பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார், வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?- புன் சொல் இடர்படுப்பது அல்லால், ஒருவனை இன் சொல் இடர்ப்படுப்பது இல். |
191 |
ஒருவனை வன்சொல் இடருட் படுத்துவதல்லது இனியசொல் இடருட் படுத்துவது இல்லை. (ஆகவே) இன்னாத சொல்லாலும் இனிய சொல்லாலும் வரும் பயனைக் குற்றமின்றி அறியவல்லார் வன்சொற் சொல்லி அதன் வழியே ஒழுகுபவராய் வாழ்ந்திருத்தலும்உண்டோ.
கருத்து: இனிய சொற்களைச் சொல்லுக.
மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும், பொய்ந் நீரர் ஆகிய பொருளை முடிப்பார்க்கும், எந் நீரர் ஆயினும் ஆக!-அவரவர் தம் நீரர் ஆதல் தலை. |
192 |
உண்மையான நீர்மையை உடையராகித் தமது குண மேம்பாடுகள் விரிந்து நிற்கக் காரியத்தின்கண் புகுகின்றவர்களுக்கும் பொய்ம்மையான நீர்மை உடையராகித் தாங் கருதிய பொருளை முடிப்பார்க்கும் அவர்கள் காரியம் முடிக்கும்பொருட்டு எந்த நீர்மை உடையராய் ஒழுகினும் ஒழுகுக ஏனையகாலங்களில் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய ஒழுக்கினராய்ஒழுகுதல் தலைசிறந்தது.
கருத்து: ஒவ்வொருவரும் தத்தமக்குரிய ஒழுக்கினை விடாராய் ஒழுகுதலே தலைசிறந்தது.
யாவரேயானும், இழந்த பொருள் உடையார், தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்;-பாவை படத் தோன்றும் நல்லாய்!-நெடு வேல் கெடுத்தான் குடத்துள்ளும் நாடிவிடும். |
193 |
சித்திரப் பாவையது தன்மை பொருந்தித் தோன்றும் நல்லாய்! நீண்ட வேலைத் தொலைத்தா னொருவன் குடத்துள்ளேயும் நாடுவான் (அதுபோல) கெடுத்ததொரு பொருளையுடையார் எத்தகைய சிறந்த அறிவினை யுடையவராயினும் முன்னிற்பார் தேவர்களேயானாலும் தமது பொருளைக்கைக்கொண்டாரெனத் தீமையாக நினைப்பர்.
கருத்து:பொருளினை இழந்தார் ஆராயாது ஐயுறுவராயின் அது நோக்கி அவரைவெறுக்காது பொறுத்தல் வேண்டும்.
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு, வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,- அயில் போலும் கண்ணாய்!-அடைந்தார்போல் காட்டி, மயில் போலும் கள்வர் உடைத்து. |
194 |
வேலினை ஒக்கும் கண்களை உடையாய்! பித்தரும் உறங்குகின்ற அரையாமத்தில் கதவு முதலியனவற்றைத் தகர்த்தல் செய்து அக்களவான் வரும் உணவினை உண்ணுதலே தொழிலாகக் கொண்டு ஞாயிறு எழுந்து வெயில் விரிந்த பொழுதின்கண் உறக்கம் நீங்கி வெளியே தோன்றினவர்களாகி எல்லார்க்கும் தாம் நட்டார் போன் றறிவித்து (நிற்கும்) மயிலைப் போன்ற கள்வர்களை உடைத்தாயிரா நின்றதுஇவ்வுலகம்.
கருத்து: வஞ்சக் கள்வரை மிக உடையது இவ்வுலக மாதலால் அவரை யறிந்து தம்மைப் பாதுகாக்கஎன்பதாம்.
செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும் நாடுக, தான் செய்த நுட்பத்தை!-கேளாதே ஓடுக, ஊர் ஓடுமாறு! |
195 |
தம்மை அடைக்கலமாக அடைந்தார் துன்புற்று அவலிக்குமாறு தீயவழியில் செல்லா தொழிக இருவகைப் பற்றினையும் நீத்தார் அறிவுறுத்திய நெறியின்கண் செல்லாது அதனைவிட்டு நில்லாதொழிக தான் ஆராய்ந்து அறிந்த நுண்ணிய பொருளை பலமுறையும் ஆராய்க உலகத்தார் செல்கின்ற நெறியின்கண்ணே யாரையும் வினவுதலின்றிச்செல்க.
கருத்து:(1)தம்மை அடைக்கலமாக அடைந்தாரைத் துன்புறுத்தலாகாது. (2) துறவிகள் அறிவுறுத்தியநெறியில் ஒழுகல் வேண்டும். (3) தான்கண்ட நுட்பத்தைப்பலகாலும் ஆராய்க. (4) உலகத்தோ டொத்து வாழ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், நீரர், பொருளை, சொல், நானூறு, பதினெண், பழமொழி, கீழ்க்கணக்கு, தோன்றும், தலைசிறந்தது, நல்லாய், வேண்டும், நீத்தார், தம்மை, அடைக்கலமாக, ஆராய்க, தான், தத்தமக்குரிய, போலும், செல்லாது, வெயில், முடிப்பார்க்கும், ஒருவனை, இடருட், சொல்லும், புன், சங்க, சொல்லாலும், இனிய, தமது, நீர்மை, உடையராகித், ஆயினும், வரும், ஒவ்வொருவரும்