பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

21. பொருள்
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப் பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின், பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்?-வேல் குத்திற்கு ஆணியின் குத்தே வலிது. |
196 |
தன்னைத்தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்க காரியம் (அப்பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப்) பொருளினைக் கொடுப்பின் அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாவர் உளர் வேலாற் குத்துதலைவிட காணிப்பொருளால் குத்துவதே வலிமை யுடையதாம்.
கருத்து: பகைவரைப் பொருளாற் கோறலே சிறந்ததாதலின் பொருளினை மிகுதியுஞ்செய்க.
ஒல்லாது வின்றி, உடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!- கடலுள்ளும் காண்பவே, நன்கு. |
197 |
விளங்குகின்ற கடல் நாடனே! பொருள் உடையார்செய்யத்தொடங்கிய செயல்கள் முடியாதன இல்லாமல் நன்மையாகவே ஆராயப்பட்டு முடியும் பொருள் இல்லாதவர்களுக்கு அவர் தொடங்கிய காரியங்கள் துன்பமாகவே முடியும் கடல்தாண்டிச் சென்ற இடத்தின்கண்ணும் செய்யத் தொடங்கிய செயலின்கண் வெற்றியையே காண்பார்கள்.
கருத்து: பொருள் உடையார்க்கு முடியாத செயல்கள் யாண்டும்இலவாம்.
அருமையுடைய பொருள் உடையார், தங்கண் கருமம் உடையாரை நாடார்;-எருமைமேல் நாரை துயில் வதியும் ஊர!-குளம் தொட்டு, தேரை வழிச் சென்றார் இல். |
198 |
எருமையின்மீது நாரை தூங்குகின்ற மருதநிலத் தலைவனே குளத்தினைத் தோண்டி (அதனிடத்தில் உறைவதற்குத்) தேரை இருக்குமிடத்தைத் தேடிச் செல்வா ரிலர். (அதுபோல) பெறுதற் கருமையை உடைய பொருளினை உடையார். தங்கண் - தம்மிடம் காரியம் உடையவர்களை தேடுதலிலர்.
கருத்து: பொருளுடையாரிடம் கருமம் உடையார் தாமே தேடி வருவர்.
அருள் உடையாரும், மற்று அல்லாதவரும், பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;- பொரு படைக் கண்ணாய்!-அதுவே, திரு உடையார் பண்டம் இருவர் கொளல். |
199 |
போரிடுகின்ற வேல்போன்ற கண்ணை உடையாய்! அருளினை உடைய பெரியோர்களும் சிறியவர்களும் செல்வமுடையாரை புகழ்ந்து பேசாதார் இலர் (எல்லோரும் புகழ்வர்) அங்ஙனம் புகழ்தலே புண்ணிய முடையார் விற்கும் பொருளை இருவர்மாறுபட்டுக் கொள்ளுதலை ஒக்கும்.
கருத்து: பொருள் உடையாரை எல்லோரும் புகழ்வர்.
உடையதனைக் காப்பான் உடையான்; அதுவே உடையானைக் காப்பதூஉம் ஆகும்;-அடையின், புதற்குப் புலியும் வலியே; புலிக்குப் புதலும் வலியாய்விடும். |
200 |
சென்றடையுமாகில் காட்டிற்கு புலியும் பாதுகாவலாம் புலிக்கு காடும் பாதுகாவலாய் நிற்கும் (அதுபோல) தன்னிடத்திலுள்ள பொருளை இடையூறுபடாது காப்பாற்றுகின்றவனே பொருள் உடையா னெனப்படுவான் அப்பொருள் தானே தன்னையுடையானை இடையூறுஉறாமற் காப்பாற்றுகின்றதாகும்.
கருத்து: பொருளை ஒருவன் காப்பாற்றினால் அவனைப் பொருள்காப்பாற்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, பொருள், கருத்து, உடையார், இலக்கியங்கள், நானூறு, பழமொழி, பொருளை, கீழ்க்கணக்கு, பதினெண், அதுபோல, தேரை, நாரை, புகழ்வர், புலியும், உடையாரை, எல்லோரும், அதுவே, உடைய, செயல்கள், உளர், யாவர், கொடுப்பின், சங்க, காரியம், பொருளினை, தங்கண், தொடங்கிய, முடியும், கருமம்