பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

வருவாய் சிறிதுஎனினும், வைகலும் ஈண்டின், பெரு வாய்த்தாய் நிற்கும், பெரிதும்;-ஒருவாறு ஒளி ஈண்டி நின்றால், உலகம் விளக்கும்; துளி ஈண்டில், வெள்ளம் தரும். |
201 |
விண்மீன்கள் ஒன்றுகூடி நின்றால் ஒருவகையாக இருள் நீங்க உலகத்தினை விளங்கச்செய்யும் மழைத்துளிகளும் இடைவிடாது ஒன்றுசேரில் கடலைப்போல் மிகுந்த நீரைத் தரும். (அவைபோல) (ஒருவனுக்கு) பொருள் வருவாய் சிறிதாயினும் நாடோறும் சோர்வின்றிச் சிறிதாயினும் சேர்த்து வைப்பின் மிகவும் பெரிய அளவினை உடையதாக ஆகும்.
கருத்து: வருவாய் சுருங்கியதாயினும் நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்த்துவைத்தால் செல்வம் வளர்ந்து பெரிதாகும்.
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும், எள்ளாமை வேண்டும்;-இலங்கிழாய்!-தள்ளாது அழுங்கல் முது பதி அங்காடி மேயும் பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு. |
202 |
விளங்குகின்ற இழையினை உடையாய்! ஒலியினையுடைய பழைய நகரில் கடைத்தெருவின்கண் நடக்கமுடியாது நடந்து மேய்கின்ற பழைய கன்று வலிய எருதாதலும் உண்டு. (ஆதலால்) ஒருவனுக்கு முதலாக இருக்கின்ற பொருளது சிறுமையை அவனது ஊரின் கண் வாழ்பவரால் ஐயமின்றி அறிந்தோமாயினும் அவனைப் பொருளிலான்என்று இகழா தொழிதல் வேண்டும்.
கருத்து:பொருள் சிறிதுடையார் என்று யாரையும் இகழற்க.
களமர் பலராமனும் கள்ளம் படினும், வளம் மிக்கார் செல்வம் வருந்தா;-விளைநெல் அரிநீர் அணை திறக்கும் ஊர்!-அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? |
203 |
விளைந்த நெல்லை அறுக்கும் பொருட்டு உழவர்கள் நீர் வடிய வடிகாலைத் திறக்கும் மருதநிலத் தலைவனே! நரி நக்கியது காரணமாகக் கடல்நீர் வற்றுதலுண்டோ (இல்லை). (அதுபோல) ஏவல்செய்வார் பலராலும் களவு செய்யப்படினும் பொருள் வருவாய் மிகுதியும் உடையாரது செல்வம் குறைந்து வருந்துதலில்லை.
கருத்து: பொருள் வருவாய் மிக உடையார், களமர் களவு செய்ததால் செல்வம் குறைந்து வருந்தார்.
நாடு அறியபபட்ட பெருஞ் செல்வர், நல்கூர்ந்து வாடிய காலத்தும், வட்குபவோ?-வாடி, வலித்து, திரங்கி, கிடந்தேவிடினும், புலித் தலை நாய் மோத்தல் இல். |
204 |
உணவு பெறாமையால் வாட்டமுற்று நரம்புகள்வலித்து உடல் சுருக்கத்தையடைந்து முதுமையால் படுத்தே கிடப்பினும் அங்ஙனம் கிடைக்கும் புலியது தலையை நாய் சென்று மோந்துபார்த்தல்கூட இல்லை (ஆகையால்)நாடு அறியப்பட்ட பெரும் செல்வர் உலகத்தாரால்அறியப்பட்ட மிகுந்த செல்வத்தினை யுடையார் வறுமை யுற்று தளர்ந்தஇடத்தும் பிறருக்குத் தாழ்வாகத்தோன்றுவரோ? தோன்றார்.
கருத்து:பெருஞ்செல்வ முடையார் தம் செல்வம் சுருங்கியவிடத்தும்பிறருக்குத் தாழ்வாகத் தோன்றார்.
22. பொருளைப் பெறுதல்
தம் தம் பொருளும், தமர்கண் வளமையும், முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக!- அம் தண் அருவி மலை நாட!-சேண் நோக்கி, நந்து, நீர் கொண்டதே போன்று! |
205 |
அழகிய குளிர்ந்த அருவிகளை உடைய மலைநாடனே! கால நெடுமையை நோக்கி நத்தை நீரைத் தன்னிடத்தே பாதுகாத்துக்கொண்டதுபோல தத்தமது பொருளையும் தம் சுற்றத்தாரிடத்துள்ள செல்வத்தையும் முற்படவே ஆராய்ந்து பின்னாளில் உதவும் பொருட்டு பொருளினைச் சேமித்துக் காவல்செய்க.
கருத்து: பின்னாளில் உதவும் பொருட்டுப்பொருளினைச் சேமித்துக் காவல் செய்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, செல்வம், வருவாய், பொருள், இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, பதினெண், நானூறு, பழமொழி, களவு, நீர், நாடு, இல்லை, குறைந்து, தோன்றார், உதவும், சேமித்துக், பின்னாளில், நோக்கி, நாய், பொருட்டு, செல்வர், வேண்டும், மிகுந்த, நீரைத், தரும், நின்றால், சங்க, ஒருவனுக்கு, சிறிதாயினும், பழைய, களமர், உண்டு, கன்று, நாடோறும், திறக்கும்