பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால், சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;- கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!- இறந்தது பேர்த்து அறிவார் இல். |
206 |
ஒலிக்கின்ற நீரை உடைய உப்பங்கழிகள் அலைவீசுதற் கிடனாய கடற்கரைச் சோலையை உடைய அழகிய கடல் நாடனே! தமது கையினின்றும் போய பொருளை மீட்டுத்தர அறிவாரில்லையாதலால் தம்மிடத்துள்ள பொருளை தாம் காவல் செய்யின் அல்லது தமக்குச் சிறந்தார் எனவும் உறவினர் எனவும் கருதி நம்பலாகாதார் கையின்கண் ஒருகால் மறந்தும் வைத்தல் இலர் அறிவுடையார்.
கருத்து:ஒவ்வொருவரும் தந்தம் பொருளைத் தாமே பாதுகாத்தல் வேண்டும்.
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால், இமையாது காப்பினும் ஆகா; இமையோரும் அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையால், நல் காப்பின் தீச் சிறையே நன்று. |
207 |
தேவர்களும் முற்காலத்து பாதுகாத்தும் அமிர்தம் கருடனால் கொள்ளப்பட்டமையால் நன்றாகக் காவல் செய்தலினும் யாரும் நெருங்கமுடியாத தக்க இடத்தின்கண் வைத்துக் காவல் செய்தலே நல்லது. (ஆதலால்) பொருந்தாத விடத்து ஓர் அரிய பொருளை வைத்தால் கண்ணிமையாது காவல் செய்யினும் காவல் செய்ய முடியாதாம்.
கருத்து: பொருளை, யாரும் நெருங்கமுடியாத தக்க இடத்தின்கண் வைத்துக் காவல் செய்தல் வேண்டும்.
ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை, 'நோக்குமின்!' என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,- போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!- காக்கையைக் காப்பு இட்ட சோறு. |
208 |
வடிவாய் இல்லாத கடல் நீர்த்துளிகளைத் தூவுகின்ற கரையினைப் பொருகின்ற உப்பங்கழிகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே! ஒருவர் முயன்று வருந்தித் தேடிய ஒள்ளிய பொருளை காவல் செய்தலை இகழ்ந்து கீழ்மக்களிடத்து ஒப்புவித்தல் காக்கையைக் காவலாக வைத்த சோற்றினை ஒக்கும்.
கருத்து: காத்துத்தருமாறு கீழ்மக்களிடம் ஒப்புவித்த பொருளைப் பின்னர்ப் பெறுதல் அரிதாம்.
தொடி முன்கை நல்லாய்!-அத் தொக்க பொருளைக் குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல் வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!- மூரியைத் தீற்றிய புல். |
209 |
வளையல் பொருந்திய முன் கையையுடைய நல்லாய்! புதிதாக அலர்ந்த நெய்தலது நறுநாற்றம் கமழுகின்ற விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல்நாடனே! முயன்று வருந்திச் சேர்த்த அத்திரண்ட பொருளை நற்குடியிற் பிறந்த மகன் அல்லாதவனிடத்து வைத்தல் கிழவெருதை உண்பித்த புல்லோ டொக்கும்.
கருத்து: நற்குடிப் பிறவாரிடத்து வைத்த பொருள் பயன் படுதலில்லை.
முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து, பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன்னியல் மைத்தடங்கண் மாதராய் அஃதாதல், வெண்ணெய்மேல் வைத்து, மயில் கொள்ளுமாறு. |
210 |
இனிய இயல்பையுடைய மையுண்ட அகன்ற கண்களையுடைய மாதே! தான் எளிதாகக் கொள்ளக்கூடிய முன்னால் உள்ள பொருளை பெற்றுக் காவல் செய்தலின்றி விரும்பாது வெறுத்திருந்து எளிதாகக் கொள்ள முடியாத காலத்து அப்பொருளை தேடிக்கொள்ளுதல் அங்ஙனந் தேடிக் கோடல் வெண்ணெயை மேலே வைத்து அஃது உருகிக் கண்களை மறைத்தபின் மயிலைப் பிடிப்பதோ டொக்கும்.
கருத்து: எளிதாகக் கொள்ளக்கூடிய பொருளைக் கொள்ளாது அரிதாயவிடத்துப் பின்னர் அதனை வருந்திப் பெறுதல் மடமையாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, காவல், பொருளை, கருத்து, இலக்கியங்கள், பதினெண், கடல், வைத்தல், இகழ்ந்து, சேர்ப்ப, பழமொழி, நானூறு, எளிதாகக், தாம், கீழ்க்கணக்கு, உடைய, வைத்த, முயன்று, குளிர்ந்த, காக்கையைக், பெறுதல், பொருளைக், ஒருவர், அஃது, டொக்கும், வைத்து, நல்லாய், கொள்ளக்கூடிய, வைத்தால், நாடனே, எனவும், நீர், சிறந்தார், சங்க, வேண்டும், பொருள், தக்க, இடத்தின்கண், நெருங்கமுடியாத, யாரும், காலத்து, வைத்துக்