்கண்ணும்; ஆநிரை நிற்கும் இடத்தின்கண்ணும் சாம்பலின்கண்ணும் என ஈரைந்தின்கண்ணும் உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் சோரார் உணர்வுடையார்.
கருத்துரை: புல் முளைத்திருக்குமிடம் வயலிடம் முதலிய இடங்களை யுமிழ்ந்தும் மலசலங் கழித்தும் அசுத்தம் செய்தலாகாது.
மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(குறள் வெண்பா)
பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்; பகல் பெய்யார், தீயினுள் நீர். |
33 |
பகல் தெற்கு நோக்கியும் இராவடக்கு நோக்கியும் இருந்து மூத்திர புரீடங்களைச் சேரார், பகற் பொழுதின்கண் தீயினுள் நீர் பெய்யார்.
கருத்துரை: மலசலங் கழிப்பவர் பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் இருந்து கழித்தலாகாது.
மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின், அந்தரத்து அல்லால், உமிவோடு இரு புலனும், இந்திர தானம் பெறினும், இகழாரே- 'தந்திரத்து வாழ்தும்!' என்பார். |
34 |
திசை பத்தினையும் மறைத்தாராக மனத்தாற் கருதிப் பத்துத் திசையின்கண்ணும் அன்றியிலே வேறோரிடத்தின்கண்ணே சோர்கின்றாராகக் கருதியல்லது உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் இந்திர பதவியைப் பெறுவதாயிருப்பினும் சோரார் நூன்முறையான் ஒழுகுதும் என்பார்.
கருத்துரை: திசை பத்தையும் மறைத்ததாகப் பாவித்து அந்தரத்திற் செய்வதாக நினைத்து எச்சி லுமிழ்தலும் மலசலங் கழித்தலும் செய்க.
வாய் அலம்ப ஆகாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)
நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்; வழி நிலை, நீருள்ளும் பூசார்; மனத்தால் வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால் பெய் பூச்சுச் சீராது எனின். |
35 |
நீரகத்தின் கண்ணின்றும் நடவாநின்றும் தம் வாயைப் பூசார், ஓடுநீர் பெற்றிலராயின் நிலை நீருள்ளும் அப்பெற்றி பூசார். அந்நீர் அருந்தும்போது பூசும்போதும் மனத்தான் வரையறுத்துக்கொண்டல்லது பூசார், அதுவுஞ் செய்வது கலத்தான் முகந்து சிலர் பெய்யப் பூச முடியாதாயின்.
கருத்துரை: தண்ணீரில் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் வாயலம்பாது ஒரு கலத்தில் மொண்டே வாயலம்ப வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, வெண்பா, கருத்துரை, பூசார், இலக்கியங்கள், நோக்கியும், நிலை, இன்னிசை, சிறுநீர், கீழ்க்கணக்கு, ஆச்சாரக், சோரார், தெற்கு, மலசலங், மூத்திர, கோவை, மலம், செல்க, பதினெண், பகல், வடக்கு, திசை, நோக்கார், நீருள்ளும், பெய்யார், இந்திர, பத்துத், இருந்து, நீர், தீயினுள், மனத்தால், என்பார், புலனும், மிக்கார், உடன், உவந்து, பார்ப்பார், தேவர், சங்க, இடையில், நடுவும், தும்மினபொழுது, புரீடங்களையும், கழிக்கும், நீரையும், உமிழ், இடங்கள், புல், முறை